என் மனசை கொள்ளை அடிச்சிட்டுப் போயிட்டார் ஒரு மணிப்பூர் டாக்டர். சர்ஜரி டிபார்ட்மெண்ட் போஸ்ட்-கிராஜுவேட் ஸ்டூடண்ட். நான் அவரோட இன்டர்ன். ரெண்டு பேரும் சேர்ந்து முப்பது, நாற்பது நோயாளிகள் கொண்ட வார்டை பார்த்துக்கொள்வோம். பணிக்காக எப்போதும் என்னுடனே இருக்க நேரிடும் அவருக்கு. அவர் தமிழ்நாட்டில் தான் இளங்கலை மருத்துவப் படிப்பை முடித்துள்ளதால் அழகாகக் தமிழ் பேசவார். அதில் வரும் வடநாட்டு சாயல்கூட அழகாகத் தான் இருக்கும். க்யூட்டான பூப்போட்ட அரைக்கை சட்டைகள் அணிந்து வருவார். சந்தனக் கலர் ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்து வருவார். செம்ம ஸ்டைல். வேலையில் ஏதும் சுணக்கம் இருந்தால் கடிந்துகொள்வார். ஆனால் அதுகூட அழகாகத்தான் இருக்கும்.
சுமார் இருபது நாட்கள் தான் அவருடன் வேலை பார்த்திருப்பேன். இப்போது அவர் விடுமுறைக்காக மணிப்பூர் சென்றுவிட்டார். அவர் திரும்ப வரும்போது நான் பட்டமளிப்பு விழா முடிந்து ஊருக்குத் திரும்பியிருப்பேன். சொல்லப்போனால், மீண்டும் இருவரும் சந்திப்போமா என்பதே கேள்விக்குறி தான். அவர் சென்று நான்கு நாட்கள் தான் ஆகிறது என்றே நம்பமுடியவில்லை. மனது ஏனோ பாரமாகவே இருக்கிறது. அவ்வப்போது வாட்சாப்பைத் திறந்து அவரிடம் ஏதாச்சும் பேசலாமா என நினைத்து, பின் தயங்கி, பழைய குறுஞ்செய்திகளை மட்டும் படித்துப் பெருமூச்சு விட்டுவிட்டு மூடிவிடுவேன். அவருடன் இருந்தபோது பெரிதாக எதுவும் தெரியவில்லை. சில நேரங்களில் அவர்மீது கோபமும் சலிப்பும் கூட வந்திருக்கிறது. ஆனால், இப்போது அவர் இல்லை எனும்போது ஏக்கமாக இருக்கிறது. இத்தனைக்கும் அவர் ஒருமுறை கூட என்னிடம் வேலை விஷயம் தவிர வேறு எதுவுமே சொன்னதில்லை. எப்படி அவரை இவ்வளவு பிடித்துப்போனது என்று சத்தியமாகத் தெரியவில்லை. 'போய் வருகிறேன்' என அவர் சொல்லிச் செல்லும்போது அழாமல் இருக்க சிரமப்பட்டேன். கைகுலுக்க மட்டும் செய்தேன். 'பத்திரமாக போய் வாருங்கள்' என்றேன். அதன்பிறகு நண்பர்கள் தான் கேட்டனர், 'ஏன் இவ்ளோ உம்முனு இருக்க?' என்று. ரொம்பவே சோகமாக இருந்தேன் அந்த நாள் முழுக்க.
அவசர சிகிச்சைப் பிரிவில் தலைக்குமேல் வேலை இருந்து, நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் போது கூட, அவரை நினைக்கத் தவறவில்லை. அதனால்தான், அவரைப் பற்றி எழுதினாலேனும் கொஞ்சம் ஆறுதல் கிடைக்குமோ என இங்கே வந்தேன்.