ஜெயந்தி பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்தாள்.
கண்ணீர் மல்க அவள் கையை பிடித்தபடி, பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் ருத்ரா.
"சிசேரியன் பண்ணனுமா புவனா?" என்றான் அழுகையை அடக்கிக் கொண்டு.
"வேண்டா...ம்டா..." வலியோடு சொன்னாள் ஜெயந்தி.
டாக்டர் புவனா சொன்னாள், "நா இதுக்குதான் உன்ன இங்க இருக்க வேண்டாம் னு சொன்னேன், அவளும் இதையே தான் எங்கிட்ட சொன்னா. அவளே நார்மல் டெலிவரிக்கு முழு முயற்சி பண்ணனும் னு ஆரம்பத்துல இருந்து கஷ்டப்பட்டுகிட்டு இருக்கா. உன்னால பாக்க முடியலைன்னா நீ வெளியே போ, என்ன டென்ஷன் பண்ணாதே!"
பெரும் முயற்சிக்கு பிறகு, பையன் பிறந்தான். இரத்தத்தில் குளித்தபடி பிறந்த தன் சிசுவை கையில் வாங்கிய ருத்ரா அழுதான்.
ஒரு நர்ஸ் குழந்தையை வாங்கி சுத்தம் செய்வதையும், இன்னொரு நர்ஸ் ஜெயந்தியை சுத்தம் செய்வதையும் தன் காலடியில் சிந்தியிருந்த இரத்தத்தையும், சதை துணுக்குகளையும் மாறி மாறி பார்த்தபடியே அவள் கைகளை மென்மையாக பிடித்துக் கொண்டான்.
குழந்தையை ருத்ராவிடம் புவனா கொடுத்தபோது,
களைப்பு மேலிட, பாதி மயக்கத்தில் இருந்த ஜெயந்தியின் அருகே குழந்தையை வைத்து, அவள் கையையும் அவன் மீது எடுத்து வைத்தான்.
பாதி மயக்கத்திலும் குழந்தையை தட்டி சிரித்தாள்.
"நமக்கு இவன் மட்டுமே போதும்டி. நீ கஷ்டப்படுறத என்னால பாக்க முடியலை." என்றான் ருத்ரா.
"அந்த சிவன் மாதிரியே உனக்கும் ரெண்டு பசங்கள பெத்து கொடுக்கணும்..." என்ற படியே மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்தாள்.
"ஏன் புவனா, அவ பிடிவாதத்துக்கு நீயும் ஒத்துப்போற?"
புவனா சொன்னாள், "இது பிடிவாதம் இல்லை, என் மேலயும், தன் மேலயும், இயற்கை வழி பிரசவத்திலயும் அவள் வச்ச நம்பிக்கை. புரிஞ்சிக்கோ.
இந்த 2 மணிநேர கஷ்டத்துக்கு பயந்து, சிசேரியன் பண்ணிக்கறவங்க முட்டாள்கள்.
இன்னும் சரியா 20 நிமிஷத்தில அவ உங்கிட்ட பேசுவா, அடுத்த 20 நிமிஷத்தில உன் பையனுக்கு பால் கொடுப்பா, இன்னும் ஒரு மணி நேரத்தில உங்க ரெண்டு பேரு அப்பாம்மா வரும் போது, எந்திரிச்சி, குழந்தையை தூக்கிட்டு போய் அவளே காட்டுவா, பாரு!"
அரைகுறை மனதோடு ஜெயந்தியை பார்க்க, அவள் முழு நிம்மதியுடன் உறங்கிக் கொண்டிருந்தாள்.
கடந்த வாரம் ஜெயந்தி, தன்னிடம் பேசியதை நினைவுகூர்ந்தான்.
"ருத்ரா, டெலிவரியை நேர்ல பாக்க உனக்கு கஷ்டமா இருக்கும். என் மேல அன்பு அதிகமாகும், அது ஓகே எனக்கு.
ஆனா, நம்ம பிள்ளை மேலயும் அளவு கடந்த பாசம் வரும், ஒருவேளை அது அவளோட எதிர்காலத்துக்கு கெடுதலாகூட போகலாம்.
இரத்தம் சிந்துறப்போ பாத்தா, அடுத்த தடவை என்ன தொடகூட நீ பயப்படலாம்.
எல்லாத்தையும் விட மேல, நீ நேசிக்கிற உன்னோட BSF மேஜர் வேலை தீவிரவாதிகளையும் துரோகிகளையும் இரக்கமின்ற கொல்ல வேண்டிய வேலை. உயிர்கள் மேல இரக்கம் வந்து, உன் வேலையை அது பாதிக்கக்கூடாது, பாத்துக்கோ!"