(முகவுரை - 1) வாசிப்பதற்கு முன்

296 20 7
                                    

திருக்குர்ஆனை வாசிக்கும்போது மற்ற நூல்களில் இருந்து பலவகைகளில் அது வேறுபட்டிருப்பதைக் காணலாம்.

சில கட்டளைகள் திருக்குர்ஆனில் திரும்பத் திரும்பக் கூறப்பட்டுள்ளதைக் காணலாம். ஒரு விஷயத்தை ஒரு தடவை கூறினால் போதாதா? திரும்பத் திரும்ப ஏன் ஒரே விஷயத்தைக் கூற வேண்டும்? என்ற சந்தேகம் இதனால் ஏற்படலாம்.

திருக்குர்ஆன் 23 ஆண்டுகளில் பல்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப இறைவனால் கூறப்பட்ட அறிவுரைகளின் தொகுப்பாகும். இது போன்ற அறிவுரைகளின் தொகுப்புகள் இவ்வாறுதான் அமைந்திருக்கும்.

இதை ஒரு உதாரணத்தின் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

நல்லொழுக்கமுள்ள, அறிவுள்ள தந்தை தன் மகனுக்குப் பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவுரை கூறுகிறார். இவ்வாறு அவர் பத்து ஆண்டுகளில் கூறிய அறிவுரைகளை நாம் தொகுத்தால் அது எவ்வாறு அமைந்திருக்கும்?

# முதல் வருடம் கூறிய அறிவுரைகளில் சிலவற்றை மறு வருடமும் அவர் கூறியிருப்பார்.

# சில அறிவுரைகளை ஏழெட்டு தடவைகள் கூறியிருப்பார்.

# சில அறிவுரைகளை ஒரே ஒரு தடவை கூறியிருப்பார்.

செய்தியின் முக்கியத்துவம் கருதி இவ்வாறு திரும்பத் திரும்பக் கூறியிருக்கலாம். அல்லது கூறப்பட்ட அறிவுரையை மகன் சரியாகக் கடைப்பிடிக்காததால் மறுபடியும் கூறியிருக்கலாம்.

இதுபோல் 23 வருடங்களில் கூறப்பட்ட அறிவுரைகளின் தொகுப்பு என்பதால் திருக்குர்ஆனிலும் சில விஷயங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் கூறப்பட்டுள்ளன.

ஒரு நூல் என்றால் தலைப்பு வாரியாக அது வகைப்படுத்தப்பட்டு அந்தந்த தலைப்பின் கீழ் தலைப்புக்குப் பொருத்தமான செய்திகள் கூறப்பட்டிருக்கும். ஆனால் திருக்குர்ஆனைப் பார்த்தால் தலைப்பு வாரியாக அதில் செய்திகள் தொகுக்கப்பட்டு இருக்காது. இது சிலருக்கு வியப்பாகத் தெரியலாம்.

Tamil Qur'an [Tamil] Where stories live. Discover now