கோடைப் பரீட்சைத் தேதி அறிவித்தவுடன் என் நினைவில் உதிக்கும் முதல் எண்ணம், ஊருக்குப் போவதைப் பற்றி தான் இருக்கும்.
வீட்டிற்கு வந்தவுடன்
"அப்பா பரீட்சை வந்தாச்சு, எப்ப ஊருக்குப் போக"
என்ற கேள்விக்கு
"பரீட்சையை நன்றாக எழுதி முடித்தவுடன்" என்ற பதிலும்
கூடவே "மார்க் நல்லா வாங்கலைன்னா அடுத்த வருடம் ஊருக்கு முழுக்கு"
என்ற வாசகமும்,
வருடாவருடம் என் தந்தையின் பொன் வாசகமாகும்.
பரீட்சையின் முதல் நாளே இறுதி நாளாக இருக்கக் கூடாதா என்ற ஆவல்,
பரீட்சை முடியும் வரை ஒவ்வொரு நாளும் இருக்கும்.
ஊருக்குப் போகும் முதல் நாள், ஒரு மாதத்திற்கு வேண்டிய துணிமணிகள், அதோடு காதணி முதல் காலனி வரை எடுத்து வைப்போம்.
பிள்ளைகள் நால்வர் என்பதால் அவரவர் பொருட்களைத் தனித்தனியே எடுத்து வைப்பதற்குள் ஒரு சிறு போர்க்களமே நடந்து முடியும்.
அன்று இரவு அம்மாவிடம் "பயண உணவாக எனக்கு இட்லியும் தக்காளி தொக்கும் வேண்டும்" என்று சொல்லிக் கொண்டிருக்கையில்
என் தங்கை அவள் பங்கிற்கு எனக்கு புளியோதரையும் பக்கோடாவும் என்பாள், இன்னொருத்தி தயிர் சாதமும் மாவடுவும் என்பாள், தம்பி சின்னப்பயல், ஆதலால் எல்லாவற்றிற்கும் தலையாட்டுவான்.
அம்மாவிற்கும் அவள் பெற்றோரைப் பார்க்கப் போகும் மகிழ்ச்சி,
அதனால் எல்லாவற்றையும் செய்வாள். விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம் சமையல் முடிந்து விடும்.
காலை நான்கு மணிக்கு எழுந்து குளித்து ஆடை அணிந்து ஆட்டோவிற்கு காத்திருந்து ரயிலடி சென்று சேர்வதற்குள் மனதில் ஒரே குதூகலமாய் இருக்கும்.

YOU ARE READING
கதையாகிப் போன கோடை விடுமுறை
Short Storyநாம் மறந்தும் தொலைத்தும் கொண்டிருக்கும் கோடை விடுமுறை கொண்டாட்டங்கள்.