உலகில் வாழும் மனிதர்க்கு எல்லாம் அடிப்படைத் தேவைகள் நாம் அனைவரும் அறிந்த மூன்றேதான். ஆனால் அதையும் தாண்டி ..... என்று அபர்ணா வாசித்துக் கொண்டிருந்த போது அவளையும் அறியாமல் புத்தகம் கீழே நழுவி விழுந்தது. விழுந்ததை எடுக்கவும் அவள் முயலவில்லை. மேலே வேகமாக சுழன்று கொண்டிருந்த மின் விசிறியைப் பார்த்தவாறு அவள் கண்கள் நிலைத்தது.
அதே வேகத்தில் அவள் எண்ண அலைகளும் அவளைப் பின்னோக்கி இழுத்தன. சிறு வயதில் செய்யாத தவற்றுக்கும் அடி வாங்கிய காலமது.
தம்பி கிரித்திஷ் அம்மாவின் செல்லப்பிள்ளை. எனவே அவன் செய்த தவறுக்கு இவள் சுமைதாங்கியானாள். சரி, தவறு என்று பார்த்து அடிக்கக்கூடிய மனநிலையில் அவள் அம்மா இல்லை.கணவனைக் கொரோனாவிற்குக் காவு கொடுத்ததால் கடைசி மகனை கண்ணிற்குள் வைத்து வளர்த்தாள். தன் பத்தாவது வயதில் தந்தையை இழந்ததால் அவனும் தடுமாறித் தான் போனான்.
தம்பியாவது தந்தையின் அன்பை மட்டுமே இழந்தான். ஆனால் அபர்ணாவோ தந்தையையும் அதே சமயத்தில் தாயின் அன்பையும் ஒரே நேரத்தில் இழந்தாள். குடும்பத்திற்கு வருமானம் சரியாக இல்லாததால் தாயின் சுமை அதிகரித்தது. எனவே இவளிடம் எரிந்து எரிந்து விழுந்தாள். ஆரம்பத்தில் கஷ்டமாயிருந்தாலும் போகப்போக அவளுக்குப் பழகிவிட்டது.தனக்குத் தேவையானவற்றைத் தானே செய்து கொள்ள பழகியிருந்தாள்.இப்போது அவள் இருபது வயதை எட்டியிருந்தாள்.
தம்பி பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான். அந்த நினைவுகளில் இருந்து விடுபட்டவள் திரும்பி சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தாள். மணி 11.45ஐக் காட்டியது. சன்னல் வழியே இரவு வானத்தைப் பார்த்தாள். நட்சத்திரங்கள் அவளை வரவேற்பன போல் கண்களைச் சிமிட்டின. அடுத்த அறையில் உறங்கும் அம்மாவையும் தம்பியையும் எட்டிப் பார்த்தாள்.துளியும் அசைவில்லை.
கதவைத் திறந்து வெளியே வந்தாள்.குளிர்ந்த காற்று உடலை வருடியது மனதுக்கு மிகவும் இதமாக இருந்தது. எங்கிருந்தோ நாயின் குரல் மெல்லியதாக கேட்டது.தெருவெல்லாம்,நிலவை இழந்த வானம் போல் வெறிச்சோடி காணப்பட்டது. பகலுக்கும் இரவுக்கும் பெரிய மாறுபாடு காணப்பட்டது. இந்த இரவுக்கும் மனித வாழ்க்கைக்கும் எவ்வளவு ஒற்றுமை. திடீரென்று பிரச்சினை வருகிறது திடீரென்று காணாமல் போய் விடுகிறது இந்த இரவு போல.

YOU ARE READING
விதியின் வீணை
General Fictionவிதியின் சதியால் வீழ்ந்தோர் பலர்.விதியின் வீணை நரம்புகளில் மனிதன் நடனம் ஆடுகிறான்.