அஜயின் ப்ளாக்பெர்ரி மொபைல் குயில், தி டைம் ஈஸ் நவ் 5:30 என தன் இனிய குரலால் கூவ ஆரம்பித்தது. ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அவன் தன் அலைபேசி குயிலின் இடைவிடாத ராகத்தில் மெதுவாக இமைகளை பிரித்தான்.
கண் விழித்ததும் அழையா விருந்தாளியாக தன் இருப்பை உணர்த்தி மனமும் விழித்துக் கொண்டது. வழக்கம் போல அவளின் அழகிய நிச்சலனமான முகம் அகக்கண் முன் தோன்றி அவனை இம்சிக்க துவங்கியது.
தாங்க முடியா மன உளைச்சலோடு எழுந்து அமர்ந்தவன் நெற்றி முடிச்சிட சில கணங்கள் இலக்கின்றி எதிரே இருந்த சுவற்றை வெறித்தான். வேகமாக தலையை உதறி தன் பிளாங்கட்டோடு அவளின் நினைவுகளையும் ஒதுக்கி தள்ளிவிட்டு மெத்தையில் இருந்து கீழிறங்கினான்.
ஜிம்மிற்கு சென்று அரைமணி நேரம் உடல் வலிமைக்காக செலவழித்தவன், பின் குளித்து கிளம்பி அறையை விட்டு வெளியில் வர அவன் அன்னை ஹாலில் அமர்ந்து செய்திதாள் வாசித்துக் கொண்டிருந்தார்.
மகன் வரும் அரவம் கேட்டு தலையை உயர்த்தியவர், அவனையே விழியெடுக்காமல் பார்த்தார். வாலிப வயது இளைஞனுக்கே உரிய கம்பீரமும், ஆண்மையும் நிறைவாய் நிறைந்திருக்க தன்னெதிரே புன்னகை முகமாக வந்து அமர்ந்தவனை கண்டு மென்மையாக முறுவலித்தார்.
"குட்மார்னிங்மா!" என்றான் அஜய் உற்சாகமாக.
" ஓ... ஸ்வீட் மார்னிங்பா!" என்று பதிலுக்கு வாழ்த்தியவரை விழிகளால் அளவெடுத்தான் மகன்.
"என்னம்மா காலையிலேயே தலைக்கெல்லாம் குளித்து மிகவும் பக்திப்பழமாக கிளம்பியிருக்கீங்க, இன்றைக்கு என்ன விசேஷம்?"
"எனக்கென்னப்பா தனியாக விசேஷம்? என் ஆசைக்கு நீ சம்மதித்தால் தான் இனி நம் வீட்டில் விசேஷம். அதற்கு தான் ஊரில் உள்ள அனைத்து தெய்வங்களின் விசேஷங்களுக்கும் நாள் தவறாமல் சென்று பூஜை செய்கிறேன். அதில் யாராவது ஒருவர் கண் திறந்து என் வேண்டுதலுக்கு செவி சாய்த்து நம் வீட்டில் விசேஷம் நடக்க அருள் புரிந்தால் போதும் என்று தான் ரொம்பவும் ஏக்கமாக இருக்கிறது!" என சோர்வாக பெருமூச்சொிந்தாா்.
ஒரு கணம் அஜயின் முகம் இருண்டு விழுந்தது, தன் அன்னை என்ன சொல்ல வருகிறார் என புரியாமல் விழிக்க அவனும் சிறுவயதுப் பிள்ளை இல்லையே, ஆனால்... என்று தனக்குள் எதையோ எண்ணிக் குமைந்தவன் தன் அன்னை தன்னையே கூர்ந்துப் பார்க்கவும், சட்டென்று சமாளித்துக் கொண்டான்.
"ஓ காட்! இட்ஸ் இம்பாஸிபில் மா, உங்களால் மட்டும் தான் இந்த மாதிரி எல்லாம் பேச முடியும். நான் ஒரு விசேஷத்தை பற்றி விசாரித்ததற்கு வார்த்தைகளில் ஓராயிரம் விசேஷங்களை கொண்டு வந்து என்னை கலாய்க்கிறீர்களே, உண்மையில் உங்களிடம் என்னால் பேசி ஜெயிக்க முடியாதும்மா..." என்று கிண்டலாக சிரித்தான்.
"என்னப்பா செய்வது... நான் எப்படி திறமையாக பேசினாலும் இப்பொழுது நீ என்னிடம் ஏதாவது காரணம் சொல்லி மழுப்ப போகிறாய், அப்படித்தானே?" என்று மகனை கூர்ந்தார்.
சற்றே தடுமாறியவன், "ம்மா... அப்படியெல்லாம் ஒன்றுமில்லைமா, எதற்கும் ஒரு நேரம் வர வேண்டாமா... அது சாி இன்றைக்கு எனக்கு ஆபிஸில் முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கு. நான் கிளம்புகிற வேலையை பாா்க்கிறேன், நீங்கள் காலையிலேயே இந்த பேச்சை எடுத்திருப்பதை பாா்த்தால் இப்பொழுதைக்கு முடிக்க மாட்டீர்கள் என்பது தெரிந்து விட்டது. பை மா... சாயந்திரம் பாா்க்கலாம்... நான் வருகிறேன்!" என்று அஜய் எழுந்தான்.
"சாயந்திரம் தானே ... உன் மொழியில் சாயந்திரம் எனறால் இரவு தானே மகனே!" என்றாா் அவர் நக்கலாக.
பதிலேதும் கூறாமல் வருத்தமான புன்னகை ஒன்றை அவரிடம் உதிர்த்து விட்டு அவ்விடத்திலிருந்து அகன்று செல்லும் தன் மகனையே கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் லக்ஷ்மி.
வழியெல்லாம் யோசனையோடு காரை ஓட்டி சென்ற அஜய்க்கு, அலுவலகம் சென்ற உடன் அவனுக்கென்று காத்திருந்த சிலபல முக்கியமான வேலைகள் மற்றதை மறக்கச் செய்தன.
அஜயிடம் இருக்கும் நல்ல குணங்களில் அதுவும் ஒன்று, எப்பொழுதும் அலுவலையும், தனிப்பட்ட வாழ்க்கை போராட்டங்களையும் ஒன்றாக போட்டு குழப்பிக் கொள்ள மாட்டான்.
அலுவலகத்தில் எவ்வளவு சமாளிக்க முடியாத பிரச்சனை என்றாலும் இயன்றளவு தன்னை கொண்டே அவற்றை சமாளித்து விடுவான். அது போலவே வீட்டில் ஏற்படும் பல்வேறு சோதனைகளையும் ஒற்றை ஆளாய் சமாளித்து தன்னுணர்வுகள் எதனையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் தனி ஆளாக தொழிலை வெற்றிகரமாக நடத்தி வருகிறான் அஜய்.
______________________________________
Story was removed only sample chapters available.
YOU ARE READING
எனை மன்னிக்க வேண்டுகிறேன்
Romance2021 புத்தக கண்காட்சிக்காக புத்தகமாக பதிக்கப்பட்டு விற்பனையில் உள்ளது. தன்னைச் சுற்றியிருந்த சூழ்நிலைகள் சரியில்லாத மோசமானதொரு தருணத்தில் தவறான முடிவெடுக்கும் நாயகன் தன் வாழ்க்கையை மட்டுமல்லாது நாயகியின் வாழ்க்கையையும் சேர்த்து மிகுந்த சிக்கலாக்கி வ...