ஹைபிரட் பூக்களில் மகரந்தங்களை தேடி இயற்கையின் நறுமணம் மறந்து அறிவியல் குழப்பங்களில் குழம்பிக்கிடக்கின்றன நகரப் பெருவெளியில் வாழும் பாட்டாம்பூச்சிகள். தமிழில் ஆகச்சிறந்த கவிதை எது என்றான் ஒரு மொழியாளன் எம் மொழியின் எழுத்துக்கள் எல்லாம் உயிர் உள்ளவை ஆதலால் எம் மொழியின் எல்லாச் சொற்களும் ஆகச் சிறந்த கவிதை என்றேன். இது அரசியல் கவிதை அல்ல இது காதல் கவிதை அல்ல இது சமூகக் கவிதை அல்ல உடனே இது கவிதையே அல்ல என்ற குரல் ஒலிக்கிறது.. நாகரீகம் இல்லாததை அரசியல் என்றும் அன்பு இல்லாததைகாதலென்றும் பண்பாடு இல்லாததை சமூகம் என்று சொல்லும் போது பொருளே இல்லாததைகவிதை என்றுதான் சொல்லிப்போங்களேன்.. எல்லா பேருந்து நிறுத்தத்திலும் யாரோ ஒரு சிறுவனோ சிறுமியோ பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.. ஏதோ ஒரு பயணத்தில் யாரோ தவறவிட்ட குழந்தைகள்.