"இவ்வளவு உடம்பு சரி இல்லாம எதுக்கு போற, ஒரு நாள் லீவு போடுன்னு சொன்னா கேக்கறாளா பாரு, திமிரு புடிச்சவ" என்று புலம்பியபடி சமயலறையில் எதோ கை வேலையாக இருந்த வசந்தி 'எழுப்பினாலும் எழுந்திரிக்க மாட்டேங்குறா, எழுப்பாம விட்டாலும் திட்டுவா' என்று நினைத்துக்கொண்டே "மதி, லேட் ஆச்சு இப்போ எழுந்தரிக்க போறியா இல்லையா" என்று கத்த, அந்த சத்தத்தில் அரக்கபரக்க எழுந்தாள் மதி என்ற மதிவதனி.
எழுந்தவள் தனது அலைபேசியில் நேரத்தை பார்க்க அது 6 மணி 45 நிமிடம் என நேரத்தை காட்டியது, 'அய்யோ என்ன இவ்வளவு நேரம் தூங்கிட்டோம்' என்று மனதில் நினைத்தபடி "அம்மா கொஞ்சம் சீக்கரம் எழுப்ப வேண்டியது தான, நான்தான் நேதிக்கே சொன்னேன்ல இன்னைக்கு சீக்கிரம் போகனும் முக்கியமான வேலை இருக்குனு" என்று தன் தாயிடம் குறைபட்டு கொண்டே படுக்கையை எடுத்து வைத்தபடி "ஆமா டி தள்ள தள்ள நகராத தேரு மாதிரி எழுப்ப எழுப்ப எழுந்தரிக்காம தூங்கிட்டு இப்போ என்ன வந்து சொல்லரியா..." என்று தொடர்ந்த தன் தாயின் வசவுகளை கண்டுகொள்ளாமல் அவசர அவசரமாக கிளம்பி முடித்து அந்த சிறிய முன்னறையில் இருந்த கடிகாரத்தில் நேரத்தை பார்க்க, அது நேரம் 7 மணி 15 நிமிடம் என்றும் அவள் வழக்கமாக கிளம்பும் நேரம் தாண்டி 5 நிமிடம் ஆனதாகவும் காட்டியது.
"ஐயோ போச்சு" என்று தன் தலையில் அடித்துக் கொண்டவள் "சாப்பிட்டு போ டி" என்ற தன் தாய்க்கு "அம்மா லேட் ஆச்சு நா கேண்டீன்ல காபி குடிச்சுக்கறேன்" என்று பதிலளித்தபடி தன் பாக்கை எடுத்துக்கொண்டு வாசலில் இறங்கி வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.
எவ்வளவு வேகமாக சென்றும் பள்ளி பேருந்தை விட்டுவிட வேறு வழி இல்லாமல் அடுத்து வந்த கூட்டமான பேருந்தில் ஏறி நிற்க அவள் நல்ல நேரம் அடுத்த நிறுத்தத்தில் ஒருவர் இறங்க அவள் அமர இடம் கிடைத்தது.
அந்த ஜன்னலோர இருக்கையில் சென்று கண்களை மூடி அமர்ந்தவள் நினைவலைகள் அவளை 5 வருடம் பின்னோக்கி இழுத்துச் சென்றது