ஆதார் அட்டையில் பதிவான தகவல்கள் கசிந்தது உண்மையே: ஒப்புக் கொண்டது மத்திய அரசு

2 0 0
                                    


புது தில்லி: ஆதார் அட்டை எண் மற்றும் அதில் இணைக்கப்பட்ட விவரங்கள் இணையதளத்தில் கசிந்தது உண்மையே என்று மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. தனி நபர்களின் முக்கிய தகவல்கள் அடங்கிய ஆதார் தகவல்கள், இணையம் வாயிலாக கசிந்ததை மோடி தலைமையிலான மத்திய அரசு முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளது.

ஆதார் தகவல்கள் திருடப்படலாம் என்றும் அதன் பாதுகாப்பில் இன்னும் தீவிரம் காட்டப்பட வேண்டும் என்றும் வந்த ஏராளமான எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்திய மத்திய அரசு, தற்போது தகவல்கள் கசிந்திருப்பதை பகிரங்கமாக தெரிவித்துள்ளது. மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் மார்ச் 25ம் தேதி எழுதப்பட்ட கடிதத்தில், ஆதார் தகவல்கள் கசிந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆதார் எண், அந்த நபரின் பெயர், பிறந்த தேதி, வங்கி கணக்கு எண், முகவரி போன்று தனி நபர்களின் விவரங்கள் கசிந்திருப்பது, ஆதார் சட்டம் 2016ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த செயலில் ஈடுபட்டவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கலாம் என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மார்ச் 5ம் தேதி மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் எழுதப்பட்ட கடிதத்தில், ஆதார் தகவல்கள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாகவும், ஆதார் தகவல்கள் கசிந்ததாக தவறான தகவல்கள் பரபரப்படுவதாகவும், எந்த ஆதார் தகவலும் கசியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை, நாடாளுமன்றத்தில் பேசிய முன்னாள் நிதித் துறை அமைச்சர் ப. சிதம்பரம், ஆதார் தகவல்கள் குறித்து கேள்வி எழுப்பியதும், இணையத்தில் கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியின் ஆதார் தகவல்கள் வெளியிடப்பட்டிருப்பது குறித்து அவரது மனைவி சாஷி தோனி சமூக தளத்தில் குற்றம்சாட்டியிருந்ததும், ஆதார் தகவல் திருட்டை மேலும் பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.

ஆதார் அட்டையில் பதிவான தகவல்கள் கசிந்தது உண்மையே: ஒப்புக் கொண்டது மத்திய அரசுWhere stories live. Discover now