ஆதித்தின் கண்களில் வழக்கத்திற்கு மாறான ஓர் அதிசயப் பார்வையை அவள் கண்டு திகைத்து நிற்க, அவனோ அரைக்கணத்தில் பார்வையை மாற்றிக்கொண்டான்.
"போலாமா?"
பர்வதம் வந்து அவனைத் தோளில் இடித்தார்.
"என்னடா, பிஸினஸ் பார்க்கவா போறீங்க, மொட்டையா இப்படி கூப்பிடற? நல்லா அன்பா அவ பேரைச் சொல்லிக் கூப்பிட்டு, கையைப் பிடிச்சு கூப்பிட்டுப் போ! எத்தனை நாளைக்குத் தான் இதையும் நாங்களே சொல்லித் தர்றது?"
தாராவிற்கு நாணம் அதீதமாக வர, தலையைக் குனிந்துகொண்டாள் அவள். ஆதித் லேசாக செருமியவாறு, "தாரா, வா போகலாம்" என்றபடி கைநீட்ட, அவளும் தயக்கமாக அவன் கையைப் பிடித்துக்கொண்டு நடந்தாள்.
இருவருக்குமே சற்றுக் கலவரமாக இருந்தது உள்ளூர. திருமணத்தின்போதுகூட இவ்வாறு கைப்பிடித்து நடக்கவில்லை என்பதை அறிவர் இருவருமே. ஐயர் கூறிய சம்பிரதாயங்களை எல்லாம் அரையடி தள்ளி நின்றே செய்தனர் இருவரும். முந்தைய நாள் இரவு, ஆதித் வந்து ஒப்பந்தம் போடுவதுபோல பேசிவிட்டுக் கைநீட்ட, தாரா தோளைக் குலுக்கிவிட்டுச் சென்ற காட்சி நினைவுக்கு வந்தது அவனுக்கு. கூடவே சின்னதொரு சிரிப்பும் வந்தது.
காரை அடைந்ததும் கையை விட்டுவிட்டு அவளுக்காகக் கார் கதவைத் திறந்துவிட்டான் அவன். அவளும் நிமிராமல் உள்ளே ஏறி அமர்ந்தாள். பெரியவர்கள் மூவரும் வாசலுக்கு வந்து கையசைக்க, தாராவும் புன்னகையோடு தலையசைத்தாள் அவர்களுக்கு. கவனமாக ஆதித்தின்பக்கம் மெல்லமாக அவள் திரும்ப, அவனும் புன்னகையுடனே காரைச் செலுத்தியதைப் பார்த்தாள்.
"எங்கே போறோம்?"
இருகணம் அமைதிகாத்தான் ஆதித்.
"நீயே பார்க்கலாம், இன்னும் பத்து நிமிஷம்."
தாரா வினோதமாக, ஆனால் ஆர்வத்தோடு அவனைப் பார்த்துக் காத்திருந்தாள். கல்கத்தா நகரப் பரபரப்பைத் தாண்டித் தங்கள் வண்டி விரைந்து செல்ல, தாரா ஜன்னலின்வழி வேடிக்கை பார்த்தாள். இதுவரை வந்திராத பகுதியென மட்டும் புரிந்தது. தூரத்தில் ஹௌரா பாலத்தின் பால்வெளிச்சம் தெரிந்தது.