அனாமிகா

1.4K 92 29
                                    

ராகவி அந்த அறையின் உள்ளே நுழைய இன்னும் சிறிது நேரமே மீதம் இருந்தது அதற்குள் ஒருவித படபடப்புடனும் ஏதோ ஒரு குற்ற உணர்வுடனும் மனதை அலைக்களித்துக் கொண்டிருந்தான் அமுதன். அவன் எண்ணங்கள் எதுவும் அங்கிருப்பதாய் தெரியவில்லை அவன் சிந்தனைகள் எல்லை மீறி சென்று அவன் இதயத்தை பெரும் வலி கொள்ள செய்தது. வேறு யார் அவ்விடத்தில் இருந்தாலும் மிகுந்த சந்தோசத்துடனும், எதிர்பார்ப்புடனும் இருந்திருக்கலாம் ஆனால் அமுதன் அதிலிருந்து மாறுபட்டிருந்தான். ஒவ்வொருவர் வாழ்விலும் வரும் அந்த முக்கியமான பேரின்ப இரவு அன்று அவன் வாழ்க்கையிலும் வந்திருக்கிறது என்பதை முழுவதும் மறந்திருந்தான்.

மெல்ல அறையின் கதவு திறக்கப்படும் ஓசை கேட்டு சற்று திடுக்கிட்டான் ஆனால் சிறு வினாடிகளில் அது அவன் எண்ணம் மட்டுமே என்பதை உணர்ந்திருந்தான். அறையின் விட்டத்தில் மின் விசிறி வேகமான எண்ணில் சுற்றியும் பலன் இல்லாதது போல் அவன் முகத்தில் வியர்வைத் துளிகள் மெல்லமாய் வடிந்து கொண்டிருந்தது அதில் சிறிது கண்ணீரும் கலந்திருக்கக் கூடும்.

அன்று காலையில் தான் அமுதன், ராகவி திருமணம் சிறப்பாய் நடந்து முடிந்திருந்தது, அவர்கள் பெற்றோர்களால் நிச்சயிக்கப் பட்ட திருமணமே. 2 மாதங்களுக்கு முன் நிச்சயிக்கப் பட்டு இரு வீட்டார் சம்மதத் துடனும் சாத்திர சம்பிரதாயங்களுடன் தேதி குறிக்கப் பட்டு இன்று ஒரு வழியாய் திருமணம் நடத்தி முடித்த திருப்தியில் அமுதனின் தாய் ஒரு நிம்மதி பெரு மூச்சுடன் இருந்தாள். இரண்டு வருடங்களாக எதை எதை காரணம் காட்டியோ திருமணத்தை தள்ளிப் போட்டுப் பார்த்தான் அமுதன், வீட்டிற்கு ஒரே பையன் அவனின் திருமணத்தை காண அவன் தாய் கனகம்மா பட்ட பாடு குறைவல்ல.

"எலேய், சீக்கிரம் ஒரு கண்ணாலத்த பண்ணி தொலை நானும் எம்புட்டு கத்து தான் கத்துறேன் தெனமும், தனி மனுசியா இங்க கிடந்தது சாவுறேன் ஒரு ஒத்தாசைகாச்சும் ஒருத்திய கட்டிக்கணும்னு எண்ணம் வருதா பாரு.... உங்கப்பனும் நம்மள ஒத்தைல உட்டுட்டு போய்ட்டான் நான் தான உன்ன கஷ்டப்பட்டு ஆளாக்கி உட்டேன் இப்போ எனக்குன்னு இருக்க கடைசி ஆசையையும் நிறைவேத்தாம என்ன சாக உட்டுறாத..."

இப்படி தினமும் எதையாவது சொல்லி கண்ணை கசக்குவாள்.

அமுதனும் ஆரம்பத்தில் இதை பொருட்டில் கொள்ளவில்லை ஒரு காலத்துக்கு பிறகு அவனுக்கே கனகம்மா மீது ஒரு பரிதாபம் உண்டாயிற்று. வயிதாயிக் கொண்டே போவதாலும், அவள் உடல் நிலையில் ஏற்பட்ட தளர்வாலும் அவனுக்கும் ஒரு வித பயம் தொற்றிக் கொண்டது. அவன் தந்தை வைத்தியலிங்கம் அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணி புரிந்தவர் இவன் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கையில் திடீரென மாரடைப்பால் இறந்து போனார் அதன் பிறகு தனி ஆளாக இவனை கவனித்தது முதல் பொறியியல் படிக்க வைத்தது வரை அவள் பட்ட போராட்டம் கொஞ்சம் இல்லை. கணவனை இழந்த சோகத்திலும் மகன் உடைந்து விடக் கூடாதென்று தன்னை தானே தேற்றிக் கொண்டு மீண்டெழுந்தவள். உதவிக்கு உறவினர்கள் கூட வராத நிலையில் வைத்தியலிங்கத்தின் பென்சன் பணமும், அவள் கடைகளுக்கு தோசை மாவு போட்டு கிடைத்த பணத்திலும் காலத்தை ஓட்டினாள். தன் நகைகளை வங்கியில் அடகு வைத்து கிடைத்த பணத்தில் ஒரு வழியாய் அமுதனை படிக்க வைத்து முடித்தாள். இன்று அமுதன் ஒரு தனியார் கட்டிடம் கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக பணி புரிந்து வருகிறான். மூன்று மாதம் முன்பு தான் கனகம்மாவின் மொத்த 20 பவுன் நகைகளையும் மீட்டெடுத்து கொடுத்திருந்தான் அதில் அவள் பெற்ற மகிழ்ச்சி மிகவும் பெரிது.

