"மனு.. போதும்ப்பா.. எனக்கு வயிறே வெடிச்சிரும்போல இருக்கு!"
"Challenges are challenges. இருபது சான்டேஷ் சாப்பிடறதா சவால் விட்டல்ல? இன்னும் எட்டு சாப்பிடணும், கமான் தாரா!"
"நான் என்னத்த கண்டேன், இது இத்தனை தெவிட்டும்னு! நாக்கெல்லாம் ஒரே சக்கரை! ஆளை விடுப்பா சாமி!"
"ப்ச், பந்தயத்துல இருந்து கோழை மாதிரி பின்வாங்குறயே.. உங்க தமிழ்நாட்டுல இதெல்லாம் மானப் பிரச்சனை கிடையாதா?"
அவள் முறைக்க, அவனோ சவாலாக ஒற்றைப் புருவத்தை உயர்த்தியவாறே இனிப்புப் பெட்டியை அவள்முன் நீட்டினான். ரோஷம் வந்து ஒரேயடியாக எட்டு இனிப்புத் துண்டுகளை இடைவிடாமல் தின்றுவிட்டு வயிற்றைப் பிடித்துக்கொண்டு சாய்ந்தாள் அவள், அவர்கள் அமர்ந்திருந்த காரின் பேனட்டிலேயே.
மர நிழலில் நிறுத்தியிருந்த மனுவின் ஃபோர்ட் காரின் மீது, காலை சம்மணமிட்டு அமர்ந்திருந்தாள் தாரா. மத்தியான வெய்யில் கொஞ்சம் இருந்தாலும், கல்கத்தாவின் சீதோஷ்ணம் எப்போதும்போல் ரம்மியமாகவே இருந்தது. உணவுகளுக்குப் பெயர்போன ஜாதவ்பூரின் ஒரு வீதியில் நின்ற தள்ளுவண்டிக் கடைக்குத் தான் அழைத்து வந்திருந்தான் அபிமன்யூ.
வெள்ளியன்று விமான நிலையத்தில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு சம்பாஷணையே இல்லாது ஆதித்தும் தாராவும் தனித்துப் போய்விட, விடிந்தும் விடியாமலேயே அவன் தனது சூட்கேஸைத் தூக்கிக்கொண்டு பிஸினஸ் என்னும் பெயரில் வெளியே போய்விட, வாரக்கடைசி முழுதும் ஆளரவமே இல்லாத வெறும் வீட்டில் நரகமாய் தாராவிற்குக் கழிய, திங்களன்று மதியம் மனுவின் காரைப் பார்த்ததும் ஆனந்தமாய் ஓடிவந்து அமர்ந்து அவனுடன் கதைபேசத் தொடங்கிவிட்டாள் அவள். அவனுமே அதேயளவு ஆனந்தத்துடன் தான் அவளை எதிர்நோக்கிக் காத்திருந்தான். வழிநெடுகக் கதைத்துக்கொண்டே வந்தவர்கள் கடையை அடைந்தும் பேச்சை நிறுத்திடவில்லை.
"என் வாழ்க்கைலயே இத்தனை இனிப்பை இப்பதான் சாப்பிட்டிருக்கேன்! அதுவும் லஞ்ச்சுக்கு பதிலா இனிப்பையே மொத்தமா சாப்பிட்டதும் இதுதான் ஃபர்ஸ்ட் டைம்! என்னை ரொம்ப மோசமா இன்ஃப்ளூயன்ஸ் பண்ணி வெச்சிருக்க மனு.."