(கொல்கத்தா தொழிற்சங்கக் கூட்டம் நடந்துகொண்டிருந்த அதே மாலை. தமிழகத்தில்.)
"தாரா!! தாரா, லேட் ஆச்சுடா.. எங்க இருக்க நீ?"
அவசரமாக அழைத்துக்கொண்டிருந்தார் தேவி. கையில் கோயிலுக்கான பூஜை சாமான்கள் கொண்ட பையோடு வாசலில் பொறுமையின்றி நின்றவர், வீட்டினுள் திரும்பி மீண்டும் உரக்க அழைத்தார்.
நான்கைந்து முறை அழைத்தும் பதில் வராமல் போகவே, அவரே காலணிகளைக் கழற்றிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தார். பாதி திறந்திருந்த மகளின் அறைக்கதவுக்குப் பின்னால் அவள் உறைந்து நிற்பது தெரிய, அவளை நோக்கி ஓரடி எடுத்து வைத்தவரை நிற்கச்சொல்லி அலறினாள் அவள்.
"வந்துடாதீங்கம்மா!!"
அவர் திடுக்கிட்டுப் பின்வாங்கிவிட்டு, கேள்வியாக அவளை ஏறிட்டார்.
"தாரா!? என்னம்மா ஆச்சு?"கிட்டத்தட்ட அழுதுவிடும் நிலையில் முகத்தைக் கசக்கி, "கதவுக்கிட்ட ஒரு பல்லி.." என்றாள் நடுங்கும் குரலில்.
பெருமூச்செரிய, "அடச்சே.. அவ்ளோதானா!? நான்கூட என்னவோன்னு பயந்திட்டேன்" என்றார் அவர்.
தாரா பயம்கொண்டு இன்னும் சிணுங்கினாள்.
"ம்மா.. இதை எப்படியாச்சும் போக வையுங்க.. பாக்கவே பயமா இருக்கு. வாலை வேற ஆட்டுது.. ஷூ... ஷூ.."
தேவி தலையடித்துக்கொள்ளாத குறையாக நிற்க, தாராவின் சத்தங்கள் கேட்டுத் தன்னறையிலிருந்து எட்டிப்பார்த்தான் தனுஷ், தாராவின் அன்பு(??) தம்பி. ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் அவனுக்கு இருக்கும் தைரியம் கூட, கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் தாராவிற்கு இல்லைதான். அதை அவனும் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் சுட்டிக்காட்டத் தவறுவதே இல்லை.
இப்பொழுதும், "முறத்தால புலியை வெரட்டுனாங்க அந்தக் காலத்துல.. இவ ஒரு பல்லிக்கு எல்லாம் இப்படி பயந்து நடுங்கறா! பயந்தாங்கொள்ளி! இவளை எங்கக்கான்னு சொல்லிக்கறதுக்கே வெக்கமா இருக்கு" என்றபடி அவளது அறை வாசலுக்கு வந்து நின்றான் அவன்.