அம்மாவை தேடி

218 13 7
                                    

கை வலித்தது.  வலது தோள்பட்டையில் இருந்து வலி.
இடது கை வலித்தால்தானே இதயத்தில் வலி வரும்.
வலது கைதான் வலித்தது. பிரச்சனையில்லை.

கால்மூட்டு வலி. உட்கார்ந்து எழுவதற்குள் உயிர் போகிறது.
தரையில் உட்காரவே யோசிக்க வேண்டியிருக்கிறது.

வயதாகிவிட்டதை உடல் காட்டி கொடுக்கிறது.  பிபீ சுகர் போல தைராய்டும் வந்து விட்டது. வருட கணக்கில் படுத்தி எடுக்கிறது.

அம்மாவின் ஞாபகம் அடிக்கடி வருகிறது.  ஓடிப்போய் அம்மாவின் மடியில் படுத்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
அம்மாவின் மஞ்சள் கலந்த வாசனையை நுரையீரல் முழுக்க நிரப்பிக்கொள்ள ஆசை வருகிறது.
உழைத்து உழைத்து தேய்ந்து  போன கைகளால் அம்மா தட்டி தூங்க வைக்கும் தூக்கம் கேட்கிறது.  அம்மாவின் அணைப்பு. அந்த கதகதப்பு. அந்த அன்பு. ஏங்குகிறது மனம். பிள்ளை பெற்றபின்னும் ஊட்டி விடும் அம்மாவிற்கு நான் என்றும் குழந்தைதான்.

      "அம்மா"

      "வந்துட்டேன்ப்பா"

பள்ளியிலிருந்து மகன் வந்து விட்டான்.

       "அம்மா இன்னைக்கி ஸ்கூல்ல"  பேசிக்கொண்டே போனான்.  நான் கேட்டுக்கொண்டே இருந்தேன்.

என் கண்களை பார்த்தான்.

        "அம்மா ஞாபகம் வந்துடுச்சா அம்மா"

தலையை மட்டும் ஆட்டினேன் எத்தனையோ வருடங்களுக்கு முன் இறந்து போன என் அம்மாவை நினைத்து.

அணைத்துக்கொண்டான் என்னை. அம்மாவின் மஞ்சள் மணம் மட்டும் இல்லை. மற்றபடி அம்மாவின் அணைப்புதான்.

         "நான் இருக்கேன்இல்லம்மா. நான்தான் உங்க அம்மா"

என் இரண்டாவது அம்மாவின் அணைப்பில் குழந்தையாய் மாறினேன்.
            
                  தாயே சேயாய்
                  சேயே தாயாய்
----------------------------------------------------------

கனிவுடன்
கஸ்தூரி ஆண்டாள்.

அம்மாவை தேடிWhere stories live. Discover now