குறிஞ்சி மலையில் இருந்த அந்த குகையைப் பற்றி அனுபமா ஆராய்ந்து கொண்டிருந்தாள். உயிரைக் குடிக்கும் அந்த மரணக் குகையைப் பற்றி அறிவதில் அனுவிற்கு அப்படி என்ன ஈர்ப்பு. அவளது வேலையே அதுதான்! ஆம். அனுபமா தொல்லியல் துறையில் பணிபுரிகிறாள். இந்த குகையைப் பற்றிய ஆய்வில் தான் தற்போது ஈடுபட்டிருக்கிறாள். அனு பணிபுரிவது ஓர் தனியார் நிறுவனம். அந்த நிறுவனத்தின் பார்வை தற்போது குறிஞ்சி மலையில் உள்ள புதையலின் பக்கம் திரும்பி உள்ளது. அவர்கள் சேகரித்த தகவலின்படி குறிஞ்சி மலையில் ஓர் குகை உள்ளதாகவும் அந்த குகைக்கு சென்றவர்கள் யாரும் திரும்பியதில்லை எனவும் அறிந்திருந்தார்கள். ஆகையால் அங்கு தான் புதையல் இருக்க வேண்டும் என்று எண்ணி ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
அக்குகையைப் பற்றி மேலும் அறிந்து புதையலை அடைவதே அந்நிறுவனத்தின் குறிக்கோள். பலரும் அப்புதயலை அடைய முயன்று தோற்றதாகவும் இறந்ததாகவும் வதந்தி பரவியதால் அப்பகுதிக்கு பொதுமக்கள் செல்வதில்லை. தற்போது அனுபமா மட்டுமே தனியாக அங்கு செல்கிறாள். பொதுவாக ஏதாவது புது ஆய்வு என்றால் அனு சென்று அந்த இடத்தைப் பற்றி அறிந்து வருவது தான் வழக்கம் ஆகையால் தற்போதும் அவள் தனியாகவே செல்கிறாள்.
அனுபமா ........
வீட்டிற்கு ஒரே மகள். வேதநாயகம் மற்றும் மஞ்சுளாவின் செல்ல மகள். எவரையும் எதிர்பாராது எவரையும் சார்ந்திராது வாழ விரும்புபவள். தனக்கென தன் வாழ்வை அமைத்து வாழ்பவள். அதற்காக தன் விருப்பத்திற்கு எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பவள் இல்லை அனுபமா. அவளைப் பற்றி யாரும் ஒரு குறை கூற முடியாது. ஒழுங்கீனம் என்றோ மக்கு என்றோ சோம்பேறி என்றோ சொல்லிவிட முடியாது. அதையும் தாண்டி குறை கூறவேண்டும் என்று நினைப்பவர்கள் கூட திமிர் பிடித்தவள், பிடிவதக்காரி என்று தான் கூறுவார்கள். நம் ஊரில் பொதுவாக அனைவரையும் அப்படி தானே சொல்கிறார்கள்.
எப்போதும் பம்பரம் போல் சுழல்பவள். அவள் பெற்றோருக்கு தான் எங்கு இருக்கிறேன் எங்கு செல்கிறேன் என்று சொல்லிவிடுவது அவள் வழக்கம் தான். ஆனால் அவர்கள் நினைத்தாலும் கூட அவளை எளிதில் காண முடியாது. தொல்லியல் துறை வேலை என்றால் ஓரளவு அப்படி தானே. தலைமை ஆராய்ச்சியாளருக்குக் கீழ் உதவி ஆராய்ச்சியாளராக பணிபுரிவது அதுவும் இவ்வளவு சிறுவயதில் அத்தகைய பதவியில் பணிபுரிவது என்றால் சுலபமா? ஆனால் எத்துணை பொறுப்பான பதவியில் இருந்தாலும் அனுபமா ஒரு பட்டாம்பூச்சி தான். சிரிக்க சிரிக்க பேசுவதிலும் பிறரது மனதை எளிதில் கவர்வதிலும் அவள் கெட்டிக்காரி தான்.