காலங்காத்தாலே ஒரு வேலையில்லாமல்.... என்ற பாடல் பக்கத்துவீட்டிலிருந்து கசிந்து கொண்டிருந்தது. அவள் அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள்.
என்னம்மா டிபன் ரெடியா?
என்னடி அவசரம்... அதுவும் ஞாயித்துகிழம...
காட்... நேத்தே சொன்னேல்ல... இன்னக்கி டோனர்ஸ் டே மா....மக்களுக்கு விழிப்புணர்வ கொண்டுவரணும்.... நா கிளம்புறேன்...
கடவுள் புண்ணியத்துல நம்ம குடும்பத்துல யாரும் ரத்தத்த பாத்ததில்ல.... ஞாபகத்துல இருக்கட்டும்...
அவசரமா போறேன்னு கீழ கீல விழுந்திடாத...
கேமரா எங்கம்மா... எங்க வச்ச....
அது எதுக்குடி....
அய்யோ... எங்க வச்சுருக்க சொல்லு....
உன்னோட கபோட்ல கீழ இருக்கு பாரு... குனிஞ்சு தேடுடி... உன்ன கட்டிக்க போறவன் என்ன பாடு படப்போறானோ...
இப்ப எதுக்கு அத பத்தி பேசுற....
எதுக்குடி கேமரா.... கூட்டத்துல எதாவது ஆச்சுனா எங்கள வந்து திட்டாத....
இதுக்கு பேர் ஸ்ராப்.... போதுமா... கொஞ்சமாவது சீரீயசா திங்க் பண்ணு... போட்டா எடுத்து போட்டாதான் குட் ஹாபிட்ஸெல்லா உலகத்துக்கு தெரியும்.... இந்த உலகத்துல, நம்மள நாம தான் ப்ரோமோட் பண்ணணும்... பை.....
சாப்ட்டு போடி....
பதிலே சொல்லாமல் கோபமாக கிளம்பினாள்.அரசாங்க மருத்துவமனையில் இருக்கும் மரத்தடியில் ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தனர். விழிப்புணர்வு முகாம் பற்றிய செய்தி மறுநாள் நாளிதழில் வர வேண்டும் என்று கண்டிப்பாக கூறிவிட்டான் ஆர்க். ஆர்கனைசர் என்பதை ஆர்க் என்று சுருக்கி செல்லமாக அழைத்தனர் அவளின் அலுவகத்தினர். ஆர்க்கின் நிஜப்பெயர் பலருக்கு தெரியாது. நாட்டு நடப்பிற்கு ஏற்றபடி பல விழிப்புணர்வு முகாம்களை நடத்துவது ஆர்க்கின் பொழுதுபோக்கு. ஆர்க்கனைஸேசனின் லோகோவையும், எப்போதும் கடைசியில் வரவேண்டும் என்ற கொள்கையையும் கச்சிதமாக பயன்படுத்துவான்.
ஆர்க்கின் வலதுகை எப்போதும் முதல் ஆளாய் வந்துவிடுவான். இன்று வலதுடன் நிருபரும் சரியான நேரத்திற்கு வந்துவிட்டார்.
சார் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, எல்லாரும் வந்துகிட்டு இருக்காங்க... என்ற பதிலை நிருபர் சட்டை செய்யவில்லை. அமைதியாக மருத்துவமனை வளாகத்தை நின்றபடி கண்களால் சுற்றி பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு தாத்தாவின் குரல் அவருடைய கவனத்தை கலைத்தது. தாத்தா தன்னுடைய பேத்தியுடன் வந்து கொண்டிருந்தார்.
ஊருக்கு வேணும்னு ஊறும்.....அப்பப்ப எடுத்து கொடுக்கனும்ம்ம்ம்...
எப்படி ஊறும்ம்ம்....
