புதிய வாசகர்களே,
கதைக்குள் நுழையும் முன் கதையை பற்றிய சில குறிப்புகள்
1. இது இரண்டு தலைமுறைகளின் கதை. கதை பெரும்பாலும் நேர்கோட்டில் பயணித்தாலும், அங்கங்கே நினைவுகளாலும், உரையாடல்களாலும் பின்நோக்கியும் இந்த கதை பயணிக்கும். சிலநேரம் சில கதாபாத்திரங்களின் மூலம் கனவுலகிலும் சஞ்சரிக்கும். ஒரே நிகழ்வை வெவ்வேறு மனிதர்கள் எவ்வாறு நினைவு கூறுகிறார்கள் என்றும், ஒரே நிகழ்ச்சியை வெவ்வேறு மனிதர்கள் எவ்வாறு மதிப்பிடுகிறார்கள் என்றும் சொல்ல முயன்றிருக்கிறேன். இப்படியான கதை சொல்லும் யுக்தி ரசிக்கும் படியாக இருக்கும் என்று நம்புகிறேன். (கதையின் நான்காவது அத்தியாயத்திலாவது நீங்கள் இந்த கதை இரண்டு கால வெளியில் எழுதப்பட்டுள்ளதை புரிந்து கொள்ளவீர்கள் என்று அனுமானிக்கிறேன் (அப்படி புரிந்த கொள்ள வில்லையென்றால் நான் என் கதை சொல்லும் பாணியை திருத்திக்கொள்ள வேண்டும் என்று அர்த்தம்)).
2. இக்கதை, காதலை மட்டும் பேசும் கதை இல்லை எனினும் காதலை மையப்படுத்தி எழுதப்பட்டது. அதுபோக இந்த கதையில் குடும்ப வாழ்க்கை, தொழில், நட்பு, உறவு என்று பல்வேறு உணர்வுகளையும் முன்வைக்கிறேன். இந்த கதையை வாசிப்பது, நடைமுறை வாழ்க்கையின் அலுப்பிலிருந்து ஒரு விடுப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இயல்பு வாழ்க்கைக்கு அந்நியமான மேட்டுக்குடி வாழ்க்கையை கதைக்களமாக தேர்ந்தெடுத்திருக்கிறேன். கதாநாயகனோ, கதாநாயகியோ இவர்கள் தான் என்று சொல்ல முடியாதபடிக்கு ஆங்காங்கேயும், அவ்வப்போதும் வெவ்வேறு கதாபாத்திரங்கள் கதையை தூக்கி செல்கிறார்கள்.
3. கதையின் உரையாடல்கள் தூய தமிழில் எழுதப்பட்டிருக்கும். கதாபாத்திரங்கள் பல்வேறு கால நிலையில், ஆங்கிலம், தமிழ், கொங்கணி, மராத்தி, சிந்தி என பல்வேறு மொழி பேசுபவர்களாக இருப்பதால் வழக்கு மொழியில் எழுதும் வாய்ப்பு இல்லை. வழக்கு தமிழில் கதைகள் படித்து பழக்கப்பட்டவர்களாக இருக்கும் பட்சத்தில், இந்த தூய தமிழ் உரையாடல்கள் சற்று உறுத்தலாக இருக்கும். ஆனாலும் நீங்கள் தொடர்ந்து கதையை படிக்கும்போது அது உங்களுக்கு பழகிவிடும்.
4. வாசகர்களின் பின்னூட்டம் கதையை மேற் கொண்டு செல்வதற்கு எனக்கு ஊக்கம் கொடுக்கும். பிடித்த அத்தியாயங்களுக்கு நட்சத்திர குறியை பரிசளித்தால் மகிழ்வேன்.
உங்களுக்கு இந்த கதை ஒரு நல்ல வாசிப்பு அனுபவமாக இருக்க வேண்டும் என்ற ஆசையுடன்,
உங்கள் கதைசொல்லி,
புதினம்