"டூரிஸ்ட் ஸ்பாட்தான் போகணும்""இல்ல யாத்திரை தான் போகணும்"
"யாத்திரை போற வயசா எனக்கு?"
"யாத்திரை போகறத்துக்கு வயசு வித்தியாசம் இல்ல.பக்தி இருக்கறவா யாரானாலும் போலாம்"
"அப்படி ஒண்ணும் பக்தி முத்தி போகல எனக்கு.எனக்கு டூரிஸ்ட் ஸ்பாட்தான் போகணும்.அதுவும் ஹில் ஸ்பாட்தான்.அழனாக மலையும் நதியும் பாக்கறத்துக்கு எவ்ளோ நன்னா இருக்கும்"
"ஆமா மலையும் மரத்தையும் மட்டயும் பார்த்தா புண்ணியமா கெடைக்கும்? யாத்திரை போய் சுவாமி தரிசனம் பண்ணா கொஞ்சம் புண்ணியமாவது கெடைக்கும்"
"எனக்கு இந்த வாட்டி அந்த புண்ணியம் வேண்டாம் அடுத்த வாட்டி அதப் பாக்கலாம்.இப்ப ஜாலியா டூர் போலாம்"
"காலம் கலிகாலாமாயிடுத்து.இந்த காலத்து கொழந்தேளுக்கு சுவாமி பக்தி க்ஷேத்திராடனம் இதெல்லாம் வேண்டாம்.டூர் ஷாப்பிங் இது ரெண்டும் இருந்தா போறும்.எடி மங்களம் நீதான் ஒம்பொண்ணுக்கு சொல்ல கூடாதா?"என்றார் பஞ்சாபகேசன் தன் சஹதர்மிணி மங்களத்திடம்.
"அப்பா நீங்க சும்மா இருங்கோ அம்மா என் கட்சிதான்.இல்லயாமா?"
"நா ஒங் கட்சியும் இல்ல உங்கப்பா கட்சியும் இல்ல.ரெண்டு மணி நேரமா நீங்க ரெண்டு பேரும் இப்பிடியே சண்டை போட்டுண்டு இருக்கேள்.நானும் விச்சுவும் உங்களுக்கு சொல்லி எங்க தொண்ட வரண்டு போயிடுத்து.நீ வாடா விச்சு நா நோக்குப் பிடிச்ச பக்கோடா பண்ணி கொடுக்கிறேன்."என்று தன் பன்னிரெண்டு வயது மகன் விச்சு என்ற விஸ்வநாதனை அழைத்தார் அவர்.
"நீ இரும்மா அக்கா!உனக்கும் வேண்டாம் அப்பாக்கும் வேண்டாம்.நான் ஒரு ஐடியா சொல்றேன்"
"ஏன்டா எங்க ரெண்டு பேரோடதும் வேண்டாம்னா உனக்கு எங்கயாவது கிரிக்கெட் மாட்ச் பாக்க போகனுமா?அதுக்காக சொல்றியா?"
"ஐய்யோ அபிஷ்டு அக்கா என்ன கொஞ்சம் பேச விட்றயா?"
"சரி சொல்லித் தொல"
"நா சொல்ல வந்தது உங்க ரெண்டு பேருக்கும் பொதுவா இருக்கற ஊர செலக்ட் பண்ணுங்கோ.அங்க அப்பா விரும்பற கோயிலும் இருக்கனும் ஒனக்கு புடிச்ச ஹில் ஸ்டேஷனாயும் இருக்கனும்."
அதைக் கேட்ட பஞ்சாபகேசன்,
"ஏன்டா விச்சு அப்படி ரெண்டும் இருக்கற ஊர் எங்கடா இருக்கு?"தந்தை தன்னிடம் கேட்டதை எண்ணி மகிழந்த விச்சு,"ஏன் இல்லாம அந்த மாதிரி ஊரு வேணுங்கறது இருக்கு நம்ம இந்தியாவுல"
"அதுல நாலஞ்ச சொல்லேன் கேட்போம்"
அவர்கள் அதைப் பற்றி விவாதிப்பதற்குள் நாம் அவர்கள் குடும்பத்தைப் பற்றிய சிறு அறிமுகத்தைப் பார்ப்போம்.
பஞ்சாபகேசனும் சரி மங்களமும் சரி கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள்.திருமணத்திற்குப் பின் சென்னை வந்து சேர்ந்தார்.மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்.மனைவி மங்களம் குடும்பத் தலைவி.மகள் நித்யகல்யாணி பி.ஏ.தமிழ் இலக்கியம்.இரண்டாவது அவள் தம்பி விச்சு ஏழாம் வகுப்பு படிப்பவன்.
பி.ஏ.இறுதி ஆண்டு தேர்வை முடித்த நித்யா முதுநிலை படிப்பிற்கு சேருவதற்கு முன் கிடைத்த லீவில் எங்காவது மலைவாழ் பிரதேசத்திற்கு செல்ல விரும்பினாள்.ஆனால் அவள் தந்தையோ யாத்திரை செல்ல விரும்பினார்.ஆரம்பத்தில் பார்த்ததுப் போல் இருவரும் அதற்காக சண்டையிட்டு இறுதியில் விச்சுவினால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
பல ஊர்களை அலசி ஆராய்ந்தப் பின் கடைசியில் ஹரித்வார் ரிஷிகேஷ் போவதாக தீர்மானவாகியது.அதற்கும் முதலில் மங்களம்,
"வயசு பொண்ண அழைச்சுண்டு அவ்ளோ தூரம் பாஷ தெரியாத ஊருக்கா?!"என தன் ஆட்சேபனையை தொடங்கினாள்.ஆனால் அழுது விடுபவள் போல் இருந்த மகளின் முகம் பார்த்தவள்,
"சரி சரி அங்கேயேப் போலாம்.டிக்கெட் புக் பண்ணுங்கோ"என்று தன் சம்மதத்தைத் தெரிவித்தாள்.
இன்னும் நான்கு நாட்களில் கிளம்புவதாகத் தீர்மானம் செய்தனர்.அந்த பயணம் நித்யகல்யாணியின் வாழ்க்கையை மாற்றப் போவதை அறியாமல்.
YOU ARE READING
விழியே உன் மொழி என்ன?
Romanceஹீரோ:ரிஷி ஹீரோயின்:நித்யகல்யாணி அவள் தெற்கு;அவனோ வடக்கு அவள் உண்பதோ இட்லி சாம்பார்;அவனோ ரொட்டி சப்ஜி அவள் பேசுவது தமிழ்;அவனோ ஹிந்தி இந்த இரண்டு துருவங்களும் இணைந்தால்? புனிதமான காதல் ஜாதி மதங்களை மட்டுமல்ல இனம் மொழி எல்லாவற்றையும் தாண்டியது.அதை படம்...