"மதுரையும் மாற்றங்களை கொஞ்சம் மந்தமாகவே ஏற்றுக் கொள்ளும்" என நினைக்கும் நபர்களில் அவனும் ஒருவன். மதுரையில் பிறந்து வளர்ந்தவர்களும் படித்தவுடன் புலம் பெயரவே ஆசைப்பட்டுக் கொண்டிருந்தனர். இந்த எழுதப்படாத விதியை மீறுவதற்காகவே அவன் மீண்டும் மதுரைக்கு இடம் பெயர்ந்து கொண்டிருந்தான். அவனுக்கு, சிறுவயதில் பார்த்து வியந்த அகலமான தெருக்களும் இப்பொழுது மெலிந்ததாகவும் களையிழந்ததாகவும் தோன்றும். அவன் தங்கப் போகும் தெருவும் பல வருடங்களாக மாற்றமில்லாமல் தனக்குரிய அடையாளங்களுடன் இருந்து கொண்டிருந்தது. மிக நீளமான அந்த தெருவுடன் ஒரு விளக்குக் கம்பமும், வேம்பும் வாழ்ந்து கொண்டிருந்தன. இடைப்பட்ட காலத்தில் அவன் உடையும் நடையும் மாறியிருந்தது. அது தெருவில் வசிக்கும் மனிதர்களை விசித்திரமாக பார்க்க வைத்தது. இக்கால கட்டத்தில் அவன் கற்றது ழகரமும், மனிதர்களை தரம் பிரிக்காத குணமும் தான். இவ்விரண்டும் அத்தெருவோடு ஒன்றாத வித்தியாசமானவைகள் என்பது அவனைப் படிப்பவர்களுக்கு நன்றாக தெரியும்.
தனியாக தன்னுடைய உடைமைகளை கொண்டுவந்து கொண்டிருந்தான். தெருவே விரும்பும் கண்ணன் தன் கூட்டத்தை கூட்டி உலகக்கதையை அளந்து கொண்டிருந்தான். அந்த தெருவில் இரண்டு கண்ணன்கள் இருந்தனர். ஒருவன் இன்றும் அம்மா மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டு பேசிக் கொண்டிருப்பான். அதனால் மடிகண்ணன், மடி என்று தான் கூப்பிடுவார்கள். மாடியில் இருக்கும் கண்ணனை மாடி என்று தான் அழைப்பார்கள். சிலர் பத்திரிக்கை வைக்கும் போது கூட மாடி கண்ணன் என்று தான் எழுதி கொடுப்பார்கள். மாடியும் அதை கண்டுகொள்ள மாட்டான்.புதிதாக யாரவது சிக்கி விட்டால் போதும், தன்னுடைய காமெடியை தெருவே விரும்புவதாக கூறி சிரிப்பான். கேட்டவனும் அப்படியா... என்று ஆச்சரியப்பட்டால் போதும், அவ்வளவு தான். மாடியின் க்ரூப்பில் அங்கத்தினாராக்கி விடுவான். கொஞ்சநாள் க்ரூப்பின் நாயகனாக்கி அப்படியே சான்ஸுக்கா ஏங்கும் கதாபாத்திரமாக்கி விடுவான். அவன் மாடியின் கூட்டத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தான்.