இப்படி தான் ஆத்தா.....நண்டூறுது... நரியூறுது... என தாத்தாவின் விரல்கள் பேத்தியின் கைகளில் ஊற ஆரம்பித்தது. சிறுமியின் முகமும் உடலும் விதவிதமாக காட்சிகளைக் காட்டியது. இதை பார்த்துக் கொண்டிருந்த அவரின் முகம் மலர்ந்திருந்தது. ஓவ்வொருவராக வர ஆரம்பித்தனர். அவர்களை மருத்துவமனையில் இருந்தவர்கள் மட்டுமல்ல மருத்துவமனையே ஒருவித பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது. எதற்கு சிரிக்கிறார்கள்... எதற்கு முறைக்கிறார்கள்... என்று புரியாமல் அவரின் முகம் தேடலைத் தொடங்கியது. அவரின் நெற்றி சுருங்கி பார்வை மிக கூர்மையாக ஓவ்வொருவரையும் அளந்து கொண்டிருந்தது. தோளில் கேமராவை தொங்க போட்டபடி அவளும் வந்து சேர்ந்தாள்.
ஆர்க்க காணோம்... எங்க.... என்றாள்
வீ ஆர் வெயிட்டிங் பார் கிம்... என்றனர்.
மெலிந்த தேகத்தைக் கொண்ட ஒருவர் கையில் அன்றைய தினசரியுடன் வந்தார். கன்சல்டண்ட் போலும். யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அவரும் ஒரு கூட்டத்தில் ஐக்கியமானார். பேச்சும் பிளட் ட்ரான்ஸ்பியுசன் பக்கம் திரும்பியது.
கன்ஸ்சும், வேல்ட்வார் இல்லைனா இந்தளவு முன்னேற்றத்தை பார்த்திருக்க முடியாது. தேவைகளை வெளிக்கொணர்ந்ததே வேல்ட் வார் ஒன்னும் இரண்டும் தான். அத வச்சுக்கிட்டு நாம இன்னும் சுத்திக்கிட்டு இருக்கோம்.... என்றார். யாரும் கண்டுகொள்ளவில்லை. கன்ஸ்சும் ஒரு திண்டில் அமர்ந்து தினசரியை விரித்து படிக்க ஆரம்பித்தார்.
மேகக் கூட்டங்களைப் போல் கூட்டம் கூடுவதும் களைவதுமாக இருந்தது. வேல்ட் வார் பலவடிவத்தில் உலவ ஆரம்பித்தது. கூட்டத்தின் குணம் அவருக்கு மெல்ல புரிய ஆரம்பித்தது. அவரின் முகம் ஆச்சரியம் கலந்த பார்வையை வீசிக் கொண்டிருந்தது.
ஆர்க் வந்தவுடன் அனைவரும் ஒருங்கிணைந்தனர். வந்தவுடன் வசைபாட ஆரம்பித்தான்.
போர்ட் சரியில்ல... ஐ வாண்ட் டொனேட் இன் ப்ளாக் அண்ட் பிளட் இன் ரெட். ப்ளு அண்ட் க்ரீன் யாரு செலக்ட் பண்ணா...
இந்த போர்ட் கேவலமா இருக்கு.... ப்ளட் ட்ராப்ஸ் மாதிரி இருக்கனும் மேன்... டாட் வச்சு ஏமாத்திட்டாங்க... ஐ கேட் இட்...
போர்ட் எல்லாம் வேண்டாம்....என்றான்.
அவளும் ஆர்க்கின் அருகில் வந்தாள். காமான் ஆர்க்... சேஞ் பண்ண டைம்மில்ல... வீ நீட் டு ஸ்டார்ட்...
ஓகே... வீ வில் ஸ்டார்ட் அவர் கம்பெய்ண்.... கேட் பக்கத்துல வரிசையா இருப்போம்...
எண்டரன்ஸ் வேண்டாம் ப்ரோ....என்றான் ஒருவன்.
ஓகே எமர்ஜென்சி வார்ட் முன்னாடி போவோம்.... மக்கள் மனசுல ஆணி அடிக்கனும். ஓகே....
