புளிப்புமாதுளம் பழத்தோல், சாதிக்காய் சமமாகச் சேர்த்து வினிகர் விட்டு நன்கு அரைத்து மிளகு அளவில் மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு தினசரி 2-5 மாத்திரைகள் சாப்பிட்டுவந்தால் வயிற்றுப் புண்கள் குணமாகும்.
துவர்ப்பு மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து புண்களின் மீது போட்டு வந்தால் விரைவில் புண்கள் ஆறிவிடும். மாதுளம் மரப்பட்டையை கஷாயம் தயாரித்து வாய் கொப்பளித்தால் ஆடும் 'பற்கள் கெட்டிப்படும். ஈறுகளின் நோய் தீரும். பற்களின் வலி குறையும். மாதுளை ஒரு பல்முனை நிவாரணியாகப் பயன்படுகிறது.
மாதுளம்பூச் சாறு 2 தேக்கரண்டியுடன் கற்கண்டைப் பொடிசெய்து சேர்த்து காலை மாலை தொடர்ந்து உட்கொள்வதால் சூட்டினால் ஏற்படும் ஆசனக் கடுப்பு, வயிற்றுக்கடுப்பு, மலம் கழித்தபின் எரிச்சல், மூலம் ஆகியவை ஒழியும். பத்துப் பூக்களை ஒரு குவளை நீரில் கொதிக்கவைத்து பாதியாகச் சுண்டுமளவுக்குக் காய்ச்சி கற்கண்டு சேர்த்துக் குடித்தாலும் இதே பலன் கிட்டும்.
சூட்டின் காரணமாக மூக்கில் குருதி வடியும் பிரச்சனை இருப்பவர்களுக்கு அருகம்புல் சாறு இரு தேக்கரண்டி மாதுளைப்பூச் சாறு இரு தேக்கரண்டி கலந்து தினமும் மூன்று வேளை கொடுத்துவர முற்றிலும் குணமடையும்.
பழம் சாப்பிட்டபின் மீந்துபோகும் தோலைக் காயவைத்து பொடியாக்கி கால்பங்கு சாதிக்காய் சேர்த்து வெண்ணை அல்லது நெய்யுடன் சேர்த்து உண்ண சீதபேதி, இரத்தபேதி எனப்படும் வியாதிகள் குணமாகும். இதன் இலை மூல நோய்மருந்துகளில் இடம்பெறுகிறது. பட்டை குடல் கிருமிகளை அகற்றும் மருந்துகளில் இடம்பெறுகிறது
மாதுளைப்பழச்சாற்றாலிருந்து உருவாக்கப்படும் மாதுளை மணப்பாகு பெண்களின் கருவளர்காலத்தில் ஏற்படும் மசக்கை மற்றும் வாந்தியை குணப்படுத்தும். உடல் சூட்டினைத் தணித்து கருப்பைக்கு வலுவூட்டி குருதி விருத்தி செய்து கருவை நலமுடன் வளர்க்கும். ஐந்தாவது மாதம்வரை மாதுளையைச் சாப்பிடலாம்.