🌹01

613 16 2
                                    


ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்
(தாண்டவம்)

பொழுது விடிந்து நல்ல வெளிச்சம் பரவிக்கொண்டிருந்தது. சில்லென்று வீசிய காற்று உடலை ஊடுருவ அந்த குளிரையும் பொருட்படுத்தாது தனது சைக்கிளை மெதுவாக மிதித்தபடி சென்றுகொண்டிருந்தான் ரிஷி என அழைக்கப்படும் ரிஷ்வந்.

அதிகாலையிலேயே எழுந்து தனது வீட்டிலிருந்து சற்றுத் தொலைவில் இருந்த ஏரிக்கரைக்குச் சென்று மணல்பரப்பில் ஓடி, சிறு உடற்பயிற்சிகளை முடித்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தான். அவனது தினசரி வழக்கம் அது. அதிகாலை 5 மணிக்கு எழுந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு ஏரிக்கரைக்குச் செல்வான். அவனது ஊர் மலைப்பிரதேசமானதால் சைக்கிள் ஓட்டுவதே மிகக் கடினமான உடற்பயிற்சிதான். ஆனாலும் உடலை ஊடுருவும் குளிரையும் பொருட்படுத்தாது ஏரிக்கரைக்கு சென்று ஓடி உடற்பயிற்சி செய்வதே அவனது வழமை.உடற்பயிற்சியை முடித்ததும், அங்கே போடப்பட்டிருக்கும் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து மலைகளின் ஊடே மெல்ல எட்டிப் பார்க்கும் சூரியனின் அழகை ரசிப்பான். ஆறு மணியானதும் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வருவான்.

இன்றும் சைக்கிளை நிதானமாக மிதித்தபடி வீட்டிற்கு வந்தான். சிறு ஏற்றமான வீதியின் முடிவில் அவனது வீடு அமைந்திருந்தது. அவனது வீடு பெரிய தோட்டத்தின் நடுவே இருந்தது. இயற்கையின் கொடையே மலைப் பிரதேசங்களின் இந்தப் பசுமையே. சூரியன் இன்னும் மேலே வராததால் பனியில் குளித்த தோட்டம் ஈரமாகவும் பசுமையாகவும் இருந்தது. கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே நுழையும்போதே தோட்டத்தில் மலர்ந்த பூக்களின் நறுமணம் நாசியை நிறைத்தது. கேட்டின் ஆரம்பத்திலேயே வளைவான பந்தல் போடப்பட்டிருந்தது. அந்தப் பந்தலில் படர்ந்திருந்த கொடியில் குண்டுமல்லிகை மலர்கள் நட்சத்திரங்கள் போன்று பூத்துக் குலுங்கின. பல வண்ண ரோஜாக்கள் இயற்கை வாசனையோடு அந்த தோட்டத்தில் நிறைந்திருந்தன. அலரி, போகன்வில்லா, எக்சோரா, செண்பகம் என்று பலவகையான செடிகளும் கொடிகளும் மரங்களும் என தோட்டம் நிறைந்து காணப்பட்டது. வீட்டின் பின்புறம் மரக்கறி பயிர்கள் தாராளமாகப் பயிரிடப்பட்டிருந்தன. தவிர எலுமிச்சை, தோடை, ஃபெசன்புரூட், றம்புட்டான் என பழப் பயிர்களும் இருந்தன. அவனுக்குத் தோட்டத்தைப் பராமரிப்பதில் அவ்வளவு ஆர்வம் இல்லைதான். ஆனால், தன் வீட்டுத் தோட்டத்தைப் பார்க்கும் போதெல்லாம் மனதில் ஒரு குளிர்மையும் இதமும் பரவுவதை எப்போதும் உணர்வான். கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்ததும் அவன் முன்னே ஓடிவந்து நின்றன அவனது செல்லப் பிள்ளைகளான றொனியும் சுவீட்டியும். அவனைக் கண்ட சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தன. இருவரையும் அன்போடு தடவிக் கொடுத்தவன் "இன்று உங்களோடு விளையாட எனக்கு டைம் இல்லை. நேரத்துக்கே நான் வேர்க் போகணும். சோ, நாளை விளையாடுவோமா ஹாய்ஸ்" என்று செல்லம் கொஞ்சினான். அவன் பேசியது அவர்களுக்குப் புரிந்தது போலும். வாலை ஆட்டிவிட்டு துள்ளிக் குதித்து ஓடின.

உள்ளம் கொள்ளை போகுதடாWhere stories live. Discover now