முட்டைக்கும், ஆஞ்சநேயர் சாமிக்கும் புகழ் பெற்ற நாமக்கல் மாவட்டத்திற்கு நந்தினி தனது படிப்பை முடித்துவிட்டு.. வந்து இறங்கினாள். அவளை அழைத்து செல்வதற்காக ஒருமணி நேரமாக பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தான் நந்தா. பஸ்ஸை விட்டு இறங்கியவள் அவனை நோக்கி போனாள்...."என்ன அக்கா, இவ்வளவு லேட்டாவா வருவ? உனக்காக எவ்வளவு நேரம் இப்படி போறவர பஸ்ஸை வேடிக்கை பார்த்துட்டு நிக்கறது" என்று எரிந்து விழுந்தான்... நந்தினியின் தம்பி... நந்தா
"சாரிடா நான் மட்டும் என்ன பண்ணட்டும், நானா பஸ் ஓட்டுறேன் ?, பஸ் டிரைவர் மெதுவா ஓட்டுறார்.... மாட்டுவண்டி ஓட்டறமாதிரி ஓட்டுறாரு, அப்படியே எனக்கு வந்த கோவத்துக்கு அவரை தள்ளிவிட்டுட்டு நான் பஸ்ஸை ஓட்டிட்டு வரலாம்னு நினச்சேன்" என்றாள்.... வெள்ளந்தியாக
"ஐயோ நல்லவேளை நினைக்கறதோட விட்டுட்ட அக்கா... இதையே செஞ்சிருந்தா அந்த பஸ்ல வந்தவங்களோட கதி என்ன ஆயிருக்கும்" என்றான் கிண்டலாக...
"சரி போதும் வாடா விட்டா இப்படி பேசியே பொழுதை போக்கிறுவ" என்றவள்.... பேக்கை எடுத்து அவன் கையில் குடுத்துவிட்டு... நடக்க ஆரம்பித்தாள்..
"அதானே பார்த்தேன், உனக்கு பை தூக்கவும் உனக்கு டிரைவர் வேலை பார்க்கவும் தான், தாமரை என்னை பெத்து போட்ருக்கு வீட்டுல பையனா மட்டும் பொறுக்கவே கூடாதுப்பா, இந்த பிள்ளைங்களுக்கு வேலை செஞ்சு, செய்ஞ்சே எங்க ஆயுசு குறையுது" என்றவன், "வந்து சீக்கிரம் ஏறித்தொலை... போய் இவ்வளவு நேரம் ஆச்சே இன்னும் என்னடா பண்ணிட்டு இருந்தனு அம்மா என்னை கேள்விக்கேட்டே கொன்னுரும்" என்றான்...
"சரிடா முட்டைகோஸ் ரொம்பதான் சலிச்சிக்காத..." என்றவள்... அவனுடைய ராயல் என்பீல்டில் ஏறி அமர்ந்தாள்...
போகும் வழியில் "அப்பா உனக்கு மட்டும் இப்போவே வண்டி வாங்கி குடுத்துருக்காரு... நான் கேட்டா மட்டும் டீல்ல விடுறாரு.... நீதான்டா வீட்டுக்கு செல்ல பிள்ளை... இதுல பையனா பொறந்துட்டனு குறை வேற" என்றாள் அவன் முதுகில் இடித்துகொண்டே,