அதிஷ்ட குருவி

15 3 0
                                    

வீட்டின் கார் நிற்பாட்டும் இடத்தில் உள்ள விளக்கு பக்கமாக ஒரு குருவி வருவதும் போவதுமாக இருந்தது,
சில நாட்களாக இது தொடர்ந்தது.
ஜன்னல் பக்கமாக போய் கூர்ந்து கவனித்தேன்.

ஓரு குருவியல்ல சோடி குருவி.

விளக்கு பக்கம் வரும் போதெல்லாம் சொண்டில் காய்ந்த சருகுகள், குச்சிகளை கொண்டு வந்து சேர்த்தன.

ஆனால் நாங்கள் அந்த பக்கமாக போனாலோ உடனே பறந்து விடும். கணவர் விளக்கு பக்கம் போய் உற்று பார்த்தார். அது ஓரு சதுரமான விளக்கு,சிறு குருவிகளுக்கு தங்க முடியும், சோடி குருவிகள் அங்கே கூடு கட்ட தொடங்கியிருந்தன. தொந்தரவு செய்யாமல் விட்டு விட்டோம்

பக்கத்து வீட்டு மாமி, பறவைகள் வீட்டில் கூடுகட்டினால் அதிஷ்டம் என்று கூறி சென்றாள்.
யோசனையுடன் இணையத்தில் தேடல், மாமியை எப்படி நம்புவது.

உண்மை தான் அதிஷ்டம் என்றே பல பதவிகள்.

மனதிற்குள் மகிழ்ச்சி குடிகொண்டது. விஷயத்தை கணவர் காதிலும் போட்டு வைத்தேன்.

சில நாட்களுக்குள் விளக்கு பக்கமாக சிறு குருவி குஞ்சின் கீச்! கீச்!

"அந்த விளக்கை போட வேண்டாம்" கணவர் உத்தரவு, இடையூறாக இருக்குமாம்.

அதிஷ்டம் வரப்போகுதே.

சோடி குருவிகள் வெளியே போவதும் இரை கொண்டு வருவதுமாக இருந்தன.
இன்னும் சில நாட்களில் குருவிகள் தங்கள் குஞ்சை விளக்கை விட்டு இறக்கி விட்டன.
குஞ்சு மிகவும் சிறிதாகவே இருந்தது. அது தத்தி தத்தி நடந்து முற்றத்தை சுற்றி வந்தது.

அதை பார்த்து ரசித்தோம். சந்தோஷமாக இருந்தது.

மனதிற்கு மகிழ்ச்சி கிடைப்பதும் அதிஷ்டம் தானே...

இருள் சூழும் நேரத்தில் குஞ்சை அப்படியே விட்டு குருவிகள் பறந்து விடும்,
எங்களுக்கு ஓரே பயம் இரவில் பூனையோ அல்லது வேறு ஏதுமோ வந்து பிடித்து விடுமோ என்று,
கணவர் ஒரு கூடையில் குஞ்சை மறைத்து வைத்தார்.

அதிஷ்ட குருவியல்லவா!

விடிந்ததும் விடியாததுமாக வாசலில் சோடி குருவிகளின் ஆர்ப்பாட்டம்.
கணவர் ஓடிச்சென்று கூடையை திறந்து விட்டார்.

கொஞ்சி குளாவின.

இரண்டு மூன்று நாட்களாக இது தொடர்ந்தது.
பகலில் இரை தேட சென்றாலும் நாங்கள் தான் பாதுகாப்பாளர்.
காகத்திடம் இருந்து காப்பாற்ற வேண்டுமே.

அதிஷ்ட குருவியல்லவா!

அடுத்த நாளும்
குஞ்சை நிலத்தில் விட்டு அது சுற்றி திரிவதை ரசித்தபடி மதில் மேல் சோடி குருவிகள்,
எட்டி பார்த்துவிட்டு வீட்டு வேலையில் கவனம் செலுத்தினேன்.

திடீரென ஆரவார சத்தம் ,ஓடி சென்றேன். ஓரு காகம் லபக் என குஞ்சை கவ்விக் கொண்டு பறந்தது.

குஞ்சின் கீச்...சுக் குரல்

சோடி குருவிகள் கூக்குரல் விட்ட படி பின் தொடர்ந்தன.

நான் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றேன்.

சிறிது நேரத்தில் சோடிக்குருவிகள் திரும்பி வந்தன,

வெறுமையாக.

கத்தி கத்தி குஞ்சை தேடி வீட்டை சுற்றி தேடின,சற்று முன் நடந்ததை உணராமல்.....

இந்த தேடல் சில நாட்களாக தொடர்ந்தது.

எனக்குள் இருந்த சந்தோஷம் மறைந்து பாரமாக மனது கனத்தது.

இங்கு அதிஷ்டம் யாருக்கு?

குஞ்சை பெற்றெடுத்த குருவிகளுக்கா?

சில நாட்கள் மட்டுமே  சநதோஷத்தை அனுபவித்த எங்களுக்கா?

எங்கிருந்தோ வந்து தன் பசி தீர்த்துக்கொண்ட காக்கைக்கா?

அதிஷ்ட குருவிWhere stories live. Discover now