மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து ஆதித் ஜாகிங் சென்றுவிட, தாரா சற்றுத் தாமதமாக எழுந்தாள். அறையில் யாரும் இல்லாதிருக்க, தன்னைத் தயார்படுத்திக் கொண்டு கூடத்துக்கு வந்தாள்.
பர்வதம்மாள் தாராவைப் பார்த்ததும் மலர்ந்து முறுவலித்தார்.
"வாம்மா.. எழுந்தாச்சா? நல்லா தூங்கினயா? காபி குடிக்கறயா?"வேண்டாமெனத் தலையசைத்தாள் தாரா.
"டீ, காபி குடிக்கற பழக்கமில்லை பாட்டி..""ஜூஸாவது குடிம்மா.. காலைல எழுந்திரிச்சா வெறும் வயிறா இருக்கக் கூடாது கண்ணா.."
அவர் அன்புக் கட்டளையிட, தாராவும் மறுக்கத் தோன்றாமல் ஒப்புக்கொண்டாள். நெடிய கண்ணாடிக் கோப்பையில் ஆரஞ்சுப் பழரசம் அவளுக்காகக் கொண்டுவரப்பட்டது. அதன் கவர்ச்சிகரமான நிறம் தாராவை ஈர்த்தது.
மறுகணமே தன்னு அதுவரை எத்தனையோ முறைகள் பழரசம் கேட்டு அழுது அப்பாவிடம் அடிவாங்கிய தருணங்கள் நினைவிற்கு வந்தன அவளுக்கு. தங்கள் குடும்ப சூழல் நினைவிற்கு வந்ததும் பழரசத்தின் கவர்ச்சி கசந்தது.
அவள் முகம் வாட்டமுறுவதைக் கண்ட பர்வதமும், "ஏம்மா, பிடிக்கலையா? வேற கொண்டுவரச் சொல்லட்டா?" எனக் கரிசனமாக விசாரிக்க, அவள் அவசரமாக மறுத்தாள்.
"இல்ல பாட்டி, வேணாம் பரவாயில்லை. பாட்டி... அ.. அது.. நான்.. இங்கேயே, உங்க கூடவே இருக்கேனே..? கல்கத்தா வேண்டாம் பாட்டி. அங்க போனா அம்மாவை தன்னுவை எல்லாம் எப்படிப் பார்ப்பேன்? ரெண்டு நாள் கூட தன்னு என்னை விட்டுட்டு இருந்ததே இல்ல.. நானும் தான். அப்பறம், சாப்பாடு.. கிளைமேட்.. பாஷை.. அதோட, எனக்கு இன்னும் ஆறு மாசத்துல ஃபைனல் இயர் எக்ஸாம் வேற வருது. இந்த நேரத்துல படிப்பை விட்டுட்டு வேற ஊருக்கு போயே ஆகணுமா.."
அவள் கெஞ்சுதலாக இழுக்க, பர்வதம் புன்னகை மாறாமல் அமர்ந்திருந்தார்."வெறும் ஆறு மணிநேர ட்ராவல்மா. எப்போ வேணும்னாலும் திரும்பி வந்துடலாம். வாழ்க்கை பூரா அம்மாவோட முந்தானையைப் பிடிச்சுட்டே இருந்துட முடியாதுல்ல? தனியா வாழ்க்கைய ஃபேஸ் பண்ணவும் கத்துக்கணும். காலேஜைப் பத்தி நீ கவலைப்படாத. இந்தியாவுலயே பெஸ்ட் யுனிவர்சிட்டி கல்கத்தா யுனிவர்சிட்டி தான். ஆதித் கிட்ட சொல்லி, உனக்கு அங்கேயே சீட் வாங்கிடலாம். எக்ஸாமும் எழுதலாம். ஆதித் உன்னை பத்திரமா பாத்துப்பான். எந்த விஷயத்தை நினைச்சும் நீ பயப்படத் தேவையில்ல, சரியா?"
