பார்த்துக்கொண்டே இருப்பது பலருக்கு பிடித்தமான ஒன்று. எனக்கும். இயற்கையின் அழகை இமை கொட்டாமல் ரசிப்பேன்.
ஆஹா. அதுதான் எத்தனை அழகு. மேகம், மின்னல், இடி, மழை, காற்று, மரங்கள், செடிகள், பூக்கள், கனிகள், வண்ணத்துப்பூச்சி, தும்பி, பச்சைக்கிளி இன்னும் இன்னும் எழுதுவதற்கு தாளும், பேனா மையும் போதாது.ஆனால் பார்ப்பதற்கு இவை போதாது. இதற்கென தனியாக நேரம் ஒதுக்குவதில்லை நான்.
நான் கடக்கும் வழிகள், பொழுதுகள் என் பார்வைக்குள் வந்துவிடும்.இப்போதும் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறேன் பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி. விரையும் வாகனங்கள். மறையும் மனிதர்கள். சாலையோர கடைகள். தப்பிதவறி வாழ்ந்து கொண்டிருக்கும் மரங்கள்.
அதற்குள் நான் இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டதே. பேருந்திலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தேன். என்னதான் சொல்லுங்கள் நடக்கிற சுகமே தனிதான்.கைபேசி சிணுங்கியது.
"அலோ"
"பத்மா எங்கடி இருக்க"
"இரண்டு நிமிஷம் பொருத்துக்கோ. உன் முன்னாடி இருப்பேன்"
"சரி வா. வாசல்ல காத்திருக்கேன்"
"ம்"
கைபேசியை பையில் வைத்தேன்.
சின்னஞ்சிறு பிஞ்சு ஒன்று சுதந்திரமாக சாலையோர மண்ணில் கைகளை அளைந்து அளைந்து விளையாடிக்கொண்டிருந்தது.
அதன் பிஞ்சு விரல்களுக்கு நடுவே மண் புகுந்து வரும் அழகை கண்டு ஆனந்தப்பட்டது. அந்த குழந்தைக்குத்தான் என்னவொரு ரசிப்புத்தன்மை. நானும் ரசித்தேன் நடந்தவாரே. குழந்தை பருவத்தில் எல்லாவற்றையும் ரசிக்கிறோம்.
வளர்ந்தபிறகு எல்லாவற்றையும் மறக்கிறோம்."ஹே. பத்மா"
சங்கீதா வாசலில் காத்திருந்தாள்.
"சரியா இரண்டு நிமிஷத்துல வந்துட்டேனா"
சிரித்தார்கள் இருவரும்.