2- வீதியில் ஒரு நாள்

90 9 18
                                    


அன்று விடுமுறை நாள்... நான் வழமைபோல காலையிலேயே நூலகத்திற்குச் செல்ல ஆயத்தமானேன்...என் அவசரக் கோளாறு காரணமாக நூலகம் திறப்பதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்பாகவே சென்றுவிட்டேன் என்றால் பாருங்களேன்...

நூலகம் பூட்டிக் கிடந்தது... வேறென்ன செய்ய முடியும்...எங்கள் ஊரின் அழகை இரசித்தபடியே வீட்டிற்கு நடையைக் கட்ட வேண்டியதாகப் போயிற்று...காலை நேர இளஞ்சூரியன் எங்கோ கிழக்கில் எழுந்து வந்திருப்பான்...ஆனால், அவனைக் கண்டுகொள்ள முடியாமல் ஓங்கி உயர்ந்த கட்டடங்களும், கடைத் தொகுதிகளும் இந்த இயற்கையின் காதலியைக் கலங்க வைத்தன...இரசிப்பதற்கு இயற்கையாக ஒன்றும் இல்லை என்பதால், பதினைந்து நிமிடங்கள் கொண்ட நடைப் பயணத்தை, வாய்க்கு வந்த கவிதைகளை முணுமுணுத்தபடியே கடத்திச் சென்றேன்...என் கலோரிகள் சிலவும் கடத்தப்பட்டிருக்க வேண்டும்...பசியெடுத்தது...

வீட்டிற்குப் போய் சாப்பிடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தபோது, வீட்டிலிருப்பவர்கள் ஏன் அவ்வளவு சீக்கிரமாகத் திரும்பி வந்தாய் என்று கேட்டு, காரணத்தை அறிந்தால் நாம் நோண்டியாவது நிச்சயம் என்ற நிதர்சனம் புரிந்தது... அது கூட பரவாயில்லை...வரும் வழியில் மஞ்சட்கோட்டுக் கடவையில் வைத்து நிகழ்ந்த சம்பவம் தான், அன்றைய நாளின் மேற்கோளாக இருந்தது என் மனப் பத்திரிகையில்...

நான் கடவைக்கு அருகே நடந்து வந்து கொண்டிருந்தேன்...அங்கே ஒரு வயதான பெண்மணியும் அப்போது தான் வீதியைக் கடப்பதற்காக நின்று கொண்டிருந்தார்...அவர் பெரும்பாலும் வெளியூரில் இருந்து தானம் கேட்டு வந்திருக்கும் பாட்டியாகத்தான் இருப்பார்...அவர் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தால், என் பாட்டியுடன் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருக்கும் மூதாட்டிகளில் ஒருவராகவும் இருக்கலாம்...அதனாலென்ன...அவருக்குத் தான் என்னைத் தெரியாதே...நான் பர்தா அணிந்து முகத்தை மூடியிருந்தேனே...

சரி சரி...திடீரென்று எனக்குள் இருந்த அன்னை தெரேசா எட்டிப் பார்த்தார்... முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூத்தோரைக் கண்ணியப்படுத்தச் செல்லியருக்கின்றார்கள் அல்லவா? எனக்கு முதலாம் வகுப்பு பாடம் எல்லாம் ஞாபகத்திற்கு வந்தது...(அவ்வளவு ஞாபக சக்தி) நாமும் அந்தப் பாட்டியுடன் சென்று வீதியைக் கடக்க உதவி செய்து நன்மைகளைத் தேடிக் கொள்வோம்  என்ற நல்லெண்ணம் தோன்றியது...

''என்ன பாட்டி நான் உங்களுக்கு உதவி செய்யவா?'' என்று கேட்டு அவரது கையைப் பிடித்து நடத்திச் சென்றேன்...அப்போது வாகன நெரிசல் அதிகமானது...காத்திருந்து தான் கடக்க வேண்டிய நிலை...

''முதலில் வலம் பார். பின் இடம் பார். மறுபடியும் வலம் பார். வாகனங்கள் வருகின்றனவா என்று பார். வராவிட்டால் பார்த்துக் கட. வந்து கொண்டிருந்தால் கவனமாகப் பார்த்துக் கட...''

இதையெல்லாம் நான் உங்களுக்கு சொல்வதனால் நான் சிறுபிள்ளைத்தனமாக யோசித்திருக்கின்றேன் என்று நீங்கள் நினைக்கலாம்...நான் ஒரு இளம் யுவதி தான்...நீங்கள் என்னைப் பற்றி என்ன நினைத்தாலும் பரவாயில்லை... ஆனால் அந்தப் பாட்டியும் என்னை அப்படித்தான் நினைத்தார் போல... நாங்கள் நடு வீதியைக் கடக்கும் போது தான் அதனைக் கவனித்தேன்...

அந்தப் பாட்டிதான் என் கையைப் பிடித்துக் கொண்டு வீதியைக் கடக்கின்றார் என்பதை நான் அப்போது தான் உணர்ந்தேன்...அவர், சிறு குழந்தை போல குடுகுடுவென்று என்னை நடத்திக் கொண்டு மறுபக்கம் வந்து விட்டார்...நாங்கள் வீதியைக் கடக்கும் வரை நின்று காத்துக் கொண்டிருந்த வாகனங்களில் இருந்தவர்கள் எல்லாம் என்னை ஏன் அப்படிப் பார்த்தார்கள் என்ற காரணம் அப்போது தான் எனக்குப் புரிந்தது...

யாரென்று தெரியாத ஒருவருக்கு முதன்முதலாக வீதியைக் கடக்க உதவி செய்கின்றோம் என்ற மகிழ்ச்சியில், என் தலையின் மேல் ஊதிக் கட்டிய ஸ்மைலி பலூனில் ஓட்டை விழுந்து, புஸ்ஸென்று காற்று வெளியேறியது போல ஒரு உணர்வு...அதை எப்படிச் சொல்வேன்...கிரேட் வெட்கம்...அந்தப் பாட்டி என்னிடம் விடை பெற்றுக் கொண்டு மறு பக்கமாகச் சென்று விட்டார்...

ஆனால் உண்மையில் நான் பயந்துபோகவே இல்லை...நான் பல தடவைகள் தன்னந்தனியே பிரதான வீதியைப் பாதுகாப்பாகக் கடந்திருக்கின்றேன்... பல பொழுதுகளில் நம்மை மற்றவர்கள் சிறுபிள்ளைத் தனமாக நடத்துவதால் பூரித்துப் போவது போல, சில நேரங்களில் இப்படி அவமானமாகத் தோன்றுவதும் உண்டல்லவா?

அந்த நாள் முழுவதும் என்னை ஆட்கொண்டிந்த இந்த சம்பவத்தை, இந்த நாள் வரை நான் யாரிடமும் சொல்லவில்லை...

இப்போது உங்களிடம் பகிர்ந்து கொண்ட இச் சம்பவத்தைப் பற்றிய உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன்...

வாசித்தமைக்கு நன்றிகள்...

வாக்களிக்க மறக்க வேண்டாம்...

You've reached the end of published parts.

⏰ Last updated: Nov 06 ⏰

Add this story to your Library to get notified about new parts!

நினைப்பதெல்லாம்...Where stories live. Discover now