அந்த மாலைப் பொழுதில் மழையின் காரணமாக தன் பகுதி நேர வேலைக்கும் செல்ல முடியாமல் வீட்டிற்கும் செல்ல முடியாமல் இடையில் தவித்துக் கொண்டிருக்கிறாள் கீதா. இறுதியில் ஒரு முடிவுடன் தன் வேலைக்கு செல்கிறாள் .கீதா காமராஜர் கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு படித்து வருகிறாள் .அவள் இரவு 10 மணி அளவில் வேலை முடிந்து வீடு திரும்பும் போதும் மழை நிற்கவில்லை ,அவளது அம்மா லட்சுமி ,"ஏன் கீதா இந்த மழையில் வேலைக்கு போனாய் இன்று ஒருநாளாவது ஓய்வெடுக்க வேண்டியது தானே "என்று கூறிக் கொண்டே கதவை திறந்து உள்ளே செல்கிறாள்.
கீதா தனது அறையில் நனைந்த உடைகளை மாற்றிவிட்டு ஜன்னலின் அருகே அமர்ந்து கொண்டு மழையை வேடிக்கை பார்த்த வண்ணம் சிந்திக்கிறாள் ,'கடந்த சில நாட்களாகவே என் மனம் ஏன் இப்படி சிந்திக்கிறது ஒருவேளை அந்த அகழ்யா கூறியது உண்மையாக இருக்குமோ? இல்லை இல்லை இருக்காது, என்று குழம்பிய வண்ணம் சிந்தித்துக் கொண்டே துங்குகிறாள் கீதா.
அதிகாலை சீக்கிரமாகவே எழுந்து தயாராகி தன் அம்மாவிடம் அம்மா நான் கல்லூரிக்கு சென்று வருகிறேன் என்று கூறினாள். அதற்கு அவளது அம்மா ,"இன்று கல்லூரியிலிருந்து சீக்கிரமாக வீட்டிற்க்கு வந்துவிடு உன்னை பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வர உள்ளனர்" என்று கூறினாள்.சரி என்று கூறியவாறு கீதா கல்லூரிக்கு செல்கிறாள்.
அன்று கல்லூரியில் கீதா தன் தோழிகள் ஆனந்தி ,அமுதா மற்றும் கவிதாவுடன் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அப்போது அமுதா,"கீதா, நீ திருமணம் செய்து கொள்ள இருக்கும் சுந்தரியின் குடும்பம் கூட்டுகுடும்பம் நீ அங்கே திருமணமாகி சென்றபின் உன்னால் எந்த ஒரு சொந்த முடிவும் எடுக்க முடியாது ; அவர்கள் கூறுவதை தான் நீ கேட்க வேண்டும் ; அதனால் நீ திருமணமாகிச் சென்ற உடனே தனிக்குடித்தனம் செல்ல சுந்தரிடம் கேள்", என்று மறுபடியும் தீயகருத்தை அவளது மனதில் விதைக்கிறாள்.
கல்லூரி படிப்பு முடிந்து இரு வாரங்களில் கீதாவின் திருமணம் நன்றாக நடைபெறுகிறது . அவளது கணவனுக்கு, இரண்டு அண்ணன்கள் இரண்டு தம்பிகள்; ஐந்து சகோதரர்களும் பஞ்சபாண்டவர்கள் போன்று அன்புடன் வாழ்ந்து வந்தனர். ஆனால் கீதாவின் மனதிலோ தனிகுடிதனத்தைப் பற்றிய எண்ணங்கள் மட்டுமே ஓடிக் கொண்டிருந்தன.
அந்த வீட்டின் இரண்டாவது மருமகள் சுமதி சற்று சோம்பேறி , தன் வேலைகளை செய்வதை அவளுக்கு பெரிய விஷயம்; ஆனால் மூத்த மருமகள் மஞ்சுளாவோ அதிகாலை வீட்டின் முற்பகுதியில் கோலம் போடுவதிலிருந்து இரவு அனைவருக்கும் சாப்பாடு செய்து பரிமாறுவது வரை கடிகார முள்ளை போன்று நிற்காமல் ஓடிக்கொண்டே இருப்பாள். தனியளாய் வளர்ந்த கீதாவுக்கு முதலில் இதை கண்டவுடன் வித்தியாசமாக இருந்தது .அவளுக்கு தன்னுடைய அக்கா மஞ்சுளாவை மிகவும் பிடித்திருந்தது .அதனால் அவள் தன்னுடைய எண்ணத்தை முதலில் மஞ்சுளாவின் கூறினாள்.அதைக் கேட்ட மஞ்சுளா," கீதா, இன்றைய காலத்தில் கூட்டுக் குடும்பம் என்பதே மிக அரிதான ஒன்றாகிவிட்டது; தனிக்குடித்தனம் செல்ல உன்னிடம் ஆயிரம் காரணங்கள் இருக்கலாம், ஆனால் ஒரு கூட்டுக் குடும்பத்தில் தான் அனைவரின் அன்பையும் பொறுமையாக இருக்கும் குணத்தையும் விட்டுக்கொடுக்கும் தன்மையும் நீ பெற முடியும். அதனால் இப்படி எந்த ஒரு அனுபவம் இல்லாத, உன் வயதில் இருக்கக்கூடிய ஒரு தோழி கூறியதை கேட்டு எந்த தவறான முடிவும் எடுக்காதே ;உன் தோழிக்கும் நீ உன்னுடைய கூட்டுக் குடும்பத்தின் பெருமையை எடுத்துக் கூறு",என்று கூறினாள்.
இதைக் கேட்ட கீதாவின் எண்ணங்கள் மாறின. அவள் தனது புதிய குடும்பத்தை நேசிக்கத் தொடங்கினாள்.காலப்போக்கில் கூட்டுக் குடும்பமே சிறந்தது என்பதை உணர்ந்து தன் இரு பிள்ளைகளுடன் அக்குடும்பத்தில் ஆனந்தமாக வாழ்ந்து வந்தாள்.