இரவு! அமைதியான மாயை! நிசப்தத்தின் செய்கை! தனிமையின் தீவிரமும் இரவே! நோயின் மருந்தும் இரவே! ஆடி அலைக்கழித்து ஆண்டு அனுபவித்து நேரம் பற்றாமல் சுழலும் இப்புவியில் தினமும் இறந்து புதிதாக பிறந்து வர அவகாசம் கொடுப்பதும் இவ்விரவே!இரவிற்கு கருப்பு
என்றும் சாபமில்லை. சொல்லப்போனால் அது வரமே! ஆனால், இந்த இரவே சாபமாகி சூனியத்தில் சுழல்வது போலிருந்தது ப்ரித்விக்கு.ப்ரித்வி! முப்பதை தொடவிருக்கும் அவன் ஒரு குடும்பஸ்தன்.
நேரம் நள்ளிரவை தாண்டியிருந்தது. தன் நெஞ்சின் மீது கவிழ்ந்து படுத்திருந்த ஸ்ரீ ராமின் தலையை வருடி கொடுத்தான். கட்டிலின் மறு விளிம்பில் படுத்திருந்த சரண்யா சண்டையிட்ட களைப்பில் உறங்கியிருந்தாள். மனைவியை கண்டு பெருமூச்சு விட்டு தலையை இடவலமாக ஆட்டிக்கொண்டான்.
திருமணம் முடிந்த முதல் ஆறு மாதம் முன்வரை சண்டை என்று வந்ததே இல்லை. வந்தாலும் முனையிலே கிள்ளி எறிந்துவிடுவர். ஆனால், கடந்த ஆறு மாதம் அடிக்கடி சந்திப்பது சண்டை மட்டுமே! அதுவும் ஒரே காரணத்திற்காக.
"என்னால உங்க அப்பாவ பாத்துக்க முடியாது" இந்த பேச்சு வந்தால் அவன் கொதித்தெழுவான் அவளும் கிளம்பி விடுவாள். எல்லாவகையிலும் மனமறிந்து செயல்படும் மனைவி இதில் மட்டும் முரண்டு பிடிப்பது அவனுக்கு பிடிக்கவில்லை.
நேற்றிரவும் அப்படியே! உணவு மேஜையில் ஸ்ரீ ராம் அமர்ந்திருக்க, ப்ரித்வி உணவு ஊட்டிக்கொண்டிருந்தான் மகனுக்கு. அருகில் சரண்யா அமர்ந்து பேசிக்கொண்டே பார்த்து பார்த்து பரிமாறினாள்.
"ஸ்ரீகுட்டி நாளைக்கு தாத்தாவ அழைச்சிட்டு வரலாமா?" என்றான் குழந்தையிடம். ஆனால் கேள்வி என்னவோ தாய்க்குத்தான்.
அந்த குட்டிக்கு என்ன புரிந்ததோ! "ஐ தாத்தா தாத்தா கத கத" என சோற்றுவாயோடு கைத்தட்டி குதூகலித்தான். அதை கண்டு சரண்யா "என்ன எதுக்கு அவர்?" என்றாள் வெடுக்கென்று.