அமுதன் சம்மதம் சொன்ன மறு நொடியிலிருந்து அதீத வேகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கனகம்மா வரண் தேட ஆரம்பித்து விட்டாள், அக்கம் பக்கம் முதல் கல்யாண புரோக்கர் வரையிலும் அலைந்து தேடி பெண் பார்த்து ஒரு வழியாய் ராகவியை இவனுக்கு மணம் முடித்து வைத்தாள். ராகவியின் அப்பா பரமசிவனும் வைத்தியலிங்கமும் ஒரே பள்ளியில் ஆசிரியராக இருந்தவர்கள் அந்த பழக்கத்தில் அமுதனின் குடும்பத்தை அவர் நன்கு அறிந்து வைத்திருந்ததாலும் அமுதன் தற்போது ஒரு நல்ல வேலையில் இருந்ததாலும் அவரே முன் வந்து திருமணத்திற்கு ஒத்துக் கொண்டார். அதையெல்லாம் விட வைத்தியலிங்கம் முன்பு செய்த ஒரு பெரும் உதவி இன்று வரையிலும் அவர் இதயத்தில் தடம் பதித்திருந்தது. அப்போது ராகவிக்கு எட்டு வயதிருக்கும் திடீரென ஒரு தீராத காய்ச்சலினால் படுத்துவிட்டாள் முதல் இரண்டு நாட்கள் வீட்டிலிருக்கும் மாத்திரை மருந்துகளை கொடுத்துப் பார்த்தார்கள் காய்ச்சலின் வீரியம் கூடவே உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்று இரத்தம் பரிசோதித்துப் பார்த்ததில் டெங்கு என்றிருக்கிறார்கள். ராகவியின் உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக காணப்பட்டதால் அவசர வார்டில் வைத்து சிகிச்சை கொடுத்தார்கள் அந்நேரம் மாதக் கடைசி கையில் பணம் இல்லாததால் சற்று திண்டாடி போனார் பரமசிவன். அதற்கு சில மாதம் முன்பே சொந்தமாக தன் வீடு கட்டி முடித்திருந்ததில் ஏகப்பட்ட செலவிலும் வங்கி கடனிலும் மூழ்கிய அந்த இக்கட்டான நிலமையில் விஷயம் அறிந்து வைத்தியலிங்கம் நேரில் வந்து பத்தாயிரம் ரூபாய் கடனாக கொடுத்து உதவினார் அந்த உதவி அந்நேரத்தில் பரமசிவனுக்கு வைத்தியலிங்கம் கடவுளாய் தெரிந்தார், அந்த சம்பவம் முதல் அமுதன் குடும்பம் பரமசிவனுக்கு மிகவும் பழக்கமாகி விட்டது. வைத்தியலிங்கத்தின் மறைவின் போது அவர் உறவினர்களை விட இவர் தான் அதிகம் கவலை கொண்டார், எல்லா வேலைகளையும் முன் நின்று செய்ததும் இல்லாமல் அமுதனுக்கு ஆறுதலாகவும் இருந்தார். அன்று ராகவி மீண்டு வர உதவியாய் இருந்த அமுதன் குடும்பத்திற்கு ராகவியை கொடுப்பதில் அவருக்கு மகிழ்ச்சியும், உதவி செய்த பெருமிதமும் கலந்திருந்தது.

ராகவி சில மாதம் முன்பு தான் பொறியியல் படித்து விட்டு வீட்டில் இருந்தாள், அவளுக்கு படித்து விட்டு வேலைக்கு செல்ல விருப்பம் இருந்தது ஆனால் இந்த திடீர் திருமண நிச்சயத்தால் தற்போது அது முடியாமல் போனது. பரமசிவனும் திருமணம் முடிந்து நான் அமுதனிடம் பேசி சம்மதம் வாங்கி தருகிறேன் என்று உறுதி கூறி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தார். திருமண வயதும் நெருங்கி இருந்ததால் ஒருவித ஆசைகளுடன் அவளும் சம்மதித்து விட்டாள். திருமணம் நிச்சயிக்கப் பட்ட இரண்டு மாதங்களில் ஒரு ஏழெட்டு முறை தான் அமுதன் இவளுடன் போனில் பேசி இருக்கிறான் அதுவும் சம்பிரதாயமாக பேசியது போல் இருந்தது அவன் பேச்சு. அவனுக்கு உண்மையாகவே என்னை பிடிச்சுருக்கா என்ற எண்ணம் ராகவிக்குள் நிறையவே இருந்தது, ஒவ்வொரு முறையும் இவளாகவே போனில் தொடர்பு கொண்டு பேச முயற்ச்சித்த போதும் வேலை பளு என்று காரணம் காட்டி சில நிமிட பேச்சினில் போனை துண்டித்து விட்டிருக்கிறான். கடைசியில் ஒரு நாள் அவள் பிறந்த நாள் என்பதால் அன்று மட்டும் இவனாகவே அவளை அழைத்து வாழ்த்து சொல்லிய போது ராகவி கோவிலுக்கு அழைத்துச் செல்ல கேட்டாள் முதலில் வேலை, உடல்நிலை சரி இல்லை என மழுப்பியவன் பிறகு அவளின் குரலில் சோகம் தெரியவே பின் ஒத்துக் கொண்டான். அவனிடம் இரு சக்கர வாகனம் இருந்தும் ஆட்டோவிலையே அவளை அழைத்துச் சென்றான்...

கோவிலில் சாமி கும்பிட்ட பின் இருவரும் தெப்ப குளம் அருகில் அமர்ந்திருந்தபோது தன்னுள் அடக்கி வைத்திருந்த கேள்விகளை விம்மிக் கொண்டு அவளாகவே கேட்கத் தொடங்கினாள்.

