நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்
மண்ணால் வேறுபட்டிருந்தாலும் மனத்தால் உலகெங்கும் பெண்களின் துன்பங்களும் தைரியங்களும் ஒன்றேதான் என்பதற்கு அழுத்தமான ஆதாரம் நம்பர் 1 லேடீஸ் டிடெக்டிவ் ஏஜென்சி என்ற ஆங்கில நாவல். அலெக்ஸாண்டர் மெக்கால் ஸ்மித் எழுதியிருக்கும் இந்த நாவலின் நாயகி - எம்மா ரமோட்ஸ்வே! இவள், ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கிற சாதனைத் துடிப்பின் பிம்பம்.
எம்மா ரமோட்ஸ்வே பிறந்து, வளர்ந்து, வாழ்வதெல்லாமே ஆப்பிரிக்கக் கண்டத்தின் சின்னஞ்சிறு நாடான போட்ஸ்வானா மண்ணில்.
நிறத்தாலும் மொழியாலும் உருவ அமைப்பாலும் வேறுபட்டிருந்தாலும்கூட, போட்ஸ்வானா மக்கள் கிட்டத்தட்ட நம் கலாசாரத்தை அப்படியே நினைவுறுத்துகிறார்கள். மகளுக்கு சீதனமாகத் தர மாடுகளை வளர்க்கும் தந்தை, முழுக்க நம்பியவன் கைவிடும்போது ஏமாற்றத்தில் துடிக்கிற மகள், தொலைந்துபோன மகனை எண்ணி தவித்து நிற்கும் பெற்றோர்.. என்று ஒவ்வொரு பாத்திரத்தின் உள்ளேயும் ஊறுகிற உணர்வுகள், நம் கலாசாரத்தையும் வாழ்க்கைத் துடிப்பையும் அப்படியே நினைவூட்டுகின்றன.
துன்பங்கள் ஆயிரம் வந்தாலும், தைரியத்தோடு மட்டுமல்ல.. சின்னதொரு நகைச்சுவை உணர்வோடும் அவற்றை எதிர்கொண்டு தூளாக்க வேண்டும் என்பதில், எம்மா ரமோட்ஸ்வேக்கு நிகர் அவளேதான்!
ரமோட்ஸ்வே பயணிக்கிற பாதையில் வரும் அப்பாவிகள் நம்மை கண்கலங்க வைக்கிறார்கள். வினோத வில்லன்கள் நடுங்க வைக்கிறார்கள். கொடுமைக்காரர்கள் கொதிக்க வைக்கிறார்கள்.