அதுதான் அவளது முதல் விமானப் பயணம் என்பதை அறிந்ததும் ஆதித் திகைத்தான். ஏற்கனவே ஒரு சின்னப் பெண்ணை அவளது குடும்பத்திடமிருந்து பிரிக்கிறோமென்ற வருத்தம் இருக்க, இப்போது அவளின் பாதுகாப்பு கூட தனது பொறுப்பு தான் என்ற எண்ணம் அவனைக் கலவரப்படுத்தியது.
கையை உயர்த்தித் தலைக்கு மேல் இருந்த பொத்தானை அவன் அழுத்த, விளக்கைத் தேய்த்தால் வரும் ஜீனியைப் போல, சிவப்புச் சீருடைப் பணிப்பெண் வந்தாள் அவனிடம்.
"யெஸ் ஸார்?"
"We need a sickness kit. She's a first timer."
அப்பெண் தாராவின் சீட்டின் பக்கவாட்டிலிருந்து ஒரு பையை எடுத்தாள். மஞ்சள் நிறத்தில் ஸ்ட்ரெஸ் பால் எனப்படும் பந்தும், காக்கி நிறத்தில் காகிதக் கவர்களும், மேலும் சில தைலங்களும் இருந்தன அதில்.
"குமட்டல் எதாவது வந்தா, இந்த ப்ரவுன் பேகை யூஸ் பண்ணனும். குமட்டல் போக தைலத்தை மோந்து பாக்கலாம். பயம் போறதுக்கு இந்த பாலை அழுத்தலாம். நல்லா இழுத்து மூச்சு விடுங்க.. பயம் போயிடும்."
ஆங்கிலத்தில் பொறுமையாக விளக்கிவிட்டு அப்பெண் நகர, ஆதித்தும் அவளைக் கரிசனமாகப் பார்த்துக்கொண்டிருக்க, தாரா கண்களை இறுக்க மூடிக்கொண்டாள். ஆதித் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
விமானம் வேகமெடுத்து, வானத்தில் சாய்வாக ஏற, சீட்டில் தொப்பெனப் பின்னால் சாய்ந்தாள் தாரா. ஆதித்தின் கையை விடுத்து பந்தை அழுத்தத் தொடங்கினாள். மூச்சுவிட மறந்து மருண்ட பார்வையுடன் ஜன்னல் வழியே ஓரக்கண்ணால் பார்த்தாள். கொஞ்ச கொஞ்சமாகக் கோயமுத்தூர் மொத்தமும் சின்னப் புள்ளியாகி மறைய, கண்ணுக்கு எதிரில் மேகங்கள் பஞ்சுப் பொதிகளாகத் தெரிய, விமானமும் ஆடாமல் அசங்காமல் செல்ல, பயம் மறைந்து பரவசமானாள் அவள்.
"வாவ்... மேகமெல்லாம் நமக்குப் பக்கத்துலயே இருக்கு! எவ்வளவு அழகா இருக்குல்ல? கீழ பாத்தா கோயமுத்தூரே தெரியல.. எவ்ளோ ஸ்பீடுல போகுது இந்தப் ப்ளேன்? அதோ தெரியுதே, அது மருதமலையா, இல்ல குன்னூரா?"