ஓகே.. என்றனர் அனைவரும்.
அனைவரும் அமைதியாக போர்டை வைத்துக் கொண்டு நின்றனர். வலதுகை கேள்விகள் நிறைந்த தாளை அவரிடம் வந்து தந்தான். டென் மினிட்ஸ் கழிச்சு ஆர்க் வருவாரு... எந்த ஆர்டர்ல வேணாலும் கேளுங்க இதுல இருக்கிற கேள்விகள....என்றான் பெருமையாக. சில கேள்விகளில் வேல்ட் வாரும் அவசரத்தில் தலையை வாராமல் எட்டிப் பார்த்தது. படித்தவுடன், அவரின் முகம் ஏமாற்றம் கலந்த வேதனையை கக்கிக் கொண்டிருந்தது.
பேத்தியுடன் தாத்தா வந்து கொண்டிருந்தார். அவர்களை பார்த்தவுடன்
என்ன பண்றாங்க தாத்தா...
ஊருக்கு உபதேசம் மாதிரி தெரியுது ஆத்தா... என்றார்.
ஆர்க்குக்கு கோபம் கொப்பளித்தது. அது அவள் முகத்திலும் தெரிந்தது.
ஹே ஓல்ட் மேன்.... படிச்சவுங்கள பத்தி பேசுறப்ப பாத்து பேசுங்க....
எத்தன பேரு ரத்தம் கொடுத்திருக்கீங்க.... முன்னாடி வாங்க.... என்றார் தாத்தா
கமான் ஓல்ட் மேன்.... இது அவர்னஸ் காம்பெய்ண்... இன்னைக்கு ஜூன் 14....
அதனால என்னப்பா... குடுக்காதவுங்க வந்து கொடுத்துட்டு போங்க...
வாட்... இந்த ஹாஸ்பிட்டல்லய்யா... நோ வே....
அருகில் இருந்த மருத்துவமனை ஊழியரைப் பார்த்து
கேட்ட பூட்டுங்க.... கொடுங்கன்னு சொல்லுறதுக்கு முன்ன கொடுத்துருக்காங்களான்னு பாருங்க.... என்றார்.
வாட்... என்றாள் அவள்.
அம்மா கிட்ட கேக்காம என்னால எதுவும் பண்ண முடியாது...
ஷீ ஸ் வெரி ஸ்ட்ராங் லேடி யூ நோ...
அப்புறம் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லமுடியாது.... என்றபடி நகர்ந்தாள்.
கிட்டதட்ட அனைவரும் வேகமாக நடக்க ஆரம்பித்தனர். ஊழியர் கேட்டை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தார். அவ்வளவு தான் கூட்டமே அதிவேகமகாக நடந்து கொண்டிருந்தது. அவளுடைய கேமரா கிழே விழுந்தது. எடுப்பதற்குள் யாரோ தள்ளிவிட்டு ஓடிக் கொண்டிருந்தனர். பொறுக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள். ஆர்க் முதல் ஆளாக கேட்டைத்தாண்டி போய்க் கொண்டிருந்தான். கொண்டுவந்த போர்ட் எல்லாம் சிதறிக் கிடந்தது. தாத்தா அவரைப் பார்த்தார். ஒரு கையில் கேள்வித்தாளும் மறுகையில் கேமராவும் இருந்தது. கைகளை பிடித்த பேத்தியுடன் தாத்தாவும், தினசரியை பிடித்த கன்ஸ்சும், கேமராவை பிடித்த அவரும் ஒரு ரத்தவோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். தாத்தாவின் பையனும் ரத்தம் கொடுத்துவிட்டு வெளியே வந்தார். தாத்தா குடும்பத்துடன் மருத்துவமனையை விட்டு வெளியே சென்று கொண்டிருந்தார். கன்ஸ்சும் நிருபரும் ரத்தம் கொடுக்க சென்று கொண்டிருந்தனர்.