காணாமல் போனவர்

119 15 29
                                    

       அந்த நாளின் கொடூரம் ஸ்லோ மோஷனில் இன்னுமே அவரது மனத்திரையில் ஓடிக் கொண்டிருந்தது. அப்துர் ரவூஃப் தன் பிறந்த மண்ணை விட்டுத் தகர்த்தெரியப்பட்ட அந்த நாள் இன்னுமே அவரது நினைவலைகளைத் தட்டி, இதயத்தைக் குத்தி இரத்தக் கண்ணீரை வடியச் செய்தது.

கடற்கரையில் கூட்டுக் குடும்பமாக் வாழ்வது எத்தனை பெரிய பாக்கியமென்று அவர் எண்ணாத நாளே இருக்கவில்லை. ஓங்கி எழுந்து ஓசையெழுப்பி மடியும் கடலலைகள் அவரது மனக்குடத்தைத் தட்டியுடைத்து சிந்தனைகளைச் சிதற வைக்க எப்போதுமே மறந்ததில்லை.

விண்ணை அண்ணாந்து பார்ப்பவர் மண்ணையும் குனிந்து நோக்குவார். நொடிகளில் பற்பல கற்பனைகள் தோன்றி மறையும். இருபது வயதை எட்டித் தொட இருக்கும் இளைஞனாக இருந்த அந்நாள், திடீரென மனதினுள் ஓர் உந்துதல் அவருக்கு.

இயற்கையைப் பார்த்து இரசிக்கும் பொழுதெல்லாம் மனமேடையில் நடனமிடும் எண்ணங்களை, எழுத்துக்களாக ஆக்கி வார்த்தைகளைக் கோர்த்து வாக்கியங்களாக மாற்றினால் என்னவென்று எண்ணினார்.

நள்ளிரவு பன்னிரண்டையும் தாண்டிக் கடிகார முட்கள் சோர்வின்றிப் பயணித்துக் கொண்டிருந்த போது ஒரு தாள்க்கட்டுடன் பேனையும் கையுமாக மேசை முன் அமர்ந்தார். மண்ணெண்ணை விளக்கு மங்கிய வெளிச்சத்தைக் கக்கிக் கொண்டிருந்தது.

கவிதையா எழுதுகிறார்? அவர் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை. அத்தனை அழகிய தமிழ்ச் சொற்கள் எப்படி அவர் மனதிலிருந்த வந்தன எனும் ஆச்சர்யமும் ஆனந்ததும் அவரைக் கெட்டியாகக் கட்டிக் கொண்டன.

மூன்று தாள்களை முற்றாக நிரப்பி விட்டு அவற்றின் மீதே கைகளிரண்டையும் மடித்து வைத்துத் தலைக்கு முட்டுக் கொடுத்துப் படுத்துக் கொண்டார். தூக்கம் தென்றலாக வந்து தொற்றிற்று.

காலையில் எழுந்து பார்த்த போது பலத்த காற்றின் வீரியத்தினால் கடதாசிக் கவிதைகள் நிலத்தில் சிதறிக் கிடப்பதைக் கண்டவர் இதயத்தைக் கைகளால் அமுக்கிப் பிடிக்காத குறையாக வந்து அனைத்தையும் பொறுக்கியெடுத்துக் கொண்டார்.

சின்னதாய் சில கதைகள் Donde viven las historias. Descúbrelo ahora