2. அன்பு

57 6 8
                                    

அவர் பதிலுரைத்ததாவது:

ஆர்பிலிஸின் மக்களே, உங்கள் ஆன்மாவில் நிகழ்ந்துகொண்டிருக்கும் எந்த நிகழ்வைப் பற்றி நான் கூறவேண்டும்.

அல்மித்ரா "அன்பைப் பற்றிக் கூறுவீராக" என்றாள்.

அவர் தன் தலையை நிமிர்த்தி மக்கள் கூட்டத்தை பார்த்தார், அங்குப் பேரமைதி நிலவியது. அவர் தன் பெருங்குரலால் வெளிப்படுத்தியதாவது:

அன்பு உன்னை அழைக்கும் பொழுது, அதைப் பின் தொடர்ந்து செல்.

அன்பின் வழி கடினமானதாக, செங்குத்தானதாக இருந்தாலும் அதைப் பின் தொடர்ந்து செல்.

அதன் சிறகுகளின் இடையே ஒளிந்திருக்கும் வாள் உன்னைக் காயப்படுத்தலாம்.

அது தனது சிறகுகளால் உன்னை அரவணைக்கும் பொழுது. நீ அதற்கு அடிபணிந்து இரு.

அன்பின் குரல், உன் கனவுகளை, ஒரு புயல் மலர்ச்சோலையை உலுக்கிச் சிதறடிப்பது போல் சிதறடிக்கலாம்,

அது இருப்பினும், அன்பு உன்னிடம் சொல்வதை எப்பொழுதும் நம்பியிரு.

அன்பு உனக்குக் கிரீடமும் அணிவிக்கும், உன்னை சிலுவையிலும் அரையும்.

அன்பு உன்னை வான் நோக்கி உன் கிளைகளைச் சூரிய ஒளி தீண்ட விரித்து வளரச் செய்யும்.

பூமியைப் பற்றி உன்னை நிலைத்து நிற்கச் செய்யும் உன் ஆணி வேர்களை அது அசைத்துப் பார்க்கும்.

உன்னை சோளத்தினைப்போல் சேகரித்து, உன்னை அடித்தும், கிழித்தும், உன் கசடுகளை நீக்கும், உன்னை மாவென அரைத்து உன்னை இளகச் செய்யும்.

அதன் பிறகு உன்னைத் தீயின் தணலில் விட்டு, இறைவனின் விருந்தில் உன்னை இறைவனின் புனித அப்பமாக்கும்.

இவையனைத்தும் உன் இதயத்தின் ரகசியங்களை உனக்கு வெளிப்படுத்தும் பொருட்டு நிகழும். அந்த அறிவை நீ அறிந்தபின் உன் இதயம் வாழ்க்கையின் இதயத்தின் ஒரு பகுதி என ஆகியிருக்கும்.

இந்த கஷ்டங்களைக் கண்டு பயம் கொண்டு, அன்பின் அமைதியையும் அதன் சுகங்களையும் மட்டும் தேடுபவனாக நீ இருப்பாய் எனில்,

நீ, உன்னை அன்பிற்கு மறைத்து அரையும் அதன் தரையில் இருந்து, பருவங்கள் அற்ற உலகத்திற்கு ஓடிவிடு. அங்கே நீ சிரிப்பாய் ஆனால் உன் சிரிப்பு முழுமையானதாக இருக்காது, அங்கே நீ அழுவாய் ஆனால் உன் கண்ணீரும் முழுமையானதாக இருக்காது.

அன்பு, அன்பைத் தவிர வேறு எதையும் கொடுப்பதில்லை.

அன்பு, அன்பைத் தவிர வேறு எதையும் பெறுவதுமில்லை.

அன்பிற்கு உடைமைகள் இல்லை,

அன்பு உடைமையாவதும் இல்லை.

அன்பிற்கு அன்பே போதுமானது.

நீ அன்புடையவனாக இருப்பாய் எனில் நீ "கடவுள் என் இதயத்தில் இருக்கிறார்" என்று விளிக்காதே. மாறாக "நான் கடவுளின் இதயத்தில் இருக்கிறேன்" என்று சொல்.

அன்பின் போக்கை நீ மாற்ற நினையாதே, நீ தகுதியுடையவனாக இருப்பாய் எனில் அது உன் போக்கை வழி நடத்தும்.

அன்பிற்குத் தன்னை தான் நிறைவேற்றிக் கொள்வதைத் தவிரப் பிற ஆசைகள் ஏதும் இல்லை.

ஆனால் நீ அன்பு கொள்வாயெனில் இவற்றை மட்டுமே ஆசைகளாகக் கொண்டிரு:

முழுதும் உருகி, ஓடையாக ஓடி அதன் சலசலக்கும் இனிய பாடலினால் இரவுகளை நிரப்பு.

மென்மையாக இருப்பதின் வலியை அறிந்திரு.

அன்பைப் பற்றிய உன் சுய புரிதலினால் காயப்பட்டு அதன் பொருட்டு குருதி சிந்த, மன மகிழ்வுடன் சித்தமாயிரு.

பொன் விடியலில் சிறகு விரித்த இதயத்துடன் எழுந்து. அன்பு செய்ய மற்றொரு நாள் கிடைக்கப் பெற்றதிற்காக நன்றி கூறு.

பகலில் ஓய்வெடுத்து, அன்பின் பரவசத்தின் ஊழ்கத்தில் திளைத்திரு.

மாலையில் நன்றியுடன் வீடு திரும்பு.

இரவில். இதயத்தில்அன்பிற்குரியவர்களுக்கான ஜபத்தினையும். உதடுகளில் கீர்த்தனைகளும் பாடி, உறங்கிடு.

தீர்க்கதரிசிTempat cerita menjadi hidup. Temukan sekarang