maayamithra
ஒரு பட்டாம் பூச்சி தேவதை சிறகு விரித்தாள்.. அகண்ட வானத்தில் பறந்து திரிந்து தன் ராஜகுமாரனைத் தேடி எடுக்க ஆசையும் கொண்டாள்.. அவள் தேடல்கள் நீல வானத்தில் தொடர்ந்து கொண்டிருந்தது... ராஜகுமாரன் சாயலில் பல போலிகளையும் கண்டாள்.. இறுதியில் ஒரு நாள் அவள் ராஜகுமாரன் அவளைத் தேடி வந்தான்.. வசந்தம் உனக்கு நான் என்று வாக்குறுதியும் தந்தான்... பட்டாம்பூச்சி தேவதை தன் சிறகை விரித்து குதூகலித்தாள்... அவனைக் கொண்டாடி கொண்டாடி திரிந்தாள்.. தான் தரப் போகும் காதலுக்கு பட்டாம் பூச்சி தேவதையிடம் பதிலுக்கு ஒன்றை ராஜகுமாரன் யாசித்தான்.. அவனுக்காக எதையும் தர சித்தம் என்று தேவதை சிறகை விரித்து சம்மதித்தாள்... ராஜகுமாரன் சற்றும் தாமதியாமல் கேட்டான்.. அழகான உன் வர்ண சிறகுகளை எனக்கு அர்ப்பணித்து விடு என்றான்.. தேவதை அதிர்ந்தாள்... தனக்கானவன் கேட்பது.. அவனைத் தேட வைத்த சிறகுகளை.. தேவதை மௌனமானாள்.. ராஜா குமாரன் உனக்கான நீல வானம் நான்.. எனக்குள்ளே நீ பத்திரமாய் இருப்பாய் என்றான்.. சிறகுகள் இல்லாதவளுக்கு நீல வானம் எதற்கு.. சிறகு இல்லாதவளுக்கு பெயர் கூட மாற போய்விடுமே..புழு என்று விளிப்பார்களே.. தேவதை சலனம் கலைந்தது.. கண்ணீருடன் தன் சிறகுகளை பிய்த்து ராஜகுமாரனிடம் தந்தாள்.. ஏனோ சிறகுகள் இல்லாத தேவதையை அவனுக்குக் பார்க்க தாளவில்லை.. சிறகுகளை திரும்ப பெற்றுக்கொள் என்றான்.. அவனே அதை தேவதையின் மீது ஓட்ட வைத்தான் ...ஓட்ட மறுத்தன சிறகுகள்..உடம்பில் வழியும் குருதியோடு நடந்து அறியாத தேவதை மண்ணில் தன் கால்களை ஊன்றி ஒரு பயணத்தை தொடர்ந்தாள்.. ராஜ குமாரனும் இல்லை ... அவள் சிறகுகளும் இல்லை...