நான்கு ஆண்டுகளுக்கு பிறகு
போனை ஆஃப் செய்து திரும்பிய ஆனந்தின் முகத்தை பார்த்தே விஷயத்தை அறிந்த அவன் மனைவி நீலா,
"என்னாச்சு?"என்றாள்.
"சீரியஸ்ஸா இருக்கான்னு ஆஸ்பிட்டல்லேந்து"
"உடனே கிளம்புங்க! எத்தனை நாள் ஆனாலும் இருந்து அவ குணமான உடனே இங்கேயே கூட்டிட்டு வந்துடுங்க"என்றாள்.
இதுதான் நீலாவிடம் அவனுக்கு பிடித்த விஷயம்.சொல்லாமலே அவன் மனதில் இருப்பதை புரிந்து கொண்டு விடுவாள்.
அவள் பிழைப்பதில் அவனுக்கு சிறிதளவே நம்பிக்கை இருந்தாலும் அதை அவளிடத்தில் சொல்லாமல் "சரி"என்றபடி வேகவேகமாக புறப்பட்டவன்,
"சுமனா, நிரஞ்சன்,குணா எல்லாருக்கும் போன் பண்ணி சொல்லிடுறியா?"
"சொல்றேன்.. நீங்க கவலப்படாம போய்ட்டு வாங்க"என்றாள் நீலா.
திருநெல்வேலியிலிருந்த அந்த நவீன மருத்துவமனையின் முன் காரை நிறுத்திய ஆனந்த் ரிஸெப்ஷனில் கேட்ட போது அவர்கள் ஐசியூவிற்கு வழி கூறினர்.அங்கே கண்ணாடி வழியாக பார்த்த போது ஆனந்தின் இதயத்தில் ரத்தம் வழிந்தது.பலதரப்பட்ட வொயர்கள் அவளோடு பிணைக்கப்பட்டிருந்தது.செயற்கை வாயுவினால் மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள்.ஆனந்தை அங்கே நிற்பதைப் பார்த்த டாக்டர் அவனை தமது அறைக்கு அழைத்துச் சென்றார்.
"சாரி டு ஸே திஸ் டாக்டர் ஆனந்த்! டாக்டர் சஹானா அவங்களோட கடைசி கட்டத்துல இருக்காங்க... இன்னிக்கி ராத்திரிய தாண்டறதே கஷ்டம்..."என்றார் அவர்.
"டாக்டர்!... ஏதாவது செஞ்சு அவள காப்பாத்த முடியாதா?"
"அவங்கள காப்பதறத்துக்கு ஒரு வழியும் அவங்க விட்டு வைக்கல...டாக்டரான உங்களுக்கு நா சொல்ல வேண்டியதில்ல...மனித உடல் இரும்பில்ல.... ஆரோக்கியமா இருக்க உணவும் ஓய்வும் அவசியமானது.அவங்கள பத்தி விசாரிச்சதுல கடந்த நாலு வருஷமா அவங்க சரியா சாப்பிடவும் இல்ல... தூங்கவும் இல்ல...உடம்பு எத்தன நாள் தாங்கும்? அதுமட்டுமல்லாம உங்களுக்கும் தெரிஞ்சிருக்கலாம்... இந்த பக்கங்கள்ல திடீருன்னு ஒருவித விஷக் காய்ச்சல் பரவிடிச்சு... அதுக்காக வந்த மெடிக்கல் டீம்ல இவங்களும் ஒருத்தர்.கேம்ப்ல இருந்த டாக்டர்ஸ் எல்லாருக்கும் காய்ச்சல் அவங்களுக்கு வராம பாதுகாப்பா இருக்க இன்ஸ்டெர்க்ஷன்ஸ் குடுத்திருந்தாங்க...ஆனா இவங்க அதெல்லாம் பின்பற்றலன்னு தெரியுது...இப்ப அதோட எஃபெக்டனால உறுப்புகள் ஆல்மோஸ்ட் செயல் இழந்துடுச்சு... இதுக்கும் மேல நாம என்னதான் மருந்து கொடுத்தாலும் பேஷண்ட் பிழைக்க அவங்களும் ட்ரை பண்ணனும்...ஆனா இவங்க மருந்துகளுக்கு எந்த ரெஸ்பாண்டும் பண்றதில்ல... மொத்தத்துல அவங்களுக்கு வாழற ஆசையே இல்லேன்னு தான் சொல்லனும்.."என்று முடித்தார் மருத்துவர்.