அவள் என்ன சொல்கிறாளெனப் புரியாமல் நின்றவனுக்கு, இருகணங்கள் கழித்தே விளங்கியது.
மானசீகமாகத் தலையிலடித்துக்கொண்டு, அவளருகே சென்றான் அவன்.
"எ.. என்கிட்ட.. உன் நம்பர் இல்லை.."
இயல்புக்கு மாறாகத் தயங்கித்தயங்கி அவன் சொல்ல, திகைத்தவள் திரும்பி சண்டையிட முயல்வதற்குள் குடும்பத்தினரைக் கண்காட்டினான் அவன்.
"என் ஃபோன் நம்பர் கூட இல்லையா?? வந்த முதல் நாளே ஏதேதோ கார்டை தந்தீங்களே, அப்பவே என் நம்பரை வாங்கிட்டிருக்க வேண்டிதுதான?"
கிசுகிசுக் குரலிலும் கோபம் தொனிக்கக் கேட்டாள் அவள்."வந்த முதல் நாள் என் நம்பரைத் தந்தேனே, எப்போவாச்சும் அதை நீ யூஸ் பண்ணியா?" என எதிர்க்கேள்வி கேட்டான் அவன்.
புரிந்துகொண்டவளாக அமைதியானாள் அவள்.
'இத்தனை நாளில் அவனை ஒருமுறை கூட அவனை கைபேசியில் அழைக்கும் தேவை வந்ததே இல்லையே! அழைத்திருந்தால் என் கைபேசி எண் அவனிடம் இருந்திருக்குமல்லவா? நிஜமாகவே இத்துணை அந்நியமாகவா நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்!?'அவசரமாகத் தன் கைபேசியை எடுத்து அவனது நம்பரை அழைக்க, ரிங் போவதற்குள் துண்டித்துவிட்டு, "அடுத்தமுறை பாட்டி திடுதிப்புனு வந்து இறங்கினா, மொதல்ல உனக்குக் கூப்பிடறேன்" என்றான் அவன், மறைக்காத அலுப்புடன்.
அவள் பதில்மொழி உரைப்பதற்குள், "ஆதித்!! இன்னும் டைனிங் ஹால்ல என்ன பண்றீங்க?" எனப் பாட்டியின் குரல் வர, தோற்றுப்போன பார்வையுடன் இருவரும் தொய்வாக நடந்துசென்று கூடத்தில் நின்றனர்.
அவரருகில் அமருமாறு தாராவைப் பாட்டி அழைத்துக்கொள்ள, ஆதித் சென்று தந்தையின் அருகே அமர்ந்தான்.
"டாட், ஸியாட்டில்ல இருந்து எப்ப வந்தீங்க? எனி நியூஸ்?"
"நத்திங் மச். உங்க மம்மிக்குத் தெரிஞ்சவங்க ஒருத்தங்க தவறிட்டாங்க, அதுக்காக திருப்பூர் வரை போகவேண்டி இருந்தது. எனக்கும் வெகேஷன் டேஸ் கொஞ்சம் மீதியிருந்தது. அதான், ஒரு வாரம் லீவு போட்டுட்டு வந்துட்டேன்!"