சுழல்

95 4 3
                                    


சுழல்

ஊரில் இரண்டு இழவு.
மகிழ்ச்சியில் திளைத்தான்
மாலை விற்பவன்.


நான்கு மூலைகளிலும் தனக்கென விரிந்து 17 டிகிரி செல்சியஸில் சில்லிட்டிருந்த அறை அது. வரிசையாக போடப்பட்டிருந்த நாற்காலிகளில் தங்களைப் பலவித கோணங்களில் பொருத்தியபடி அவரவர் அலைபேசிகளில் ஐக்கியமாகியிருந்தனர். உடன் நான், என் மனைவி மற்றும் நான்கரை வயது முகிலினியும் அவளுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருக்கும் பிற குழந்தைகளும். மைவிழிக்குக் குழந்தைகளை மிகவும் பிடிக்கும். அதைவிடக் குழந்தைகளுக்கும் அவளை அதிகம் பிடிக்கும்.


ஒவ்வொரு வருடமும் மேல்நிலைத் தேர்வுகளில் அதிக ரிசல்ட் கொடுத்து முதலிடத்திலிருந்த பள்ளி என்று பத்திரிக்கை, பேனர்கள் எனத் திரும்பிய பக்கமெல்லாம் விளம்பரங்களால் விதைக்கப்பட்டு அளவுக்கு மிஞ்சி அறுவடை செய்துகொண்டிருந்த பள்ளியின் சேர்க்கை அறை அது.


சினிமாவில் மார்க்கெட் இழந்து டிவி சீரியலுக்குள் தலைகாட்டத் துவங்கியிருந்த நான்கெழுத்துக் கதாநாயகியின் நச்சென்ற விளம்பர உபயத்தால் என் மனைவியின் கண்ணிலும் பட்டு இப்போது என்னையும் இங்கு வரவைத்திருக்கிறது. வந்ததிலிருந்து ஒவ்வொரு கட்டடத்தையும், ஊழியர்களின் கனிவையும், புல்தரை சூழ்ந்த பூச்செடிகளின் பராமரிப்பையும் என இன்ச் இன்ச்சாக பார்வையால் பதியம் போட்டுக் கொண்டிருந்தாள் மைவிழி. நானும் நடப்பதை கவனிக்க ஆரம்பித்தேன்.


நடு நாயகியாக சிரித்தும் சிரிக்காதபடி கண்ணாடிச் சட்டத்திற்குள் வெள்ளைத் தாமரையில் வீணையைத் தாங்கிப் பிடித்தபடி இயல்பாக அமர்ந்திருந்தாள் கலைமகள். அருகே தினசரிப் புன்னகையில் லக்ஷ்மி கடாட்சமான காந்தியும் கொஞ்சம் தள்ளி கலாமும் கழுத்து வரை நின்று கீழே நிகழ்வனவற்றை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.


இத்தகைய ஆன்மீக அரசியலுக்குக் கீழே மய்யமாகப் பரபரவென அட்மிஷன் போட்டுக் கொண்டிருந்தார் ராஜ நாராயணன். மேற்படி பள்ளியின் நிர்வாக அதிகாரி. எல்லா பேரமும் இங்கேயே முடிந்துவிடும். பெரியவரிடம் போகவேண்டிய வேலை இருக்காது. ஆள் கணக்கில் படு சுத்தம். கல்லாவில் இவரும் காசாளரும் கரன்சிகளை எண்ணிக்கொண்டிருக்கும் போது கரன்ட் போய்விட்டால் உடனே அவர் கையை இவரும் இவர் கையை அவரும் கெட்டியாகப் பிடித்துக் கொள்வார்களாம். தப்பித் தவறிக்கூட யாரும் கையாடிவிடக் கூடாதென. நாணய நா நய நாணயவான். வாசனைப் புகையிலை மன்னன். மணக்க மணக்கப் பேசுவார். அலுவலக அரசியலில் வித்தகன்.


மகளின் கைகளாலேயே சேர்க்கைப் படிவத்தை நிரப்பிக்கொடுத்தேன். பெயரைப் பார்த்ததும் முகமலர்ந்து சிரித்தாள் அந்த அலுவலகப் பெண். அவளது அக்காவின் பெயராம் அது. மைவிழியைப் போல நீலநிறப் புடவை அணிந்திருந்தாள். யாரையும் நேருக்கு நேராகப் பார்த்து பேசுபவள் போலும். மாசற்ற நிலவு முகம். மேலும் அந்தக் கண்களில் தெ... இடையில் புகுந்த எல்லாம் வல்ல என் ஆசை மனைவியின் ஆசிக்கிணங்க நான் திரும்ப என் இடத்திற்கே வந்து அமர்ந்துவிட்டேன். முகிலினி மட்டும் கண்கள் விரிய விரிய அந்தப் பெண்ணுக்கு உரையாடல் வரமளித்துக் கொண்டிருந்தாள்.


வரிசையாக ஆட்கள் செனறு வந்தபடி இருக்க செந்தமிழன் என்ற பெயர் கேட்டு நிமிர்ந்தேன். ஆம். நான் தான் அது. எனக்கு ஊரில் வணங்காமுடி என்றொரு பெயரும் உண்டு. பெரிதாக ஏதுமில்லை. என் தலைமுடி அவ்வளவு எளிதில் வணங்காது. தேங்காய் எண்ணெயுடன் தண்ணீரை சேர்த்துக் கலக்கித் தலைக்குத் தேய்ப்பேன். அப்போதும் என் உச்சி முடி வணங்காது வான் நோக்கித் தான் நிற்கும்.

You've reached the end of published parts.

⏰ Last updated: May 02, 2018 ⏰

Add this story to your Library to get notified about new parts!

சுழல்Where stories live. Discover now