அலாரம் அடிப்பதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்னாடியே பெரும்பாலும் விழித்து விடுவேன். அலார சத்தத்தில் எழுந்திருப்பது, யாரோ அடித்து எழுப்பி விடுவது போல காலையில் எரிச்சலை ஏற்படுத்தும். அன்றும் அப்படி காலத்தை வென்று, கடிகாரத்தின் தலையில் தட்டிவிட்டு எழுந்தேன். ஜன்னல் வழியே பனி விழுவது ஒன்றும் அழகாய்த்தெரியவில்லை.ஹாலுக்கு வந்து மூலையில் இருந்த ஹீட்டரில் ரெண்டு புள்ளிகள் கூட்டினேன். தல்பீர் ரூமிலிருந்து சத்தம் வந்தது.
"சிவா நீங்க குளிச்ச பிறகு என்னை மறக்காம எழுப்புங்களேன்.."
"டேய்..ட்ரெஸ் பண்ணிட்டு வந்து எழுப்பனுமா..இல்ல அப்பிடியே வந்து எழுப்பனுமா.."
பதிலேதும் வரவில்லை. குளிர் உடம்பு முழுக்கக்குத்தியது. பல்லை விளக்கிக்கொண்டே ஜன்னல் பக்கம் போனேன். வானத்திலிருந்து மாவை சலித்து விட்டது போல பனி விழுந்துகொண்டிருந்தது.எங்கும் வெள்ளை மயம் ."என்ஸ்கடே" வந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது. "எஸ்கடே" நெதர்லாந்தின் கடைக்கோடியில் இருக்கும் ஒரு டவுன். ஜெர்மனிக்கு மிக அருகாமையில் இருக்கும் ஸ்தலம். சில உள்ளூர்க்காரர்கள் இங்கிருந்து எச்சில் துப்பினால் ஜெர்மனியில் விழுந்து விடும் என சொல்வார்கள். துப்பி உறுதி செய்தார்களா தெரியவில்லை ஆனால் ஜெர்மனி பதிமூன்று கிலோமீட்டர் தூரம்.நாங்கள் வேலை செய்யும் கார்ப்பரேட் கம்பெனி சார்பில் அங்குள்ள ஆட்டோ மொபைல் நிறுவனத்தில் ஐ.டி மராமத்துப்பணிகள் நடந்து வருகின்றன.அந்த தெய்வீகப்பணியில் இந்தியாவிலிருந்து மொத்தம் அறுபது பேர் இடம் பெற்றிருந்தோம். அலுவலகத்திலிருந்து எங்கள் அறுபது பேருக்கும் தங்குவதற்காக ஒரு பெரிய ரெஸார்ட்டை புக் செய்திருந்தார்கள். அது ஊருக்கு வெளியில் ஆங்கில பேய்ப்பட பாணியில் அமைந்திருந்தது.சில வட இந்திய நண்பர்கள் இவ்விடத்தை "காலாப்பாணி" என கேலி செய்வார்கள். அதாவது சிறைச்சாலை. காலையிலிருந்து இரவு வரை கடுமையான வேலை எங்களுக்கு இருந்து வந்தது.
![](https://img.wattpad.com/cover/269425690-288-k727413.jpg)
CZYTASZ
ஆரஞ்சுக்காவியம் -பகுதி 1
Humorஆரஞ்சு தேசமான நெதர்லாந்தில் வாழும் ஒரு ஐ.டி இளைஞன் தன் வாழ்வின் சூட்சமங்களையும் முடிச்சுகளையும் எதிர்கொள்ளும் நிகழ்வுகளின் தொகுப்பு.