"நான் உங்ககிட்ட ஒண்ணு கேட்கணும், கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டேங்கல?"

"கேளு... நான் எதுவும் நெனைக்கல"

"நெஜமாவே உங்களுக்கு என்ன பிடிச்சுருக்கா?"

"ஹும்ம் பிடிச்சுருக்கு... ஏன் கேக்குற?"

"இல்ல சும்மா தான் கேட்டேன்"

"பரவா இல்ல சொல்லு..."

"இல்ல... நமக்கு நிச்சயம் ஆயி இவ்ளோ நாள் ஆகியும் நீங்க என்ன தள்ளி வச்சு பாக்குற மாதிரியே தோணுச்சு அதான்...." சற்று நடுக்கத்துடன் இழுத்தாள்.

"அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல எனக்கு கம்பனில கொஞ்சம் ஒர்க் பிரஷர் ஜாஸ்தி அதான் சரியா பேச முடியல நீ நெனைக்குற மாதிரி ஒண்ணும் இல்ல" அவன் பேசிய தோணியே ஏதோ இருக்கிறது என்பதை காண்பித்தது.

அதற்கு மேல் அவனிடம் எதையும் கேட்கவும் அவளுக்கு தயக்கம் கூடியது. சில நிமிடம் மௌனமாய் குளத்தின் நீரை உற்று பார்த்துக் கொண்டிருந்தாள்....

பிறகு ஏதோ கட்டாயத்தில் அவனாகவே பேச ஆரம்பித்தான்...

"எதாவது சாப்டுறியா..."

"இல்ல வேணாம்ங்க....."

"ஏன் நான் வாங்கித் தந்தா சாப்பிட மாட்டியா?"

"ஐயோ அப்படிலாம் இல்லைங்க... சாப்பிடுவேன் உங்களுக்கு பிடிச்சது எதுனாலும் வாங்கி கொடுங்க" என்றாள்

"உனக்கு பிடிச்சதே சொல்லு... இது என் ட்ரீட்"

சில நொடி யோசித்து விட்டு கூறினாள்...

"ஐஸ்க்ரீம் வாங்கி கொடுங்க... லண்டன் டைரி ஐஸ்க்ரீம் எனக்கு ரொம்ப பிடிக்கும் "

அவள் சொல்லிய மறு வினாடி அவனுக்கு தூக்கி வாரிப் போட்டது அவன் இதயத்தை ஏதோ அழுத்துவது போல் இருந்தது. மனம் எங்கேயோ பின் நோக்கி சென்றது, மௌனம் அவன் வாயடைத்தது.

"என்னாச்சுங்க உங்களுக்கு அந்த ஐஸ்க்ரீம் பிடிக்காதா?" என்று அப்பாவியாய் கேட்டாள் ராகவி.

"அப்படிலாம் ஒண்ணும் இல்ல வாங்கி தரேன்..." தழு தழுத்து போய் கூறினான் அமுதன்.

அருகில் இருந்த கடைக்கு கூட்டிச்சென்று ஐஸ்க்ரீம் வாங்கி கொடுத்தான், சிறிது நேரம் கழித்து ஆட்டோவில் திரும்ப அவளைக் கொண்டு அவள் வீட்டில் விட்டு விட்டு தன் வீடு திரும்பினான். வரும் வழியில் அவன் நினைவுகள் கடந்த காலம் நோக்கி சென்றது. மனதில் முன்பு தொலைந்து போன நாட்களின் காட்சிகள் படமாய் ஓடியது, அவன் விழிகளில் நீர் மெல்ல எட்டிப் பார்த்தது...

அவன் மனம் மீண்டும் மீண்டும் நொடிக்கொரு முறை சொல்லிய வார்த்தை "அனாமிகா அனாமிகா அனாமிகா...."

"அமுதா... லண்டன் டைரி ஐஸ்க்ரீம் வாங்கி கொடு டா ஐ ஜஸ்ட் லவ் தாட்" அனாமிகாவின் அந்த குரல் அவன் காதினில் ஒலித்த வண்ணம் இருந்தது.

"அனு... நான் உனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் சொல்லு பாப்போம்?"

"ஹும்ம்... சாக்லேட் ?"

"நோ... Guess யுவர் favorite ஒன்? "

"ஓ மை காட் லண்டன் டைரி???... அமு ஐ லவ் யூ சோ மச் டா..."

அவளின் ஒவ்வொரு நினைவுகளும் அவனைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தது, அவன் மனதை வதை செய்து கொண்டிருந்தது...

அவன் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு பெயர் அனாமிகா, உயிரும் கூட. அவன் ஒட்டுமொத்த அன்பையும் முன்பு குத்தகைக்கு எடுத்துக் கொண்டவள் அவள், காதலி என்ற உறவிற்கும் மேல் பல படிகள் அதிகமாய் பழகியவள். 'என் உயிர் உள்ளவரை நான் இழக்க முடியாத ஒரு உறவு நீ மட்டுமே' என அவள் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் இதயத்தில் ஆணி அடித்தது. 'உன்னை விட்டு நான் பிரிந்தால் என் உயிர் பிரிந்துவிடும்' என்றவள் இன்று எங்கோ கண் காணாத இடத்திற்கு போய் விட்டதை அமுதனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

