அவன் சென்றதும் மாதவன் தன் அன்னையிடம், "இருந்தாலும் அம்மா.. தனியா பொண்ணுப் பார்க்கப் போறதெல்லாம்.." என இழுக்க, உஷாவும் ஆமோதிப்பாக உம்கொட்டினார். பர்வதமோ, "பொண்ணை சம்பிரதாயமா பார்த்தா மட்டும்? உடனே கல்யாணம் நடந்துடுமா? சராசரிப் பையனையா பெத்து வச்சிருக்கீங்க ரெண்டு பேரும்? Oversmart, overachiever, overthinker. சாதாரண ரூல்ஸ் எல்லாம் அவனுக்குப் பொருந்தாதே! இப்படியாச்சும் எதாவது நல்லது நடக்கட்டும்னு விடுவீங்களா.." என்று அவர்களை அடக்கினார்.மாதவனும் உஷாவும் ஒருவரையொருவர் சங்கடமாகப் பார்த்துக்கொண்டனர். ஆனாலும் பர்வதத்தின் பேச்சிற்கு மறுபேச்சுப் பேசவில்லை இருவரும்.
காலை ஆதித் குளித்துத் தயாராகி உணவுக்கூடத்திற்கு வந்தபோது, மூன்று காக்கிக் கவர்களை நீட்டினார் பர்வதம்.
"ஆதித், நீ கேட்டமாதிரியே மூணு பொண்ணுங்களை செலக்ட் பண்ணியிருக்கோம். ஃபோட்டோவும் அட்ரஸும் இதுல இருக்கு."
கவர்களைக் கையில் வாங்காமல், "அட்ரஸை மட்டும் டெக்ஸ்ட் பண்ணுங்க போதும், நான் பாத்துட்டு வந்துடறேன்" என்று வெறுமையாக சொல்லிவிட்டு அவன் எழுந்துசெல்ல முயல, பர்வதம் அவனைக் கைப்பிடித்துத் தடுத்து நிறுத்தினார்.
"ஃபோட்டோவைக் கூட பார்க்க வேணாமா? அந்த அளவுக்குக்கூட உனக்கு இதுல அக்கறையில்லையா ஆதித்?"
பாட்டியின் குரல் கவலைதோய்ந்து ஒலிக்க, ஆதித் உடனே முகத்தை மாற்றிக்கொண்டு புன்னகைத்தான்.
"ஒரு பொண்ணோட கேரக்டரை ஃபோட்டோவைப் பார்த்து முடிவு பண்றதுல எனக்கு உடன்பாடு இல்ல பாட்டி."
காரில் அவன் கிளம்ப, பர்வதம் அவன் மனதை அறியாமல் பெருமிதமாய் புன்னகைத்தார்.
முதல் வீடு மிகப் பிரமாண்டமாக இருந்தது. ரைஸ் மில் ஓனர் வீடு அது. பட்டுப் புடவையிலும் தங்க நகைகளிலும் ஜெகஜோதியாக மின்னினாள் பெண். அதற்கு நேர்மாறாய் சவரம் செய்யாத இருநாள் தாடியும், கலைந்த கேசமும், கசங்கிய சட்டையுமாய் இருந்தான் ஆதித். ஆனால் பெண்வீட்டார் அவற்றையெல்லாம் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. மூச்சுவிடாமல் பர்வதம்மாளின் பெருமையைப் பேசினார் பெண்ணின் தந்தை. வழக்கமாக உபசரிப்புகள் முடிந்தபின்னர், "பொண்ணுகிட்ட எதாவது தனியா பேசணும்னா பேசுங்க மாப்பிள்ளை!" என்றார் அவர்.