பாரா பஜார், பட்டோலி, கதிபாகன் மார்க்கெட், காலேஜ் ஸ்டீர்ட் என்றெல்லாம் சுற்றிவிட்டு, ஷீத்தலுடன் நடந்து வரும்பொழுது தாராவின் கையில் பைகளுக்குப் பஞ்சமில்லை. தாராவின் கவலைகளையெல்லாம் தற்காலிகமாக மறக்கடிக்கவென ஷீத்தல் மேற்கோண்ட ஷாப்பிங் திட்டம் கிட்டத்தட்ட வெற்றிபெற்றிருந்தது.
"ஐயோ ஷீத்தல்!! இத்தனை ஸ்வீட்டு தீபாவளிக்குக் கூட நான் சாப்பிடல! உங்க ஊரு இனிப்புக்கு ஃபேமஸ் தான்.. நான் ஒத்துக்கறேன்.. அதுக்காக இப்படியா?"
சோன் பாப்டி, ரசகுல்லா, பாதாம் மித்தாய் என்று நினைத்ததையெல்லாம் வாங்கித்தந்து தாராவைத் திக்குமுக்காடச் செய்திருந்தாள் அவள். அவள் பேசப்பேசவே மற்றொரு துண்டு பர்பியை அவள் வாயில் திணித்த ஷீத்தல், "இப்ப மட்டும்தானே என்கூட இருக்க நீ.. காலேஜுக்குப் போயிட்டா புது ஃப்ரெண்ட்சோட சுத்தப் போயிடுவ.. அப்பறம் என் நெனைப்பு உனக்கெங்கே வரும்!? வா பேசாம!!" என இழுத்துச்சென்றாள் ட்ராமில் ஏற.
ட்ராம்களில் ஊரைச் சுற்றிப்பார்த்துவிட்டு, நினைத்த இடத்திலெல்லாம் இறங்கி வேடிக்கை பார்த்துவிட்டு, பூங்காக்கள் எல்லாம் சுற்றிப் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டு, இறுதியில் இரண்டு மணியளவில் வீடு திரும்பினர் இருவரும்.
சிரிப்புப் பேச்சுக்களுடன் வீட்டை அடைந்தபோது, வாசலில் ஆதித்தின் கார் நின்றதைப் பார்த்து சற்றே வியப்பானாள் தாரா.
கையிலிருந்த பைகளை கூடத்திலேயே வைத்துவிட்டு, உள்ளறைகளில் ஆதித் தென்படுகிறானா எனப் பார்வையால் அளைந்தாள் வீட்டை. ம்ஹூம். காணவில்லை.
ஷீத்தல் அவளைக் கேள்வியாகப் பார்க்க, ஒன்றுமில்லையெனத் தலையசைத்துவிட்டு அவளை அழைத்து உணவுமேசையில் அமரவைத்தாள். இந்திராணி மலர்ந்த முகத்துடன் இருவருக்கும் உணவு எடுத்துவைக்க, அவரிடம் தயக்கமாக, "அ.. ஆமா.. வாசல்ல.. அவரோட கார் நிக்குதே.." என இழுத்தாள் தாரா. இந்திராணி தலையசைத்து, "சார் இப்பதான் வந்தார், மாடி ரூம்ல இருக்கார்" என்றார்.