அவன் நினைவுகள் நான்கு வருடங்கள் பின்னோக்கி சென்று பழைய நியாபகங்களை அசை போட ஆரமித்தது. அமுதன் படித்து முடித்து விட்டு தன் சொந்த ஊரான திருச்சி மாவட்டத்தில் உள்ள கிராமம் கள்ளக்குடியிலிருந்து சென்னைக்கு வேலை தேடி பயணமான நேரம் அது, பல மாதங்கள் அலைந்து திரிந்து பல நேர்முகத் தேர்விற்கு பிறகு ஒரு கட்டுமான கம்பனியில் 3000 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு ஏறினான். குறைந்த சம்பளம் என்பதினால் ஒரு சிறிய மேன்சனில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தான், சாப்பாடும் ஹோட்டலில் தான். அவன் அலுவலகத்திற்கும் தான் தங்கி இருந்த மேன்சனுக்கும் தூரம் 15 நிமிடம் மட்டுமே என்பதால் தினமும் நடந்தே வேலைக்கு செல்வான். அன்று வியாழக்கிழமை இரவு வழக்கம் போல் அவன் வேலை முடிந்து நடந்து வந்து கொண்டிருக்கையில் அந்த கோரச் சம்பவம் அவன் கண்களில் தென்பட்டது. அவன் கண் இமைக்கும் நேரத்தில் அந்த சப்தம் அவன் காதினை அதிரச் செய்தது. வேகமாக வந்த ஒரு இன்னோவா கார் ஒரு ஸ்கூட்டி பைக்கினை இடித்து விட்டு அசுர வேகத்தில் பறந்து சென்றது. அருகில் இருந்தவர்கள் சில நிமிடம் தயங்கி யோசிப்பதற்குள் அமுதன் இரத்தம் பீரிட்டு கொண்டிருக்கும் அந்த பெண்ணை தூக்கி அருகில் உள்ள மருத்தவமனைக்கு ஆட்டோவில் கொண்டு சென்றான். இதற்கு முன்பு வரை அவனுக்கு இப்படி ஒரு அனுபவம் நிகழ்ந்ததில்லை, இதுபோல் குருதியினை தன் கையினால் தொட்டதும் இல்லை. அது அவன் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு நிகழ்வு அவன் வாழ்க்கையை தடம் மாற்றிய ஒரு நிகழ்வும் கூட. தலையில் பெரிதாக காயம் படாமல் கை கால்களில் மட்டும் காயங்கள் பெற்றமையால் அப்பெண் அபாயக் கட்டத்திற்கு செல்ல வில்லை. அந்தப் பெண்ணின் அலைப்பேசியின் தகவலை வைத்து மருத்துவர்கள் அவள் பெற்றோருக்கு தகவல் கொடுத்திருந்தனர். சிறிது நேரத்தில் அமுதனும் அங்கிருந்து நகர்ந்தான். அந்த மோசமான தருணத்தில் அமுதனின் இதயமெங்கும் பயமும் பதற்றமுமே ஒட்டிக் கொண்டிருந்தது மாறாக அந்த பெண்ணின் முகம் கூட அவனுக்கு நியாபகம் இருக்க வில்லை.

அந்த நிகழ்விற்கு பிறகு அந்த பெண் என்ன ஆனாள் என்று கூட அமுதனுக்கு தெரிந்திருக்க வில்லை. இரண்டு வாரங்கள் அவன் வழக்கமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தான். மேன்சன் அலுவலகம் மேன்சன் இது தான் அவன் அன்றாட வாழ்க்கையின் நடைமுறையாக இருந்தது . அன்றொருநாள் ஞாயிற்று கிழமை என்பதால் அமுதன் காலையில் முழிப்பதற்கு தாமதம் ஆனது. அமுதனுக்கு அங்கு நட்பு வட்டாரம் பெரிதாக இல்லை என்பதால் தன் அறையிலேயே ஓய்வெடுப்பது வழக்கம் வெளியில் எங்கும் அதிகமாக செல்வதில்லை. அன்று அவன் உறக்கத்தை கலைக்கும் விதமாக அவன் அலைப்பேசியின் அழைப்பு மணி ஓலித்துக் கொண்டே இருந்தது... "முன்பே வா... என் அன்பே வா..." அவன் தேர்வு செய்து வைத்திருந்த பாடலில்.

முதல் ஒலியில் அவன் போனை எடுக்க வில்லை திரும்பவும் ஒரு நிமிட இடைவெளியில் மீண்டும் அலைப்பேசி ஒலித்தது, சற்றே தூக்க கலக்கத்துடன் அவன் போனை எடுத்து நோக்கினான் புதிதாக ஒரு எண் அவன் கண்ணில் காட்சி பெற்றது,

உடனே மெல்லிய குரலில் 'ஹலோ' என்றான்...

எதிர்புறம் ஒரு பெண்ணின் இனிமையான குரலில் 'ஹலோ' என்று ஒலித்தது.

அவன் உடனே எதுவும் வேலை வாய்ப்பிற்கான அழைப்பாக இருக்கலாமென யூகித்து ஆங்கிலத்தில் 'ஹூ இஸ் திஸ்' என்றான்.

உடனே மறு புறம் "நான் அனாமிகா பேசுறேன்" தமிழில் பதில் வந்தது.

"சொல்லுங்க யார் வேணும் உங்களுக்கு" அமுதன் கேட்டான்

சற்று தயங்கியவாறு அவள் பேசத் தொடங்கினாள்

"அமுதன் தான பேசுறது...? 2 வீக்ஸ் முன்னாடி நுங்கம்பாக்கம் பக்கம் ஒரு ஆக்சிடெண்ட் நடந்துச்சு நியாபகம் இருக்கா"

"ஆமா... ஒரு பொண்ண நான் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணினேன். ஆனா அவங்களுக்கு அப்புறம் என்ன ஆச்சு எதுவுமே தெரியல... நீங்க அந்த பொண்ணுக்கு வேண்டியவங்களா?"

