"கொல்கத்தாவுக்குத் தானே? அதனால என்ன கண்ணா.. தாராவைக் கூட்டிட்டு நாளைக்கே கிளம்பலாம் நீ."
அலட்சியமாக பர்வதம் கூறிட, ஆதித் திகைப்பில் வாயடைத்துப்போனான். தாராவைப் பார்த்தால் அவளும் கண்களில் அதிர்ச்சியுடன் பர்வதத்தைப் பார்த்தாள்.
"எல்லாம் காலைல பேசிக்கலாம்.. மணி எட்டாகுது பாருங்க, ரெடியாகிட்டு வாங்க சாப்பிடலாம்!" என்றவாறு இரவு உணவிற்கு ஏற்பாடு செய்ய விரைந்தார் பர்வதம். ஆதித் ஏதும் சொல்லுமுன் அவர் சமையலறைக்குச் சென்றுவிட, "டாட்.." எனத் திரும்புகையில் மாதவனும் உஷாவும் எழுந்து தங்களது அறைக்கு விரைந்துவிட, தாராவைப் பார்த்தால் அவளும் சோர்வாக எழுந்து அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றுவிட, ஆதித் சலிப்பாகப் பெருமூச்செரிந்துவிட்டு, பாட்டியைத் தேடி சமையலறைக்குள் சென்றான் அவன்.
"பாட்டி.. இப்ப எதுக்காக அவளையும் கொல்கத்தாவுக்கு கூட்டிட்டுப் போகணும்? அந்தப் பொண்ணு இங்க காலேஜ்ல படிக்கறாளாச்சே.. படிப்பை விட்டுட்டு எப்படி அவ வருவா? இங்க இருந்தா நீங்க பாத்துப்பீங்க.. அங்க வந்து அவ என்ன செய்வா? பாஷை தெரியாத ஊர்ல வந்து அவ கஷ்டப்படமாட்டாளா?"
சாவதானமாகப் பாத்திரங்களை ஒழுங்குபடுத்தியவாறே, "படிக்கற பொண்ணு எங்க இருந்தாலும் படிக்கும். கல்கத்தாவுல காலேஜா இல்லை? நீ அங்கயும் அவ இங்கயும் இருக்கத்தானா உனக்கு நாங்க கல்யாணம் பண்ணிவெச்சோம்? பாஷை தெரியலைன்னா என்ன? கல்கத்தாவுல யாருமே இங்க்லீஷ் பேசமாட்டாங்களா என்ன?" என்று அவனது ஒவ்வொரு வாதத்தையும் முறியடித்தார் பர்வதம்.
"பாட்டி.. நான்.."
"டேய், உங்க அப்பனைப் பெத்தவடா நானு... உன் பம்மாத்து எல்லாம் எங்கிட்டப் பலிக்காது. பாட்டியும் ஓரளவுக்குத் தான் பொறுமையா இருப்பேன். நீ அதுக்காக எங்களை ஏமாத்திட்டே இருக்க முடியாது ஆதித். இப்ப சட்டைய மாத்திட்டு சாப்பிட வா. போ!"
கோபமாகத் தன்னறைக்குச் சென்று கதவடைத்துக்கொண்ட ஆதித், சாப்பிட வரவில்லை.