ஒரு மிகப்பெரிய நாடு. அதில் உள்ள பல மாநிலங்களில் ஒன்று, சுவையான உணவு தயாரிப்புக்கு பிரசித்தி பெற்ற மாநிலம். அந்த மாநிலத்தில் ஒரு பிரசித்தி பெற்ற உணவக குழுமத்தின் ( group of hotels) முதன்மை செயல் தலைவராக ஒரு செல்வந்தர் இருந்தார். அந்த குழுமம் தொடங்க காரணமானவரும் அவரேயாவார். அவர் முதன்முதலில் அவருடைய கிராமம் ஒன்றில் தொடங்கி பிறகு பல ஊர்களுக்கும் நகரத்துக்கும் கிளைவிட ஆரம்பித்தது. அவருக்கு இரண்டு குழந்தைகள். ஒரு ஆண் குழந்தை 👨, இரண்டாவது பெண் குழந்தை 👸. இருவரையும் நகரத்தில் உள்ள பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்தார். இருவரும் நன்றாக படித்தனர். பள்ளி படிப்பை முடித்தவுடன் இருவரும் கல்லூரியில் சேர்ந்தனர். பெண் 👸 பிள்ளையின் விருப்பப்பபடி அவரை கேட்டரிங் டெக்னாலஜியில் சேர்த்தார். ஆண் 👨 பிள்ளையை அவரது விருப்பப்படி வணிக மேலாண்மை படிக்க வைத்தார். இளநிலை கல்லூரிப்படிப்பு முடிந்தவுடன் பெண் பிள்ளை மேலும் படிக்க விருப்பமில்லை என்று கூறியதால் அவரை வீட்டில் இருந்துகொண்டு சமையல் கலையை கற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். அவரும் அவ்வாறே செய்யலானார். ஆனால் அந்த ஆண் பிள்ளையோ வெளிநாடு சென்று மேற்படிப்பு படிக்க விரும்பினார். அவரின் விருப்பப்படியே அவரை மேற்படிப்பு படிக்க வெளிநாடு அனுப்பினார். இந்த சமயத்தில் அவரது மகளை பெண் கேட்டு வெளிநாடுகளில் இருந்து வரன் வந்த்து. ஆனால் இவருக்கோ சற்று பயம் " இவளோ பெண் பிள்ளை! வெளி உலகம் தெரியாதவள். அங்கே சென்றால் அவள் அங்கு ஏற்படும் பிரச்சினைகளை எப்படி சமாளிப்பாள்?" என்ற பயத்துடன் தனது பக்கத்து நகரத்தில் உள்ள தனது மிக நெருங்கிய வணிக நண்பரின் மகனுக்கு திருமணம் நடத்தி வைக்கிறார். வெளிநாடு சென்ற தனது மகன் நாடு திரும்பியவுடன் அவருடன் சேர்ந்து வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள நினைத்தார். அவ்வாறே அவர் ஊர் திரும்பியவுடன் அவருடன் உலக நாடுகள் பலவற்றிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது ஒரு நட்சத்திர உணவகத்தில் இரவு உணவருந்தினார். அன்று இரவு அங்கேயே தங்கினார். அவருக்கு அன்று தனது உடலில் ஏதோ சிறு கோளாறு ஏற்பட்டது. உடனே இந்த விஷயம் தெரிந்தவுடன் அவரது மகன் அந்த நாட்டில் உள்ள பல்நோக்கு மருத்துவமனை ஒன்றிற்கு போன் செய்கிறார். அப்போது அந்த உணவக மேலாளர் இதற்கு இங்கே இலவசமாக வைத்தியம் பார்க்கப்படும் என்று கூறுகிறார். "இலவசம் என்று எதுவும் கிடையாது. எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு" என்ற முதலாளித்துவ சித்தாந்தத்தில் அவர் நம்பிக்கை கொண்டிருந்ததால் அவர் அந்த உதவியை ஏற்கவில்லை. மருத்துவமனை ஊழியர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். முதலுதவி பலனலிக்கவில்லை. அந்த செல்வந்தர் மயக்க நிலையிலேயே இருந்தார். உடனே அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு பலகட்ட சோதனைகள் அவரது உடம்பில் செய்யப்படுகின்றன. பல கோடி ரூபாய் செலவானது. நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் கண் விழித்தார். அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக பழைய நினைவுகள் வர ஆரம்பித்தன. அப்போது அவருக்கு பழைய நினைவு ஒன்று ஞாபகத்திற்கு வந்த்து. ஒரு முறை அவரது மகள், அவர் இந்த வெளிநாட்டு உணவகத்தில் உண்ட அதே உணவை வீட்டிலேயே சமைத்துக் கொடுத்தாள். அப்போது அவருக்கு இதே போல் ஏதோ ஒரு உடல் கோளாறு ஏற்பட்டது. உடனே அவரது மகள் அந்த உணவு தயாரிக்க பயன்படுத்திய மூலப்பொருட்களில் ஒரு சிலவற்றை தேர்ந்தெடுத்து அதில் ஒரு கஷாயம் வைத்து கொடுத்தாள். இவரது உடல் கோளாறும் உடனே சரியாகிவிட்டது. பிறகு அவரது மகள் " உணவே மருந்து. மருந்தே உணவு. உணவினால் ஏற்படும் கோளாறை சரி செய்ய அந்த உணவின் மூலப்பொருளிலேயே மருந்தும் கிடைக்கும்" என்று கூறியது அவரது நினைவுக்கு வந்த்து. இந்த சம்பவத்தை நினைத்துப்பார்த்த அவர் உடனே தனது மகனை அழைத்தார். தான் உடனே தாய்நாடு திரும்பவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவர் நாடு திரும்பியதும் தன் வசம் இருந்த அனைத்து உணவகங்களையும் தனது மகள் பெயருக்கு உயில் எழுதிவிட்டு அவளை அந்த உணவக்க் குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரியாக நியமிக்கிறார். தனது மகனை வெளிநாட்டில் தான் உணவு உட்கொண்ட அதே நட்சத்திர உணவகத்தில் மேலாளராக பணியில் அமர்த்த தனது நண்பர்கள் மூலம் ஏற்பாடு செய்கிறார். அன்று இரவு உறங்கச் செல்லும் முன் அவர் எழுதிய டைரிக் குறிப்பு : " நான் என் மகளைத்தான் வெளியுலகம் தெரியாமல் வளர்த்துவிட்டேன் என்று நினைத்தேன். ஆனால் இப்போது தான் எனக்குப் புரிகிறது, " என் மகனுக்குத்தான் வெளியுலகம் தெரியவில்லை என்ற உண்மை"....