"இல்ல... நான் தான் அந்த பொண்ணு" அனாமிகா சற்றே ஆச்சர்ய குரலில் கூறினாள்

ஒரு நொடி அமுதனுக்கு இதயம் திடுக்கிடும் படி இருந்தது... மூன்று வினாடி மௌனம் காத்து பின் பேசத் தொடங்கினான்....

"எப்படி இருக்கேங்க... உங்க... உங்க உடம்பு இப்போ... சரி ஆயிடுச்சா" ஒரு வித பதட்ட குரலில் வார்த்தைகளை விழுங்கி பேசினான் அமுதன். அவன் இதுவரையில் எந்த பெண்ணுடனும் நலம் விசாரிப்புக்கு கூட போனில் பேசாததே காரணம்.

"உடம்பு அல்மோஸ்ட் கியூர் ஆயிடுச்சுங்க... கைல மட்டும் கொஞ்சம் ஸ்க்ராட்ச் இருக்கு... 10 டேஸ் ல காயம் ஆரிடும்னு டாக்டர் சொல்லிருக்கார்" என்றாள்

"ஹும் தேங்க் காட்" என்று நிறுத்திக் கொண்டான்

அவள் மீண்டும் தொடங்கினாள்...

"உங்களுக்கு எப்படி தேங்க் பண்றதனுனே தெரியல... டாக்டர் தான் சொன்னாங்க ஒரு பையன் தான் கொண்டு அட்மிட் பண்ணாங்கனு... டிஸ்சார்ஜ் ஆகும் போது என்ட்ரில உள்ள உங்க பேரு நம்பர் பாத்து தான் இப்போ கால் பண்ணேன். தேங்க்ஸ் சொல்லனும்னு மனசு உறுத்திட்டே இருந்துச்சு ஆனா பேசுறதுக்கு கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு இன்னைக்கு எப்படியும் சொல்லியே ஆகணும்னு கால் பண்ணிட்டேன்" என்று முடித்தாள்.

"தேங்க்ஸ் எதுவும் வேணாம்ங்க பரவா இல்லை' மீண்டும் ஒரு வரியோடு நிறுத்திக் கொண்டான் அமுதன்.

"சரிங்க... நான் போன் வைக்குறேன்... தேங்க்ஸ் அகைன்... டேக் கேர்... பய்"

"பய்" என்று அவனும் ஒரு வார்த்தையில் சொல்லி முடித்ததும் அழைப்பை துண்டித்தாள் அனாமிகா.

போனை வைத்த நொடி கொண்டு அமுதனுக்கு ஒரு இனம் புரியா மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது. முதல் முதலாக ஒரு பெண் தனக்கு கால் பண்ணியதாலா இல்லை தான் காப்பாற்றி ஒரு பெண் நன்றி சொன்னாள் என்பதினாலா இல்லை அவளின் இனிமையான குரலின் தாக்கமா இல்லை எல்லாம் கலந்ததாலா எதுவுமே அவனுக்கு விளங்கவில்லை.

அந்த சுவாரஸ்ய மகிழ்ச்சி இரண்டு நாள் ஆகியும் அமுதனை விட்ட பாடில்லை. இரண்டு நாட்களாக இரவில் உறங்கவே ஒரு மணி நேரம் அதிகமாக எடுத்துக் கொண்டான். அவன் மனம் மீண்டும் அவளிடம் பேச தூண்டிக் கொண்டே இருந்தது ஆனால் பேசுவதற்கான காரணமும் அவனிடம் இல்லை அதற்கான தைரியமும் இல்லை.

ஒரு மாதம் ஓடிப் போனது அன்று புத்தாண்டு அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்ப இது ஒரு நல்ல காரணமாய் அவன் மனதில் தோன்றியது. வாழ்த்து சொல்லலாமென எழுத்துக்களை தட்டி வைத்திருந்தான் ஆனாலும் அவனுக்கு அனுப்ப மனம் வரவில்லை, தயங்கினான். அவன் தன் அலைப்பேசியே பார்த்துக் கொண்டிருந்த அந்த நொடி அவன் அலைப்பேசியில் குறுஞ்செய்தி மணி ஒலித்தது. திறந்து பார்த்தும் அவன் மகிழ்ச்சி கரை புரண்டு படியது

"Wish you Happy New Year Amuthan :) - Anamika "

என்று அனாமிகா அனுப்பியிருந்தாள். உடனே பதிலுக்கு

"Wish you too Happy New Year" என்று அனுப்பினான்.

அதற்கு மேல் அன்று செய்தி தொடரவில்லை ஆனால் மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து அவளிடம் இருந்து ஒரு செய்தி வந்திருந்தது...

"Hi Amuthan, Can I call You"

உடனே "Ok" என்று பதிலளித்தான்...

"முன்பே வா... என் அன்பே வா..." என அலைபேசி ஒலிக்க உடனே எடுத்து

"ஹலோ" என்றான்

"ஹாய் அமுதன் எப்படி இருக்கேங்க..."

"நல்லா இருக்கேன் நீங்க "

"குட். வர சண்டே என் அண்ணாவுக்கு கல்யாணம்... உங்களையும் இன்வைட் பண்ணனும்னு தோணுச்சு நீங்க கண்டிப்பா வரணும். நானும் உங்கள பாத்தது இல்லை ஒரு வாட்டி நேர்ல தேங்க்ஸ் சொல்ல ஆசையா இருக்கு" என்றாள்.

" ஐயோ... நான் எப்படி வர..." என அமுதன் இழுத்தான்.

