அடுப்பங்கரை அழகி....

115 6 6
                                    


எல்லா ஆண்களின் வெற்றிக்குப் பின்பும் ஒரு பெண் உண்டு என பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு. அது தாரத்தை விட தாயிற்கே அதிகமாக பொருந்தக்கூடியது. ஆனால் அந்த தாயின் தேவை என்ன, அவளின் ஆசை என்ன, அவளின் வெற்றி என்ன, அவளது வாழ்வின் அர்த்தம் என்ன என்பதை அறிய முற்படும்போது, அவளது உலகம் குழந்தைகள் கணவன்  என குறுகிய வட்டத்திற்குள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவர்களது வெற்றி, சந்தோஷம், சோகம், துக்கம், ஆசை ஆகிய அனைத்தும் இவளது வாழ்வின் அர்த்தம் ஆக இருக்கிறது.

ஆனால், எந்த ஒரு கணவனோ, மகனோ தாயின் தேவை, அவளின் ஆசை என்ன என அறிந்து செயல்பட்டிருக்கிறார்களா என பார்க்கும் போது சதவீதம் என் வீட்டிலேயே மிகக் குறைவாகவே தான் இருக்கும்.

தாயின் மீதான என் பார்வையை பொதுவாகக் பேசுவதை விட என் தாயின் மூலம் பேசுவதே சரியான ஒன்று. 

தாயின் முகம் அடிக்கடி காதலியின் முகத்தைப் போல் நினைவில் வருவதில்லை என்றாலும், என்றாவது ஒரு நாள் சரியான சாப்பாடு கிடைக்காத தருணத்திலோ, என் துணியை நான் துவைக்க எண்ணும் சமயத்திலோ, உடல் நிலை சரியில்லாத சமயத்திலோ வருவதுண்டு. ஆனால் அச்சமயத்திலும் என் காதலியைப் போன்று, பகட்டாண உடையிலோ, அணிகலன்கள் அணிந்து தன்னை அலங்கரித்த நிலையிலோ ஒரு நாளும் கண்டதில்லை. அப்பொழுதும் என் நினைவில் துவைப்பது போலவோ அல்லது சமைப்பது போலவோ, முந்தானையை தூக்கி சொறுகி வேர்த்து வடியும் நிலையிலும் வேலை பார்க்கும் அதே அடுப்பங்கரை அழகியாகவே வருகிறாள்.

ஆணாகிய எனக்கு என் வீட்டைத் தாண்டிய ஒரு உலகம் உண்டு. அதில் நண்பர்கள், ஆசைகள், நான் சந்தித்த மனிதர்கள், வெற்றிகள், தோல்விகள், முயற்சிகள், சுற்றிய இடங்கள் என என் முதுமையில் அசை போட சில விசயங்கள் குடும்பத்தை தாண்டி உள்ளது. பெண்ணாகிய என் தாயின் உலகம் என பார்க்கும் போது குழந்தை , கணவன், அவர்களுக்கு சமைப்பது, துணிகளை துவைப்பது, அவர்களின் வெற்றி தோல்விக்கு பின்னால் இருப்பது, தேவைப்படும் போது நகையைக் கொடுத்து கடனை அடைப்பது என எங்களின் நினைவுகளை தாண்டி முதுமையில் நினைத்துப் பார்க்கக் கூட ஒன்றும் இல்லை என்பதே உண்மை.

என் தாய் என் மீது காட்டிய பாசத்திற்கும், நான் நோய்வாய்பட்டிருக்கும் போது, அவள் காட்டிய பரிவிற்கும் ,நானோ அல்லது எனது தந்தையோ அதே  அளவிற்கு இணையாக அல்லது கொஞ்சமாவது செய்திருக்கிறோமா என பார்க்கும் போது தான் புரிகிறது. அவளின் எதிர்பார்ப்பற்ற பாசத்திற்கு அருகாமையில் கூட வைக்க முடியாது நமது கவனிப்பை.

அவள்  எதிர்பார்ப்பற்றவள், தன்னலமற்றவள், கொண்டாடப்பட வேண்டியவள்.

ஆனால் நாம் பேச்சாலும், செயலாலும், அடக்கு முறையாலும் நசுக்கி கொண்டிருக்கிறோம்.

இதை நான் கொடுமைக்கார கணவர்களையோ, சுயநலமிக்க பிள்ளைகயோ நோக்கி கூறவில்லை. என்னைப் போன்ற அதாவது அவளின் தேவை, ஆசை அறிந்து செயல்படாத அவர்களின் முயற்சிகளை, ஆர்வங்களை, சமூகத்தின் மீதான பார்வைகளை, சுய விருப்பங்களை பற்றி பேசும் போது மட்டம் தட்டும் நம்மை போன்ற ஆண்களை நோக்கி கூறுகிறேன்.

அவள் கொண்டாடப்பட வேண்டியவள்.அவர்களுக்கான வழியை விட வேண்டும். ஆண் பின்னால் பெண் என்பதைப் போல் பெண்ணுக்கு பின்னால் ஆணும் இருக்க வேண்டும்.

பெண்களின் மீதான அடக்குமுறை , ஆணாதிக்கம் என்பது அவர்களை அடிப்பதோ உதைப்பதோ மட்டும் அல்ல. அவர்களின் செயல்களை, எண்ணங்களை, சமூகம் சார்ந்த பார்வைகளை, சுய முயற்சிகளை, பொது வெளியில் அவர்களின் கருத்துகளை நகைப்புக்கு உரியதாகவும், உதார்சினப்படுத்துவதுமே ஆகும். மதம் சார்ந்த அடக்குமுறை என்பது எந்த மதத்திலும் சொல்லப்படாத ஒன்று. திராணியற்ற ஆண்களின் கடைசிக் கருவியே மதம் சார்ந்த அடக்கு முறை என்பது.

துணையாக நின்று அவர்களை நம்மை தாண்டிய உலகத்தை அவர்கள் அறிய வழி விட வேண்டும். வழி நடத்துவது வேறு வழி விடுவது வேறு.

முக்கியமான ஒன்று தொண்ணூறுகளின் குழந்தைகளுக்கு கணவன்களுக்கு கிடைத்த தாயோ மனைவியோ அடுப்பங்கரை அழகியோ இனி வரும் ஆண்களுக்கு கிடைக்க போவது இல்லை. இனி கிடைக்க போவது ஆண்ட்ராய்டு காலத்து பெண்களே..

நம் அம்மாக்கள் அடுப்பங்கரை அழகி மட்டுமல்ல என்பதை நாம் உணர வேண்டும்.

மேலே சொல்லப்பட்ட யாவும் மனைவி /  காதலியிடம் பாசத்தை காட்ட தெரிந்து தாயிடம் பாசத்தை வெளிக்காட்ட தெரியாத மகனின் மடல்.

-அஹமது ரிஸ்வான்

எண்ணங்களின் தொகுப்பு..Where stories live. Discover now