யாழிசையின் சின்னஞ் சிறு அதிர்வுகளில் மராம்பு மலர்கள் மெள்ள அசைந்து கொடுத்தன. பெரும்பொழுதுகளின் சுழல் காற்றுப் புழுதியில் இருப்பை மர நிழலில் நின்றிருந்தாள் ஒருத்தி. தூர தேசம் சென்ற தலைவனை எண்ணி எண்ணி வள்ளுவனின் பசப்புறுபருவரலால் ஆட்கொண்ட எத்தனையோ தலைவிகளில் இவளும் ஒருத்தி.
பிரிவுத்துயர் காரணமாக தலைவிக்கு ஏற்படும் இந்த உளவியல் சார்ந்த நோய்க்கு இன்ன மருந்து என்று இன்று வரை யாரும் கண்டறியவில்லை. இப்போது இந்த பசலை நோயால் வாடும் தலைவியை எங்கனம் கொண்டு சரி செய்வது. ஹைபோக்ரோமிக் அனிமியா என்று இன்றைய மேதாவிகள் சொல்லி திரிவது உண்டு. ஆனால் முகப் பொலிவும் மேனி அழகும் மட்டும் பறித்துக் கொள்ளும் இந்த நோய் எப்படி ஒருத்தியை தொற்றிக் கொண்டது என்று கேட்டால் மவுனத்தை தவிர வேறொன்றையும் தரமுடியாது. பசுவின் மடியில் இருந்து பாலை உறிஞ்சும் நிலத்தை போல இந்தப்
பொல்லாத பசலை நோய் அவளை தின்று மிச்சத்தை இருப்பை மரத்தின் நிழலில் கிடத்தி இருந்தது.வைரமுத்துவின் திருமொழியினால் இதை சொல்ல வேண்டும் என்றால் தலைவன் அணிவித்த மோதிரம் வளையலாக துரும்பென இளைத்தவள் இப்போது அந்த மோதிரம் ஒட்டியாணமாய் ஆகும் மட்டும் ஏக்கத்துடன் தலைவனை எண்ணி காத்திருக்கிறாள். நாச்சியாரையே விஞ்சிய உறுப்புநலனழிதலினை அவள் எந்த மணிமுடி மைந்தனிடம் ஒப்புவிக்க முடியும்.
அவள் இடையும் தோளும் சிறுக்கும் மட்டும் ஏக்கம் கொண்டவள் அல்ல கச்சுக்குள் அடித்து துடிக்கும் இதயக்கூட்டில் வாழும் செங்கிளியின் ஏக்கத்துக்கும் தான்.தலைவனோ தன் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த தன் இடுப்பில் சொருகி இருந்த கத்தியை எடுத்து ஆகாயத்தையும் நிலத்தையும் மேலும்கிழுமாய் பார்த்துக் கொண்டிருந்தான். வழியில் வந்த வக்கத்த ஒருவனை கத்தி முனையில் அவன் உடைமைகளை அபகரித்தான்.
பசியின் விளிம்பில் வழிபறி தான் பற்றுதல் கயிறு அதை பிடித்து மேடேற வேண்டும். பசி ஒருபக்கம் உயிர் எடுக்க; காத்திருப்பு மறுமுனையில் உயிர் கொல்ல பார்க்கிறது.