"ஏன் நீங்க வரக் கூடாத... என்ன பிரண்டா நெனச்சா வாங்க" என்று அவன் மனதினை வார்த்தைகளால் தூண்டினாள்.

அமுதனுக்கு ஒரு புறம் மகிழ்ச்சி மறு புறம் சிறு தயக்கம் முடிவில்

"சரிங்க வரேன்... எந்த கல்யாண மண்டபம்?" என்று கேட்டான்

"உங்க மெயில் ஐடி மெசேஜ் பண்ணுங்க நான் இன்விட்டேசன் அனுப்பி விடுறேன்" என்று உரையாடலை முடித்துக் கொண்டனர்.

இவ்வாறு தொடர்ந்த இருவரின் நட்பு... ஒருவரையொருவர் நேரில் கண்ட தருணம் முதல் வளரத் தொடங்கியது.

அன்று அனாமிகாவின் அண்ணனின் திருமணத்தில் அமுதன் கலந்து கொண்டான். ஏற்கனவே அவளின் முக உருவ அமைப்பு ஓரளவு அவனுக்கு நியாபகம் இருந்தமையால் மண்டபத்தின் உள்ளே நுழையும் போதே அவளை எளிதாக அடையாளம் கண்டு கொண்டான். இருந்தாலும் அவள் அருகே சென்று நான் தான் அமுதன் என சொல்லும் அளவிற்கு அவனுக்கு தைரியம் வந்து விட வில்லை. தன் அலைபேசியை எடுத்து அவளை அழைத்து நான் வந்துவிட்டேன் என்று சற்று தொலைவில் இருந்து கை காட்டினான். உடனே அவனை நோக்கி அனாமிகா ஓடி வந்தது அமுதனை ரெக்கை கட்டி பறக்க செய்தது. அருகில் வந்து உடனே அமுதனுக்கு கை கொடுத்தாள்.

"அண்ணைக்கு எனக்கு ஹெல்ப் பண்ணதுக்கும் இன்னைக்கு நீங்க வந்ததுக்கும் ரொம்ப தேங்க்ஸ் அமுதன்.... வாங்க உங்கள என் அப்பா அம்மா கிட்ட இன்றிடுஸ் பண்ணி வைக்குறேன்" என்றாள்.

"தேங்க்ஸ் லாம் வேணாம் பாரவில்லை" என்று அவள் பின் சென்றான் அமுதன்.

அனாமிகாவின் பெற்றோர்களும் அமுதனை வரவேற்று நன்றியும் சொல்லிக் கொண்டனர். அவள் குடும்பம் வசதி வாய்ந்த குடும்பம் என்பதால் அன்று நடந்த திருமண விழாவின் ஆடம்பரத்தைக் கண்டு கொஞ்சம் வாயடைக்கவும் செய்தான் அமுதன்.

அப்போது அவனுக்குள் துளிர் விட்டிருந்த காதல் எண்ணத்திற்கு சிறிது தடை போட்டது அவளின் பின்புலம். இதெல்லாம் தனக்கு ஒத்து வராது என்று நினைத்துக் கொண்டே அங்கிருந்து புறப்பட்டான்.

ஆனால் அனாமிகா, தன் நட்பு வட்டத்தில் அனைவரும் செல்வச் செழிப்புடனும், ஊதாரித் தனமாகவும், பொய் முகத்துடனும் இருந்ததால் அமுதனின் எளிமையும், அப்பாவித் தனமும், உதவும் உள்ளமும் அவளை மிகவும் கவர்ந்தது. ஒரு உண்மையான நட்பு அமுதனிடம் இருந்து கிடைப்பது போல் உணர்ந்தாள். மீண்டும் அமுதனை எதோ ஒரு காரணத்தில் தொடர்பு கொண்டுகொண்டே இருந்தாள். இருவரின் நட்பும் குறுஞ்செய்தி வாயிலாகவும், அலைபேசியிலும் , சில நாட்களில் நேரிலும் வளரத் தொடங்கியது. அவள் முதல் முதலில் அவனை அழைத்த போது அலைப்பேசியில் இருந்த ' முன்பே வா... என் அன்பே வா...' பாடலை அவழுக்கென பிரத்யோகமாக அழைப்பு மணியாக வைத்தான். ஒவ்வொரு முறை அவள் அழைக்கும் போதும் மகிழ்வின் உயரத்துக்கு செல்வான். அமுதனின் குடும்ப சூழல் எல்லாம் தெரிந்ததும் அவன் மேல் இன்னும் அதிகமாக அக்கறை காட்டத் தொடங்கினாள் அனாமிகா. தன் தாயை தவிர்த்து முதல் முறையாக ஒரு பெண்ணிடம் இருந்து கிடைத்த அந்த அன்பை அமுதனால் ஒரு நொடி கூட நிராகரிக்க முடியவில்லை.

