அவதார நிகழ்வு என்பது அரிதிலும் அரிதான ஒரு மகத்தான நிகழ்வு. அவதாரப் புருஷர் வாழும் ஒவ்வொரு கணமுமே, உயிர்க்குலம் அவரைக் கண்டும், அவருடன் வாழ்ந்தும் பயனடைகிறது, உய்வடைகிறது. 'உயிர்' என்ற சொல் பிரபஞ்சத்திலுள்ள எல்லா அசையும் மற்றும் அசையா இருப்புகளையும் குறிக்கும்! ஒரு முக்கியமான சத்தியம், ஓர் அவதாரம் இப்புவியில் உடலுடன் உலவும்போது, அக்காலகட்டத்தில் வாழும் மொத்த உயிர்க்குலமுமே பாக்கியம் பெற்றதுதான். ஏனெனில் ஏதோ ஒரு தருணத்தில் அந்த அவதாரப் புருஷரைத் தரிசிக்கும் சாத்தியம் அதற்கு இருப்பதலால்! ஆயினும் அதனினும் பாக்கியம் பெற்றது அப்படி அவரைத் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெறும் ஒரு உயிர். ஏனெனில், அந்த ஒரு தரிசனமே போதும், அது அந்த உயிரை அடுத்த நிலை உயிர் வளர்ச்சிக்கு எடுத்துச் சென்றுவிடுவதால்!