சூரியன் தன் கதிர்களால் பூமியை மெதுவாக தழுவத் தொடங்கிய நேரம். அழகிய பொன்னை உருக்கி வானம் முழுவதும் பூசி வைத்தாற்போல இருந்தது. பூந்தோட்டத்தின் மத்தியில் இருந்த அந்த மாளிகை தங்கமாக ஜொலித்தது. தீப்பந்தங்கள் அணைக்கப்பட்டு இருள் சூழ்ந்த அறையில் சூரிய ஒளி பரவிய தருணம், அனுபமா தன் துயில் நீக்கி கண் விழித்தாள்.
கதிரவனின் பொற்கதிர்கள் வேலைப்பாடமைந்த அந்த அறையை சொர்க்கம் போல மாற்றியிருந்ததைக் கண்டு ரசித்தாள். அனுபமா அங்கு இருப்பதை சிறிதும் விரும்பவில்லை தான். ஆனால் அந்த அழகு அவள் மனத்தைக் கவர்ந்தது.
மாளிகையின் அழகை கண்டு ரசித்தாள் அனுபமா. அறையை விட்டு வெளியே வந்தாள். இங்கு வந்ததிலிருந்து தற்போது தான் அந்த அறையை விட்டு வெளியே வருகிறாள். இனி வரப்போவது என்ன, இந்த இடம் அவளுக்குத் தரப்போவது என்ன என்று எந்த யோசனையும் எந்த கவலையும் அவளிடத்தில் இல்லை. அந்த நிமிடம் அந்த நொடியை ரசித்து பொழுதைக் கழித்தாள். இனி என்ன நடக்குமோ என்று நினைத்து கையில் இருக்கும் காலத்தை அவள் வீணடிக்க விரும்பவில்லை.
அனு இருந்ததது அந்த மாளிகையின் கிழக்கு மாடத்தில். அங்கு தான் அவளது அறை இருந்தது. அவள் அறையை விட்டு வெளியே வந்ததும் அவளது கண்களைக் கவர்ந்தது, எதிரே இருந்த ஊஞ்சல். வேலைப்பாடமைந்த சங்கிலியில் இணைக்கப்பட்டிருந்த மர ஊஞ்சல். அதனருகே சென்றாள். அங்கு தென்பட்ட கொள்ளை அழகில் மயங்கினாள். ஊஞ்சலில் அமர்ந்தால் தோட்டம் கண்களுக்கு தென்படும் வகையில் மாளிகையை அமைத்திருந்தது தான் காரணம். புலர்ந்த காலைப் பொழுதில் கதிரவன் வரவை ஏற்று பறவைகள் ஒலிஎழுப்ப அழகில் மயங்கிய அவள் மனம் மேலும் பூரித்தது.
அப்போது நேற்றிரவு அங்கிருந்த பெண்கள் இருவரும் அனுவிடம் வந்தனர். அவர்களுள் ஒருத்தி,
"தேவி! எழுந்து விட்டீர்களா? தற்போது எவ்வாறு உணர்கிறீர்கள்?" என்றாள்.
"ம்ம்ம்..... பரவால்ல. அதுசரி உங்க பேர் என்ன?" என்று வினவினாள் அனுபமா.