அவளொரு பட்டாம்பூச்சி

8 2 2
                                    


தேவதை வருகைக்காக காத்திருந்த தருணமது. கொஞ்சம் பயத்துடனும், கொஞ்சம் பதற்றத்துடனும் கடந்த அந்த நொடிகளில், மனதுக்குள் ஏதோ ஒரு புரியாத உணர்வு. வார்த்தைகளால் வர்ணிக்க முடியாமல் வலியோடு கூடிய சுகத்தில் தவிக்கும் தந்தையின் கையில், தேவதையாய் அவள் வந்தாள். கண்ணீர் துளிகளோடு அவளை அணைத்து கொள்ள கற்கண்டு போல் இனித்த கண்ணீர் துளிகள் கவிப்பாடியது. கவிதையின் மொழியானவளுக்கு வெண்பா எனப் பெயரிட்டான். மரபிலக்கணத்தின் அரசி அன்று காதல் சின்னமானாள். வேறென்ன‌ வேண்டும் ஒரு தந்தைக்கு, தன்னை அதட்ட‌ இன்னொரு தாய் பிறந்து விட்டாள் அல்லவா! விரல் பிடித்து நடக்கும் அவள் ஒரு விந்தை. மழலை பேசும் மழைத்துளி. அவள் பொழுதுகள் விடிவதும் தன்‌ தந்தை முகத்தில் தான்! அவள் இரவுகள் முடிவதும் தன் தந்தை மடியில் தான்!

தன்‌ தந்தை செய்வதை கண்ணாடி போல் பிரதிபலிக்கும் பிம்பம் அவள். "அப்பா" என்பது அவள் மூன்றெழுத்து மந்திரம். மூச்சுக்கு முன்னூறு தடவை "அப்பா" என்றழைக்கும் அல்லி ராணி அவள். அவள் உலகில் அப்பாவை தவிர வேறு எதுவுமில்லை. அவருக்கோ தன் மகளே உலகம். அவள் வாய் திறந்து கேட்கும் முன்னே அனைத்தையும் வாங்கி கொடுத்திடுவார். மகள் கேட்டால் போதும் நிலவில் கூட வீடு கட்ட துணிந்திடுவார்.

அவர் "வெண்பா" என்றவுடன் துள்ளி குதித்து ஓடி வந்து அருகில் நிற்பாள். அப்பா என்றால் அவளுக்கு உயிர். அவருக்கு ஒன்றென்றால் துடித்திடுவாள். அவருக்கும் அப்படி தான். மகளின் கனவுகளுக்கு உயிர் கொடுத்து அவள் சிரிப்பில் வாழ்ந்திடுவார். தன் மகளின் பேச்சில் உலகையே மறந்திடுவார். நாள் முழுவதும் பேசினால் கூட அவர்களிடம் பேசுவதற்கு வார்த்தைகள் மிச்சம் இருக்கும். இருவரின் அன்பை விவரிக்கும் போட்டியில் விண்மீன்கள் கூட தோற்று தான் போனது.

வெண்பா என்று பெயரிட்டதால் என்னவோ அவளுக்கு தமிழ் மீது அளவில்லா பற்று. அப்பாவும் மகளும் தமிழ் பற்றி பேசத் தொடங்கிவிட்டால் போதும் அன்னம் தண்ணீர் வேண்டாம் இருவரும் தமிழையே சுவாசிப்பர்‌. அப்பா தான் அவளுக்கு எல்லாமே. அவரை மட்டுமே அவள் சுற்றிச் சுற்றி வருவாள். அவளுக்கு தோன்றும் அனைத்தையும் அவரிடம் கொட்டிக் தீர்ப்பாள். அவள் ஆசைகளையும் கனவுகளையும் அறிந்த ஒரே ஜீவன் அவள் தந்தை தான். அவள் வார்த்தைக்கு மறு வார்த்தை சொல்லாமல் சரி என்பதை மட்டுமே பதிலாக தருபவரும் அவரே.

அவளொரு பட்டாம்பூச்சிWhere stories live. Discover now