யானை ஊர்வலம்

17 3 0
                                    

மணியோசையை முன்னாலனுப்பி
பின்னால் அசைந்தாடியபடி
ஊர்வலமாய்
தெருவில் வருகிறதொரு யானையொன்று!

பின்னாலும் முன்னாலும்
ஹோவென இரைந்தவாறே
அதன் கூடவே வருகிறார்கள்
தெருச் சிறாரெல்லாம்.

வீட்டிற்குள் இருந்த பெரியோருங்கூட
வேடிக்கை பார்க்க வெளியே வந்தனர்
தத்தம் கைக்குழந்தைகளுடன்.

தேங்காய் பழங்கொடுக்க
தென்னையோலை கொடுக்க
பாகனுக்கு காசு கொடுத்து
யானையின் ஆசி பெற
கைக்குழந்தைகளை அம்பாரியிலேற்ற
துதிக்கை நீரை
பயந்து போனதாய்
நம்பப்பட்ட குழந்தையின்
முகத்தில் பீய்ச்சிக் கொள்ள
சாணமிட்டதும் மிதித்து விளையாட
பாகனிடம் பேரம்பேசி
யானைமுடி வாங்கிக் கொள்ள

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணமிருந்தது
யானை பார்த்து மகிழ்ச்சி கொள்ள
அதைப் பற்றியே நாள் முழுதும் பேசிக்கொள்ள !

யானைக்கு எந்தவொரு காரணமுமில்லை
இவர்களையெல்லாம் மகிழ்விப்பதைத் தவிர.

---சுரேஷ் பரதன்.

கோட்டோவியங்கள்Où les histoires vivent. Découvrez maintenant