பிறகு, அல்மித்ரா கேட்டாள், "எனில், திருமணத்தை பற்றி தங்கள் எண்ணம் என்ன, ஆசானே?"
அதற்கு அவர் பதிலளித்ததாவது:
உங்கள் பிறவி உங்களை ஒன்றாக்கும் படிக்கு அமைந்தது, எனவே நீங்கள் என்றும் ஒன்றாகவே இருப்பீராக.
மரணத்தின் வெண் சிறகுகள் உங்கள் நாட்களை சிதறடித்தாலும், ஒன்றாகவே இருப்பீராக.
ஆம், நீங்கள் இறைவனின் அமைதியான நினைவுகளில் மட்டுமே எஞ்சியிருக்க நேர்ந்தாலும், அப்பொழுதும் ஒன்றாகவே இருப்பீராக.
நீங்கள் ஒன்றாக இருந்தாலும், உங்களுக்கு இடையில் வெளிகள் இருக்கட்டும்.
அந்த இடைவெளிகளில் சொர்க்கத்தின் தென்றல் உங்களிடையே களிநடம் புரிவதாக.
நீங்கள் ஒருவரை ஒருவர் காதலித்தாலும், அக்காதலினால் ஒருவருடன் ஒருவர் இறுகக் கட்டுண்டு கிடக்காமல் இருப்பீராக.
உங்கள் ஆன்மாக்களின் இரு கரைகளுக்கு இடையில் பொங்கிப் பெருகும் ஆழி விரிந்திருப்பதாக.
நீங்கள் ஒருவர் கிண்ணத்தை ஒருவர் நிரப்பிக் கொண்டாலும், ஒரே கிண்ணத்தில் அருந்தாமல் இருப்பீராக.
நீங்கள் ஒருவருக்கு ஒருவர் அப்பத்தை ஊட்டிக் கொண்டாலும் ஒரே துண்டை உண்ண முற்படாது இருப்பீராக.
நீங்கள் ஒன்றாகப் பாடி, நடம் புரிந்து, களித்து இருந்தாலும், ஒருவர் மற்றொருவருக்கு வேண்டிய தனிமையையும் தருவீராக.
வீணையின் நரம்புகள் தனித்தனியாக இருந்தாலும், அவை அதிர்ந்து எழுப்பும் இசை ஒன்றாகவே வெளிப்படுகிறது.
உங்கள் இதயத்தைக் கொடை அளியுங்கள், ஆனால் ஒருவர் மற்றொருவருக்கு அல்ல,
ஏனெனில் உங்கள் இதயத்தை, வாழ்வின் கரங்களால் அன்றிப் பிறிதொன்றினால் பெற்றுக்கொள்ளலாகாது.மற்றும் நீங்கள் என்றும் ஒன்றாக நில்லுங்கள், அது இருப்பினும் நெருக்கி நில்லாமல், ஒன்றாக நில்லுங்கள்:
ஏனெனில் ஆலயத்தின் தூண்கள் அவ்வாறே நிற்கின்றன,
மற்றும் ஓக் (oak) மரமும் சிப்ரஸ் (cypress) மரமும் ஒன்றின் நிழலில் மற்றொன்று என்றில்லாமல், தனித்தனியாகவே உயர்ந்து வளர்கின்றன.
BẠN ĐANG ĐỌC
தீர்க்கதரிசி
Thơ caஇது மகாகவி கலீல் கிப்ரானின் படைப்பான " The Prophet" -ன் என் தமிழ் மொழி பெயர்ப்பு ஆகும். "தீ பிராஃபெட்" டை படிக்கும் பொழுது அதனை தமிழில் சுயமாக மொழி பெயர்க்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. அந்த ஆசையின் விளைவே இது.