ஆறு மாதத்தில் இருவரின் நட்பு காதல் என்னும் எல்லைக் கோட்டை தாண்டி இருந்தது. இம்முறையும் அனாமிகா வே தன் காதலை முதலில் வெளிப் படுத்தினாள். அவளின் அளவில்லா அன்பினாலும் அக்கறையினாலும் தன் தாயை விட ஒரு படி அதிகமாக அவளை நேசிக்கத் தொடங்கினான் அமுதன். அவள் இல்லாத ஒரு வாழ்க்கை இனி அவனுக்கில்லை என்னும் அளவிற்கு உடலில் ஒவ்வொரு செல்லிலும் அவள் நினைவு பரவும் அளவிற்கு அவள் அவனை மாற்றினாள். ஒவ்வொரு முறை அவளை அவன் சந்திக்கும் போதும் அனாமிகா கூறிய காதல் உறுதிகள் அவனுக்கு நம்பிக்கை யூட்டியது. அவன் தான் அவள் வாழ்க்கை, அவள் உலகம் என்னும் அளவிற்கு அனாமிகாவும் முழுவதுமாய் மாறி இருந்தாள். அமுதனுக்கு அவள் பெற்றோரின் மீது இருந்த ஒரு வித பயத்தையும் நம் காதலை அவர்கள் ஏற்று கொள்வார்களா என அவன் கூறிய போதெல்லாம் அவளின் பதில்

"எனக்கு நீ தான் டா முக்கியம்... யாரு என்னை விட்டு போனாலும் நான் உன்னை விட்டு போக மாட்டேன் டா அமுதா..."

பல நாட்களில் சத்தியமும் செய்து அவனை நம்ப வைத்திருக்கிறாள்.

அன்று மே 10, அனாமிக்காவின் பிறந்த நாள். இருவரும் சேர்ந்து வெளியே மகாபலிபுரம் போக திட்டம் செய்து வைத்திருந்தனர். அமுதனிடம் பைக் இல்லாத காரணத்தினால் அவன் அலுவலக நண்பன் மகேஷிடம் பைக் இரவல் வாங்கிக் கொண்டு புறப்பட தயார் ஆனான். அவளுக்கு பிறந்தநாள் பரிசாக இரண்டு கிராமில் ஒரு தங்க மோதிரம் வாங்கி வைத்திருந்தான். கூடவே அவளுக்கு மிகவும் பிடித்த லண்டன் டைரி ஐஸ் கிரீமும் வாங்கினான். சிறிது நேரத்தில் அனாமிகாவை சந்தித்தான் அமுதன். கூட்டம் சற்று குறைவாக இருந்த அந்த இடத்தில் அவளை சில நொடிகள் கட்டி அணைத்து பிறந்த நாள் வாழ்த்து கூறினான்.

"ஹேப்பி பர்த்டே டா மை டார்லிங்" என்றதும்

"தேங்க் யூ அமு செல்லம்" என்றாள்

"அனு... நான் உனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் சொல்லு பாப்போம்?"

"ஹும்ம்... சாக்லேட் ?"

"நோ... Guess யுவர் favorite ஒன்? "

"ஓ மை காட் லண்டன் டைரி???... அமு ஐ லவ் யூ சோ மச் டா..."

"மீ டூ...."

"சரி என் பர்த்டே கிப்ட் எங்க டா...?" என்றாள்

"அது சர்ப்ரைஸ் டியர்... மகாபலிபுரம் போயிட்டு தரேன்" என்று அவளுக்கு சுவாரஸ்ய மூட்டினான் அமுதன்.

சிறிது நேர உரையாடலுக்குப் பின் இருவரும் மகாபலிபுரம் நோக்கி பயணமாயினர்...
இரு சக்கர வாகனத்தில் பின்னால் இருந்து அனாமிகா அமுதனை கட்டி அணைத்துக் கொள்ள கிழக்கு கடற்கரை சாலை வழியில் சென்று கொண்டிருந்தனர்.

"அமுதா எவ்ளோ நேரம் ஆகும் டா பைக்ல போயி சேர"

"ஒண் ஹவர் ல போயிடலாம் டா" என்றான்

"சரி அமு... அம்மா கோவிலுக்கு போகணும்னு சொன்னாங்க நான் தான் ஈவ்னிங் வரேன் இப்போ அனிதா கூட வெளிய போறேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன். அதுக்குள்ளே போயிடலாம்ல?" என்றாள்

"ம்ம்ம் ஓகே டா" என்று வண்டியை வேகமாக ஓட்டத் தொடங்கினான்.

கொஞ்சம் நேரம் கழித்து அனாமிகா

"அமு... எனக்கு லைட்டா தூக்கமா வருது நான் கொஞ்சம் தூங்கிக்கவா"

என்றதும் "ஹே... வேண்டாம் டி விழுந்திடுவ" என்றான்

ஆனால் அவளையே அறியாமல் சற்று கண் அயர நிலை தடுமாறி சாய்ந்தது விழப்போனாள் உடனே சுதாகரித்துக் கொண்ட அமுதன் பின்னால் திரும்பி ஒரு கையால் அவளை தாங்கி பிடிக்க முற்படுகையில் எதிர் பாராத விதமாக எதிரே சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து கண் இமைக்கும் நேரத்தில் இருவரும் இருந்த பைக்கை இடித்து தள்ளியது.

நிலை தடுமாறி இருவரும் இரு திசையில் விழுந்தனர், அமுதனின் தலையில் காயம் பட்டதால் உடனே அவன் மயக்க நிலையில் சென்றான் ஆயினும் அவன் காதினில் கடைசியில் ஒலித்துக் கொண்டிருந்த வார்த்தை 'அமு.... அமு... அமு...." அவன் கண்களில் இருள் மட்டுமே சூழ்ந்திருந்தது.

அவன் கண் திறக்கும் வேளையில் மருத்துவமனையில் படுக்கையில் இருந்தான். வாய் "அனாமிகா அனாமிகா" என்றே மெல்ல புலம்பியது. அவன் அம்மா கனகம்மாவிற்கு தகவல் சொல்லப் பட்டது. பதறியடித்துக் கொண்டு திருச்சியில் இருந்து புறப்பட்டு மருத்துவமனை வந்து சேர்ந்தாள். கதறி அழுதாள் ஆனால் அவன் நினைவுகளோ அனாமிகாவின் பக்கம் மட்டுமே உலாவிக் கொண்டிருந்தது.

