தாரா உணவருந்திக் கொண்டிருக்கையில் வாசலில் கார் நிற்கும் சத்தம் கேட்டது. சிலகணங்களில் ஆதித் காலணிகளைக் கழற்றிவிட்டு வீட்டுக்குள் வர, அவனைக் கண்டதும் தாரா சன்னமாகப் புன்னகைக்க, அவன் தலையை அசைத்தான் அங்கீகரிக்க.
"ராஜீவ் வரலையா?"
அவள் ஆவலோடு வினவ, ஆதித் இல்லையெனத் தலையாட்டினான்.அவனை சாப்பிட அழைக்க அவள் வாய்திறக்குமுன் ஆதித் அவளிடம் ஏதோ பேசவேண்டுமென சொல்ல, தாரா வியப்பானாள்.
"அட! சேம் பின்ச்! நானும் உங்கள்ட்ட பேசணும்னு நினைச்சேன்.. நான் இன்னிக்கு கல்கத்தாவை சுத்திப் பாக்க வெளிய போனனா--"
"ஒரு பங்ஷன் இருக்கு, இன்னிக்கு ஈவ்னிங்" சட்டென இடைவெட்டிக் கூறியவாறே வந்து அவளெதிரில் அமர்ந்தவன், தட்டில் தனக்காக உணவை எடுத்துக்கொண்டான்.
"ஒரு பங்ஷன்.. கம்பெனி சார்பா ஒரு பார்ட்டி இருக்கு. நமக்காக, ஐ மீன், நம்ம கல்யாணம் தமிழ்நாட்டுல நடந்ததால, கம்பெனி ஆளுங்களுக்கு இங்க ஒரு ரிசெப்ஷன் பார்ட்டி.."
தட்டில் கவனம் பதித்தவண்ணம் பேசினான் ஆதித்.எதற்காக அதைத் தன்னிடம் சொல்கிறான் என்று உண்மையாகவே தாராவிற்குப் புரியாத அளவிற்கு ஒட்டுதல் இல்லாமல்தான் சொன்னான் அவன்.
"கம்பெனியோட முக்கியமான பார்ட்னர்ஸ் எல்லாம் வர்றாங்க. இன்வெஸ்டர்ஸ், விஐபிஸ்..."
தாரா ஆனாலும் கவனத்தோடு கேட்டாள்.
"ந..நான்.. நானும் வரணுமா?"ஆதித் சிரமத்துடன் மிடறுவிழுங்கினான்.
"ஹ்ம்ம். இன்னிக்கு சாயங்காலம் ஏழு மணிக்கு. எனக்கு... நம்ம... ஏற்பாடு மறக்கல. ஆனா, இது கொஞ்சம் முக்கியமான பங்ஷன், அதனால தான் கூப்பிடறேன். Hopefully, this will be the first and last time. மறுபடி உன்னை கூப்பிட மாட்டேன்."
அவள் இதுபோல் தன்னுடன் வர விரும்பமாட்டாள் என நினைத்து ஆதித் அவளை அழைக்கத் தயங்க, தாராவோ அவனுக்குத் தன்னை அழைத்துச்செல்லத் தயக்கமென மட்டும்தான் உணர்ந்தாள். ஏனோ வருத்தமாக இருந்தது. முகத்தில் களைப்புடன், "பரவால்ல, வர்றேன்" என்றாள் அவளும்.