' சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவேன்
பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின்
மறக்குவேன் கொல் என் காதலன் எனவே'நான் சாவதற்கு கூட அஞ்சவில்லை, வேறு ஒன்றிற்காக அஞ்சுகிறேன்.நான் இறந்து மறுபிறவி என்ற ஒன்றை எடுத்தால் அப்பிறவியில் என் மன்னவனை மறந்துவிடுவேனோ! என்று தான் அஞ்சுகிறேன் என்று தலைவி உருக்கமாக கூறும் நற்றிணை பாடல் வரிகளில் மூலம் அறியலாம் அக்காலங்களில் தலைவி தலைவன் மேல் கொண்ட காதலின் ஆழத்தை.
காதல் , இதை கடந்து வராதவர்களை எளிதில் எண்ணிவிடலாம்...
அசடனை அறிவு கூர்மை மிக்கவனாகவும், ஓவியம், இசை என பல கலைகளில் சிறந்து விளங்குபவனை பித்தனாக்குவதும் தான் காதல்.காதலனின் கரம்கோர்க்காமல், கண்களால் காதலைக் கூறி ,அவனுடன் வாழத் தொடங்கும் நேரத்திற்காக காத்திருந்து அது நடக்காமல் போக வேறு ஒருவனுக்கு கழுத்தை நீட்டினாலும் அவள் நிழலைக் கூட அவன் தொட அனுமதியாது இறுதி வரை காதலனின் நினைவுகளிலே வாழ்ந்து இறந்த லைலாவின் காதல் என்னை பிரம்மிக்க வைத்தது உண்மை தான்.
ஆப்பிரிக்காவிற்கும் ஆசியாவிற்கும் இடையில் தென்மேற்கு ஆசியாவில்
உள்ள ஒரு தீபகற்பமே அரபு நாடு.வாசனை திரவியங்களுக்கும், பேரிச்சை பழங்களுக்கும், இஸ்லாமியக் கொள்கைகளுக்கும் பெயர் போன இந்நாடு 7ம் நூற்றாண்டில் இவர்களின் காதல் காவியத்தால் இன்னும் பெயர் பெற்றது எனத் தான் கூறவேண்டும்.
லைலா அல் ஆமிரா கண்களால் அனைவரையும் கைது செய்பவள், இளவரசியாக அந்த அரண்மனையில் வலம் வருபவள்,கண்கள் மட்டுமே தெரியுமளவு தான் அவளின் ஆடை அலங்காரங்கள் இருக்கும்.
மிகப் பெரிய செல்வந்தரின் மகளான இவளுக்கு படிப்பதில் சிறு ஆர்வம்.அதைக் கெடுக்க விரும்பாத அவரின் தந்தையும் பாடசாலைக்கு அனுப்பிவைத்தார்.
முக்காடிட்ட தலை, மூக்கு வரை துணி, கண்கள் மற்றும் நெற்றி மட்டுமே தெரியுமளவு தான் இவளும் பாடசாலைக்கு சென்று வந்தாள்.