அவள் என்ன ஆனால் என்று மருத்துவர்களிடம் விசாரித்துப் பார்த்தான் அவள் பெற்றோர்கள் அவளை வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்று விட்டதாக கூறினார்கள். அவன் அலைப்பேசியும் 'சுவிட்ச் ஆப்' என்றே ஒலித்தது. அம்மாவின் வற்புறுத்தலினால் ஓய்வுக்காக தன் திருச்சி வீட்டிற்கே சென்றான்.

இரண்டு மாதங்கள் நரகமாய் ஓடின. ஓரளவு உடல்நிலை சரி ஆனதும் உடனே சென்னை கிளம்பினான் அனாமிகாவை பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை. கடைசியில் அவள் வீட்டிற்கே நேரடியாக சென்றான். வீட்டினில் அவள் பெற்றோர்கள் யாரும் இல்லை. அங்கே இருந்த வேலையாட்கள் சொன்ன விஷயம் அவனை நிலைகுலைய செய்தது.

"அன்னைக்கு நடந்த ஆக்சிடண்ட்ல சின்னம்மா இறந்துட்டாங்க... அதுக்கப்புறம் அய்யாவும் அம்மாவும் இங்க இருக்குறதே இல்ல. அவங்க பையன் கூட அமேரிக்கா போயிட்டாங்க" என்று முடிக்கவும்

அமுதனின் கண்கள் அணையை திறந்த வெள்ளம் போல் கண்ணீர் சிந்திக் கொண்டே இருந்தது, கால்கள் நிற்க கூட வலுவின்றி நடு நடுங்கியது. குவாரியில் பாறை உடைப்பதை போல் அவன் இதயம் வெடித்து சிதறிய ஒரு உணர்விலேயே தலை சுற்றி கீழே சாய்ந்தான். அங்குள்ள வேலையாள் அவனை தண்ணீர் தெளித்து மயக்கம் கலைய வைத்தான். பிறகு அங்கிருந்து நகர்ந்தான், எங்கே போவதென்றறியாமல் நடக்கத் தொடங்கினான். ஒரு புறம் இழப்பு மறுபுறம் என்னால் அவள் இறந்துவிட்டாளென குற்ற உணர்ச்சி அவனை கொன்று எடுத்தது.

தற்கொலை செய்துவிட எண்ணினான் ஒரு நொடி அவன் தாயின் முகம் கண்ணில் வந்து போனது. அப்பாவை இழந்த அந்த ஒரு பேரிடரை மறுபடியும் அவளுக்கு தர வேண்டாமென மனம் சொல்லியது. ஒரு வருடம் உடல் நிலை சரி இல்லையென காரணம் காட்டி தாயுடனே இருந்தான். அனாமிகாவின் நினைவுகள் மட்டும் அவனை விட்டு வெளி செல்லவே இல்லை. பணத் தேவையும் அவன் குடும்பத்தை புரட்டி போட்டது அந்த சோகங்களில் இருந்து தன் மனதை திசை திருப்ப தன் வேலையில் கவனம் தீட்ட நினைத்தான். சென்னை போக அவன் மனம் நாடாததால் பெங்களூர் செல்ல முடிவெடுத்தான். சில மாதங்களில் மீண்டும் ஒரு நல்ல வேலையில் ஏறினான் மெல்ல மெல்ல உயர் நிலையை அடைந்தான். அனாமிகாவை இழந்து 4 வருடங்கள் கழித்து தன் 29 வது வயதில் திருமணம் செய்ய ஒத்துக் கொண்டான். இன்று ராகவியுடன் திருமணமும் நடந்து முடிந்துவிட்டது. ஆனால் அனாமிகாவின் நியாபகங்களும், அந்த குற்ற உணர்வும் அவனை துரத்திக் கொண்டே தான் இருந்தது.

அவன் நினைவுகள் ஓடி முடித்த வேளையில் கதவு திறக்கும் சப்தம் அமுதன் காதினில் ஒலித்தது இம்முறை அவன் எண்ணம் இல்லை ராகவி அறையின் உள்ளே வர மெதுவாக கதவை திறந்தாள். தன் நினைவுகளை அப்புறப் படுத்தி சுதாரித்துக் கொண்டான் அமுதன். கண்களை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டான். ஒரு மெல்லிய சோகம் மறைத்த புன்னகையால் அவளை வரவேற்றான். வெட்கம் கலந்த முகத்தோடு தலை தாழ்த்திக் கொண்டு அமுதன் அருகே வந்தாள் ராகவி. கையில் இருந்த பால் செம்பை மேசையின் மேல் வைத்து விட்டு மெல்ல அமுதனின் காலில் விழுந்தாள், அவள் தோள்களை மெல்லப் பிடித்து தூக்கி விட்டு அருகே அமரச் செய்தான். அவளின் ஆசைகளை நிராகரிக்க அவன் மனம் தயங்கியது. அவள் மகிழ்ச்சி எந்த வகையிலும் கெட்டு விடக் கூடாதென ஏற்கனவே முடிவெடுத்து வைத்திருந்தான். அவள் கண்களை நோக்க அவள் வெட்க புன்னகையோடு தலை குனிந்தாள். மெல்ல அவள் கையைப் பிடித்த அந்த தருணம் அவன் அலைபேசி ஒலித்தது "முன்பே வா... என் அன்பே வா..." என்று, சற்று அதிர்ந்து கையில் எடுத்துப் பார்த்தான். திரையில் வந்து கொண்டிருந்தது... "Anamika Calling... "

அனாமிகாUnde poveștirile trăiesc. Descoperă acum